துளி தீ நீயாவாய் 25 (5)

இதில் ப்ரவிக்கு ரெண்டு விஷயம் உறுதியானது. முதலாவது இவன் சாருமதியை சந்திப்பதை வேணியை பார்க்க வைக்க திருடன் திட்டமிடுகிறான் என்பது. அப்படின்னா வேணி அந்த லெட்டர் நிஜம்னு நம்பிடுவாளே! ஆக கடிதம் வேணிக்கு வந்ததுதான்.

இரண்டாவது விஷயம் இவன் வீட்டு வாசலில் இருக்கும் காவல்துறை ஆள் அந்த திருடனுக்கும் வேலை செய்கிறார். அவர்ட்ட சொன்ன ஆட்டோ தகவல் திருடனுக்கு போகப் போய்தானே வேணி வெளிய கிளம்புறது தெரிஞ்சு அவன் சாருமதின்ற காயை நகர்த்துகிறான்.

ஆக ஆட்டோ ட்ரைவரிடம் “எதாவது சின்னதா வித்யாசமா இருந்தா கூட எனக்கு கால் செய்ங்க” என்ற கட்டளையோடு வேணியை தனியே அனுப்பிவிட்டு அடுத்து இவன் உரிய இடைவெளியோடு சாருமதியைப் பார்க்கப் போகலாம் என முடிவு செய்தான். அதாவது வேணிக்கு அப்போதைக்கு ஆட்டோ ட்ரைவர் மட்டுமே பாதுகாப்பு.

இவன் துறை ஆட்களைத்தான் நம்ப முடியவில்லையே! இவன் வீட்டு வாசலில் காவலுக்கு வைத்திருப்பவரெல்லாம் காசு வாங்கிக் கொண்டுதான் காட்டிக் கொடுப்பார் என்று இல்லை. முந்திய தினம் அந்த பால்கனியை இவன் வீட்டுக்குள் அனுமதித்திருக்கிறாரே எதுவுமே கேட்காமல், எந்த தடையும் சொல்லாமல்.

உள்ளூரில் அறிமுகமுள்ள பணக்கார புள்ளி என்றால் இவரெல்லாம் இப்படித்தான் நடந்து கொள்வார். பெரிய புள்ளியாய் இல்லை எனினும் தெரிந்த நபர் என்றாலே சாதாரண பேச்சிலேயே தனக்கு தெரிந்த சகலத்தையும் சொல்லிவிடவும் செய்வார்தான்.

இதில் இப்படிபட்ட ஆட்களை வேணிக்கு துணைக்கு அனுப்பியும்தான் என்ன பயன்? திருடனுக்கு சாதகமான எதிர்மறை காரியங்கள் நடக்கத்தான் வாய்ப்பு அதிகம். அதற்கு வேணி தனியாய் போவதே உத்தமம்.

இவன் சாருமதி வீட்டுக்குள் போவதை வேணி பார்க்க வேண்டும் என நினைத்து அழைத்துச் செல்லும் திருடன் இவன் சாருமதியை சந்திக்கும் வரை எப்படியும் வேணியிடம் எந்த வம்பும் வைத்துக் கொள்ள மாட்டான்தானே, அப்போதுதான் இவன் அங்கு போய்விடுவானே, அடுத்து இவனே வேணிக்கு தேவையான பாதுகாப்பை கொடுத்துக் கொள்ளலாம் என்ற நினைவில் இவன் வேணி ஆட்டோவில் கிளம்ப வழி செய்துவிட்டு, சாருமதி வீட்டுக்கு புறப்படத் தயாரான போதுதான் இந்த ஆடு புலி ஆட்டத்தில் அவனே அறியாமல் வந்து சேர்ந்தான் மீரட்.

சென்னையில் இருக்கும் ப்ரவியின் ஒன்றுவிட்ட அத்தை மகள் கிருபாவின் கணவன் அவன். கிருபாவின் திருமணம் மூலம்தான் மீரட் இவனுக்கு அறிமுகம் என்றாலும் மனதளவில் ப்ரவி, கருணுக்கு மீரட் வெகு நெருக்கம்.

நாகர்கோயில் அருகே இருக்கும் கிருபாவின் பாட்டி வீட்டிற்கு ஏதோ வேலையாக வந்த மீரட் சென்னை திரும்பும் வழியில் நெல்லையை கடக்கும் போது, ஒரு குட்டி சர்ப்ரைஸ் விசிட்டாக, ப்ரவி வீட்டுக்குச் சென்றுவிட்டுப் போகலாமென நினைத்திருந்தவன், ப்ரவியின் வீட்டு முகவரிக்கு சென்று நின்றான் அந்நேரம்.

இவன் போய் சேரும் நேரம்தான், கிளம்பி இவனுக்கு முதுகுகாட்டிப் போய்க் கொண்டிருக்கிறது வேணி செல்லும் ஆட்டோ. வாசல் காவலரிடம் இவன் ப்ரவி பவியைக் கேட்க, “சார் ஆஃபீஸ்ல போய் பார்த்தாதான் சார் அங்க இருக்காரா, இல்ல வேலை விஷயமா வெளிய எங்கயும் போய்ருக்காரான்னு தெரியும், மேம் எங்கயோ சாரோட தம்பி கூட வெளிய போய்ருக்காங்க, அவங்கள பார்க்கத்தான் இந்த பாப்பாவும் போகுது, இப்போதைக்கு வீட்ல யாரும் இல்ல” என அவர் தகவல் கொடுக்க,

இவன் வேணியின் ஆட்டோவைப் பின் தொடர ஆரம்பித்துவிட்டான். ப்ரவி எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம் எனும்போது இவன் போய் பவி மற்றும் கருணைப் பார்ப்பதுதானே சரியாக இருக்கும் என்பதுதான் அப்போதைய இவனது எண்ணம்.

குண்டும் குழியுமாய் இருந்த அந்த ரோட்டில் க்ரவ்ண்ட் க்ளியரன்ஸ் எனப்படும் இவனது காரின் அடிப்பகுதிக்கும் தரைக்குமான இடைவெளி வெகு குறைவாக இருந்ததால், இவன் அந்த சாலையில் வெகு கவனம் எடுத்து மிக மெதுவாக சென்று கொண்டிருக்க,

அதனால் வேணி இருந்த ஆட்டோவுக்கும் இவனுக்குமான இடைவெளி வெகு அதிகமாகவே இருக்க, இதில் அந்த தெருவில் இருந்த ஒரு திருப்பத்தில் ஆட்டோ திரும்பிச் சென்றுவிட,  சாலை நிலைகாரணமாக வெகு மெதுவாகவே சென்று இவன் காரை அந்தத் திருப்பத்தில் திருப்ப முனைய, அப்போதுதான் கண்ணில் படுகிறது அந்தக் காட்சி.

தூரத்தில் ஆட்டோ தெருவில் நின்றிருந்தது. குழியும் சகதியுமாய் கிடந்த இடத்தில் ஆட்டோ சிக்கி இருக்க, வேணி இறங்கி ஆட்டோவுக்கு முன்னாக நின்றிருக்க, முன் புறமிருந்து ஆட்டோ ட்ரைவர் ஆட்டோவை அந்த சகதி குழியிலிருந்து வெளிவர இழுத்துக் கொண்டிருக்க,

ஆட்டோவின் பின் புறமிருந்து யாரோ ஒரு வழிப்போக்கன் ஆட்டோவை தள்ளி அவருக்கு உதவுவது போல் பாவ்லா காமித்துக்  கொண்டிருந்தவன், ஆம் பாவ்லாதான், ஏனெனில் ஆட்டோ ட்ரைவருக்கு சந்தேகம் வராதபடி பின்புறம் திறந்து வண்டியின் எரிபொருள் டாங்கிற்குள் ஒரு குழாயைப் போட்டு பெட்ரோலை உறிஞ்சி வெளியே கொட்டவிட்டுக் கொண்டிருந்தான் அந்த நபர்.

எப்படியும் ஆட்டோ ட்ரைவருக்கு இதன் வாசம் வராதா எனப் பார்த்தால் ஏற்கனவே அங்கு தரையில் பெட்ரோல் கொட்டப்பட்டு கிடப்பதற்கான அடையாளம் வேறு.

அதாவது ஆட்டோ இங்கு வரும் முன்பே கொஞ்சம் பெட்ரோல் தெருவில் கொட்டி வைத்திருந்து, இப்போது இப்படி ஆட்டோவில் இருந்து கொட்டும்போது, தெருவில் கிடக்கும் பெட்ரோலின் வாசம்தான் இது என ட்ரைவர் நினைத்து அசட்டையாய் இருந்துவிட வேண்டும் என திட்டமிட்டு, வண்டியின் எரிபொருளை காலி செய்து கொண்டிருக்கிறான் அவன். ஆனால் ஏன்?

இவன் பின்னால் வருகிறான் என எதிர்பார்க்காததால்தான் இதை செய்கிறான் எனப் புரிய இவன் வண்டியை திருப்பவில்லை. அப்படியே ரிவர்ஸ் எடுத்து ஆட்டோ மக்கள் யார் கண்ணிலும் படாத வண்ணம் கரை நிறுத்திவிட்டு ப்ரவியை மொபைலில் அழைத்து விஷயத்தைச் சொன்னான்.

அடுத்த பக்கம்