துளி தீ நீயாவாய் 25 (4)

ப்ரவிக்கு இதில்தான் முதல் பிடி கிடைத்தது இந்த வழக்கில். அந்த குடோன் திருடன் நான் நெல்லை தூத்துக்குடியை தளமாகக் கொண்டவன் இல்லை, இப்போது  பெங்களூரில்தான் இருக்கிறேன் என அங்கு திருடி இவனை நம்ப வைத்துவிட்டு,  அதே நேரம் இங்கு நெல்லையில் உனக்கு தொல்லை தருபவர் வேறு யாரோ இருக்கிறார் என நம்ப வைக்க முயற்சி செய்திருக்கிறான் என இதைப் புரிந்தான் ப்ரவி.

பெங்களூரிலிருந்து திருடன் இவனிடம் பேசியதிலிருந்து, இங்கு வேணி அலறியடித்து மாடியிலிருந்து இறங்கி வந்த 4 மணி நேரத்துக்குள், திருடன் எப்படி இங்கு வந்திருக்க முடியும் என்ற கேள்விக்கு ப்ரவியிடம் பதிலே இல்லை என்றாலும் ப்ரவிக்கு மேற்கூறிய லாஜிக்தான் சரியாகப்பட்டது.

அந்த திருடன் வேற ஸ்டேட் போய்ட்டான், உனக்கும் இங்க பிரச்சனை, அப்புறம் ஏன் இங்க இருக்க? என ப்ரவியை நினைக்க வைக்க, அதன் மூலம் ப்ரவியை இங்கிருந்து கிளப்ப, அவன் திட்டம் துவக்குகிறான் என யூகித்த ப்ரவி, இது சரியான யூகம் எனில், இதே கோணத்தில் திருடனின் நடவடிக்கைகள் தொடரும், இவனுக்கு இங்கு தொல்லைகள் விதவிதமாய் ஏற்படும், அதே நேரம் திருடன் நாட்டின் பலபாகத்தில் கை வரிசையை காட்டுவான் என எதிர்பார்த்தான்.

கூடவே இப்படி ரெட்டை வேஷம் போடக் கூட (ப்ராக்சி கொடுக்கன்னு சொல்லணுமோ)  வேறு நபரை அனுப்பாமல், எல்லாவற்றையும் தான் ஒருவனாகவே இவன் ஏன் செய்கிறான்? தன் கூட்டத்தாரையே கூட இவன் அவ்வளவாய் நம்ப மாட்டானோ என ப்ரவிக்கு சந்தேகம் வரத் துவங்கியதும் இங்குதான்.

இதில்தான் மறுநாள் வந்து நிற்கிறான் பால்கனி. இவன் இல்லாத நேரத்தில் இவன் வீட்டுக்கு வந்து அதுவும் பெண் கேட்டிருக்கிறான். அதற்கும் மேலாக பவி இடத்தை வேறு விலை பேசி இருக்கிறான். அதாவது இவன் வேலைக்கு அடுத்த படியாக இவன்  குடும்பத்தை இந்த ஊரோடு இணைக்கும் ஒரு பிணைப்பு அந்த நிலம். அதை வெட்டிவிட முயற்சியா என்ன?

இவர்களை ஊரைவிட்டு துரத்த திருடன் செய்யத் தக்கதான பெரிய தொல்லையாக இது தெரியாவிட்டாலும் பால்கனி மீது ப்ரவிக்கு கவனம் விழுந்தது இங்குதான்.

இதற்கிடையில்தான் அந்த சாருமதியிடம் இவன் பவியின் ப்ரேஸ்லெட்டைப் பார்த்தது. அப்போதே சாருமதி நடிக்கிறாள் என அவள் பேச்சின் தோரணையிலேதான் இவனுக்குப் புரிந்ததே. அதோடு அவள் கூற்றில் சற்றும் உண்மையில்லை என்றும் இவனுக்குத் தெரியாதா?

ஆனால் அந்த ப்ரேஸ்லெட் அன்று இவன் வீட்டுக்கு வந்த அந்த சிகரெட்காரனைத் தவிர யார் வழியாகவும் திருட்டுப் போயிருக்க வாய்ப்பில்லை என்பதால், சாருமதி இவனை அவள் வீட்டுக்கு வரச் சொன்னபோது, அந்த சிகரெட்காரனை அறிந்து கொள்ள அவன் விரிக்கும் வலையில் போய் மாட்டிப் பார்ப்பது என்ற முடிவுக்கு வந்திருந்தான் ப்ரவி.

சிகரெட்காரனும் குடோன் திருடனும் ஒரே நபராக இருக்கும் பட்சத்தில் இது இவனை அந்த குடோன் திருடனிடமே கூட்டிச் செல்லவும் கூடுமே!

ஆக அவளது மொபைல் எண்ணையும், அவள் வீட்டிற்கு வந்து போவோரையும் கண்காணிக்க ரகசிய ஏற்பாடும் செய்திருந்தான். ஆனால் சொல்லிக் கொள்ளும்படியாக தகவல் எதுவுமே கிடைக்கவில்லை.

அப்போதுதான் வருகிறது வேணிக்கு அப்படி ஒரு கடிதம். ஆம் வேணி கடிதத்தைக் கண்டதும் அலறிவிட்டு, அடுத்து சமாளித்தாளே, அதில் அவள் எதையோ மறைக்கிறாள் எனப் புரிந்து கொண்ட ப்ரவி,

வேணியின் கடந்த கால வாழ்க்கையை அப்போது அறிந்திருந்ததால், ஒருவேளை ரோஹன் வீட்டிலிருந்து யாரும் அவளுக்கு தொந்தரவு தருகிறார்களோ என யோசித்தவன், அப்படி யாரும் மிரட்டினால் உனக்கு துணையாக நாங்கள் இருப்போம் என அவளுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, அதோடு அப்போதும் வேணியை இவன் 100% நம்ப அவசியம் இல்லையே, ஆக வேணியின் அறை மற்றும் உடைமைகளை மறுநாள் வேணி அறியாமல் இவன் தேட

அதில் அந்த கடிதம் ஃபோட்டோ எல்லாம் இவனுக்குக் கிடைத்தது. இதுவரைக்கும் வேணியையும் குடோன் திருடனையும் இணைத்து எண்ணாத ப்ரவிக்கு இது புது கேள்விகளை எழுப்பியது. சிகரெட்காரன் திருடன் என்றானால், திருடன் ஏன் வேணிக்கு வலை விரிக்கிறான் என்பதுதான் கேள்வி.

ரோஹனால் கடுமையாய் ஏமாற்றப்பட்டு வந்து நிற்கும் வேணிக்கு இவனைப் பற்றி இப்படி தவறான கடிதம் கிடைத்தால் இவனை நம்பி இவன் வீட்டில் தங்க எப்படி தைரியம் வரும்? இவனைக் கண்டு பயந்து அவள் வீட்டை விட்டு வெளியேறுவாள் என்பதுதானே இக்கடிதத்தின் நோக்கமாய் இருக்க முடியும்?

மற்றபடி குடோனை அவன் திருடும் நேர்த்திக்கும், புத்தி சாதுர்யத்துக்கும் ஒரு கடிதத்தை இரண்டே இரண்டு பேருக்குள் குழப்பி மாற்றி வைத்துவிட்டான் என்றால் நம்பும்படியாகவா இருக்கிறது? ஆனாலும் அது நடந்திருக்கவே முடியாத ஒன்று என்றும் சொல்ல முடியாது என்பதால் பவி, வேணி இருவரையுமே யாராவது சம்பந்தமில்லாமல் தொடர்பு கொள்ள முயல்கிறார்களா என கண்காணிக்க முடிவு செய்தான்.

ஆனாலும் வேணி இவன் வீட்டைவிட்டு வெளியேறுவதில் திருடனுக்கு என்ன லாபம் இருக்க முடியும்? திருடனின் திட்டம்தான் என்ன? என்பதுதான் இவன் மனதில் ப்ரதான கேள்வியாக இருந்தது.

இந்த நேரத்தில் கருணுடன் பழகத் தவிர்த்து வேணி வீட்டில் தனியாய் தங்க, இவன் வீட்டு வேலைக்காரப் பெண் சரியாய் அந்த நேரம் பார்த்து அந்தர் பல்டியடித்து காணாமல் போக, அந்த தகவல் எல்லாம் அப்போதைக்கு அப்போது இவனுக்கு வீட்டு காவலர் மூலம் வந்து கொண்டே இருக்க, ப்ரவிக்கு இதிலேயே வேணியை யாரும் திட்டமிட்டு தனிமை படுத்துகிறார்களோ என ஏதோ ஒரு உறுத்தல் வந்துவிட்டது எனில்,

அதற்குள் பவியிடம் செல்லப்போவதாக வேணி சொல்ல, அதற்காக பவி தெரிந்த ஆட்டோவை அனுப்பச் சொல்லி இவனுக்கு அழைத்திருந்தாள். இவன் இவர்கள் வீட்டுப் பக்கம் இருக்கும் தெரிந்த ஆட்டோவை வரச் சொன்னால், அதே நேரம் அப்போதுவரை இன்று நாளை என இழுத்தடித்துக் கொண்டிருந்த சாருமதி ‘இன்னைக்கு வாங்க சார்’ என இவனுக்கு அழைத்தாள்.

அடுத்த பக்கம்