துளி தீ நீயாவாய் 25 (7)

ப்ரவிக்கு கனி மீது வலுவாக சந்தேகம் எழும்ப இந்த நிகழ்வுதான் மிக முக்கிய காரணமாக அமைந்தது. வேணி அங்கு வருகிறாள் என அறிந்து, எதிர்பார்த்து, அதுவும் மறைந்து காத்திருக்கிறான் எனில் என்ன அர்த்தம்? கடிதம் எழுதியதும், வேணியை அங்கு வரவைத்ததும் அவனாகவே இருக்க வேண்டும். அதுவும் ப்ரவியை அங்கு வரவைக்க பயன்பட்ட ப்ரேஸ்லெட் ப்ரவி வீட்டில் திருடனால் திருடப்பட்டது.

பால்கனி பற்றி அவன் பெண் கேட்டு வந்தபோதே சற்று விசாரிக்கச் சொல்லி இருந்த ப்ரவி இப்போது அக்கு வேறு ஆணி வேறாய் பால்கனி பற்றி அவனது ஊரில் ஆராய்ந்தான்.

“பால்கனி அப்பாவுக்கு இதுதான் பூர்வீகம். அவருக்கு பதினஞ்சி பதினாறு வயசிருக்கும் போது வீட்ல கோவிச்சுகிட்டு ஓடி போய்ட்டாருன்னு சொல்வாக.

இதுல இரண்டு மூனு வருஷம் முன்னால அப்பாவும் பையனுமா வெறும் கையாத்தான் வந்து நின்னாக. சின்னதா பரம்பர இடம் தவிர வேற ஒன்னும் கிடையாது அவன் அப்பாகாரருக்கு. அதையே அவரோட அண்ணந் தம்பி மக்க முக்கி முனகிதான் விட்டுக் கொடுத்தாக.

இந்த பால்கனி பையனும் எதுவும் படிக்கலைனுதான் சொன்னாக, அவனும் அதுக்கேத்த போல விவசாயம்னு மண்லதான் போய் நின்னான், காய்கறி கமிஷன் கடைன்னு சின்னதாதான் ஆரம்பிச்ச போல இருந்துச்சு, ஒன்னுக்கு நாலா பெருக்குவாகன்னு சொல்வாக, பையன் சூதனமா ஒன்னுக்கு எட்டா பதினாற பெருக்கி, இப்ப அத்தன லாரி ஓடுது காயேத்திகிட்டு கேராளாவுக்கு. கப்பல்ல கூட மிளகா வத்தல் வெங்காயம்னு அனுப்புறான்னு சொல்லிகிறாக.

செங்க சூளைனாங்க, க்ரானைட் குவாரின்னாங்க, எங்கெல்லாமோ வீடு கட்டி விக்கான்னாங்க, திருநெல்வேலில Vன்னு ஒரு பெரிய ஜவுளிகடை இப்ப வந்திருக்கே, அதுவே இவனோடதுன்னுதான் ஊர்ல பேச்சு.

ஆனா பால்கனியா இதுபத்தில்லாம் ஒரு வார்த்தை பேசினது கிடையாது. எப்பவும் வேஷ்டி சட்டைன்னு ஒரு சின்ன பந்தா கூட இல்லாம இருக்காப்லதான் தெரியும். ஆனா எல்லோர்ட்டயும் பேசி பழகிற போல இருந்தாலும் அவன்ட்ட சமதையா நின்னு யாரும் எதுவும் கேள்வி கேட்டுட முடியாது. என்ன தொழிலெல்லாம் செய்றானோ, ஆனா ரொம்ப பெருசா வளந்துட்டான்தான் போல.

வீட என்னமா எடுத்து கட்டிருக்கான். சுத்தி சுத்தி நிலம் நீச்சுன்னு எக்கசக்கமா வாங்கிப் போட்ருகாப்லல. அதை வச்சுதான் பெருசாகிட்டான்னு நாங்க நினச்சுக்கிறது. மா தென்ன வாழ முந்திரின்னு அத்தன விவசாயம் நடக்கு. இவனே உள்ள போய் வேலையாள மேச்சுகிட்டு நிப்பான்.

பக்கத்து இடத்துக்காரங்கள அதை இதை சொல்லி இடத்தை வித்துட்டு போக வச்சுடுறதா சொல்லிக்கிறாங்க. மத்தபடி ஊர்ல யார்ட்டயும் எதுக்கும் அவன் வம்புக்கு போய் நின்னது போல இல்ல.  வேலை தவிர வேற எந்த பழக்கமும் கிடையாது. அதுக்குள்ளே விழுந்து கிடக்கிற ரகம்.

அவன் துட்டப் பார்த்துட்டு பெரிய பெரிய இடத்துல இருந்தெல்லாம் பெண்ணு கொடுக்க நான் நீன்னு வரத்தான் செய்றாக, என்னமோ அதைக் கூட அவன் கண்டுகிடுற போல இல்ல.

வயசி முப்பத்தி சொச்சம்னாக, வந்த வருஷம் மாணிக்கம் போய் சேர்ந்துட்டாரு, அவர் பிறந்த நாள், நினைவு நாள பெருசா செய்றத தவிர எதையும் இவன் கொண்டாடிக்கிறதும் இல்ல. ஒருவேள ஏற்கனவே கல்யாணம் ஆகி அந்த பொண்ணுக்கு எதுவும் ஆகிட்டோன்னு கூட இங்கிட்டு பேச்சிருக்கு.

யார் விருந்து விஷேஷம்னு கூப்ட்டாலும் வந்து போவாப்ல, ஆனா கடனு காசுன்னு ஒரு பைசா வாங்கிட முடியாது. உறவுக்காரன் உதவி செய்ன்னு யார் போய் நின்னாலும் ஒரு வேள சாப்பட தவிர ஓசிக்கு அவன்ட்ட இருந்து ஒரு பைசா பெயராது.

ஆனா அரசியல்வாதி போலீஸ்காரனுக்கு பொட்டி பொட்டியா கொடுக்கான்னு அவன்ட்ட வேலைக்கு நிக்க விசயனே சொல்வாப்ல. பின்ன இத்தன தொழில் சும்மாவா நடக்கும்? சின்ன மீன போட்டு பெரிய மீன பிடிச்சிகிறதுதான் போல!”

.பால்கனி பற்றி அவனது ஊரில் கிடைத்த எல்லா தகவல்களுமே இந்த பேச்சுக்கு ஒத்த வகையிலேயே இருந்தது. இதில் ப்ரவியின் கவனம் ஈர்த்த முதல் விஷயம் பால்கனியின் தகப்பனார் பெயர் மாணிக்கம் என்பதுதான். ஊர்காரர்கள் சொல்லும் அதே காலகட்டத்தில்தான் இவனும் ஒரு மாணிக்கத்தை கொத்தடிமை முறையில் இருந்து விடுவித்து அனுப்பி இருந்தான். அவரின் ஞாபகம் வந்தது ப்ரவிக்கு.

அவருக்கு மகன் இருந்ததும் இங்கு பால்கனி கதையோடு ஒத்துப் போகிறது.

ஆனால் அபிஜித் போய் விடுவித்துக் கூட்டி வந்தவர்களில் தன் மகன் இல்லை என மாணிக்கம் கதறி அழுததும், அன்றே மீட்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த மையத்திலிருந்து அவர் காணாமல் போனதும் இங்கு குழப்பத்தை மட்டுமே தருகிறது.

ஒருவேளை அவரே அவரது மகனை மீட்டுக் கொண்டு சொந்த ஊருக்கு ஓடி வந்துவிட்டாரோ! மீட்பு மையத்திற்கு வந்த நேரத்திலிருந்து தன் மகனைக் காணோம் என அழுது கொண்டு கிடந்தவரிடம் அழுத்திப் பிடித்து அவரைப் பற்றிய தகவல்களை கேட்டுப் பதிய யாருக்கும் மனமில்லை. அன்றே அவர் ஓடியும் போய்விட அவரைப் பற்றிய ஆழமான தகவல்கள் எதுவும் இவர்களிடம் இல்லாமல் போய்விட்டது.

யோசிக்கையில் அவரின் மகன் என்றால் அந்த மகன் இவனிடம் கொஞ்சம் அபிமானம் மற்றும் மரியாதை காட்டுவது இயல்புதானே எனப்படுகிறது ப்ரவிக்கு.

தல, ப்ரோ, அண்ணா என அவன் அவ்வப்போது இவனை தொடர்பு கொண்டு பேசுவதற்கு காரணம் எதோ ஒரு அபிமானம்தானே!

ஆனால் வேணிக்கு இவனைப் பற்றி எழுதி இருக்கும் கடிதத்தை எந்த மரியாதை, அபிமானத்தில் சேர்ப்பது?!

அடுத்த பக்கம்