துளி தீ நீயாவாய் 25 (3)

“அதெல்லாம் சரி, இந்தப் பக்கமா போறானே, எங்க போறான்னு உனக்கு எதாவது ஐடியா இருக்கா? அப்படியே சர்கஸுக்கு ஆப்போசிட் ரூட்” கேட்டபடி கருண் இப்போது தன் காரை கிளப்பினான்.

“நைட் ஷோக்கு இன்னும் டைம் இருக்கே, அதுவரை எங்கயாவது சுத்தலாம்னு நினைக்கலாம், இல்லனா மூட் சரியில்லன்னு ஹோட்டல்ல போய் தூங்கிட்டு வந்தாலும் வரலாம், இது எதுவும் இல்லன்னா ஒரு வேள விஷயம் தெரிஞ்சி அலர்ட் ஆகி தப்பி ஓடுறானோ என்னவோ, எதுக்கும் அலர்ட்டாவே இரு, நல்லாவே டிஸ்டென்ஸ் கீப் பண்ணு, உன்னை அவன் பார்த்திடவும் கூடாது, அட்டாக் செய்திடவும் கூடாது, கேர்ஃபுல்லா இரு” ப்ரவி சொல்ல,

“ஏன்டா மாக்கான் இப்படில்லாம் பேசுற? கேட்கவே கஷ்டமா இருக்கு” கருண் குரல் இறங்கிப் போனது.

“பச் நாம என்ன செய்ய முடியும்? நம்மளால என்னெல்லாம் முடியுமோ அதையெல்லாம் செய்தாச்சு, இதுக்கு மேல அவன் லைஃப் அவன் கைலதான?! நீ சேஃபா இரு, அது ரொம்ப முக்கியம்” என ப்ரவி பேச்சை முடிக்க,

அங்கு பால்கனியோ தான் தங்கி இருந்த ஹோட்டலுக்கே சென்றவன் காரை அங்கு பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, தன் அறையில் போய் கதவை மூடி படுத்துவிட்டான்.

“டேய் அவன் ரூம்க்கு போய்ட்டான்னு நினைக்கிறேன்” ஹோட்டலின் தரை தளம் வரை போதிய இடைவெளியுடன் சென்று கண்காணித்த கருண் இதை தகவலாக ப்ரவிக்குச் சொல்ல,

“ம் அவன் மொபைல் ட்ராக்கரும் அப்படித்தான் இங்க காட்டுது. இட்ஸ் ஓகே, ஒரு ஒன் ஆர் டூ அவர்ஸ் வெயிட் பண்ணுவோம், அவன் ரெஸ்ட் எடுக்கானா இருக்கலாம். அடுத்தும் அவன் கிளம்புற போல தெரியலைனா, நம்ம மீரட்ட விட்டு அடுத்து ஒரு கால் பண்ணச் சொல்லலாம்” என அவன் மறு கட்டளை கொடுத்தான்.

ஆமாம் ப்ரவி கருண் அவர்களின் கசின் கிருபாவின் கணவர் மீரட்தான் இந்த புல்லட் புலிக்காரனாக வயலுக்கு வந்து மிரட்டியதும். அடுத்தும் பால்கனிக்கு ஃபோன் செய்து பேசியதும், சாருமதி கைதின் போது உடன் வந்ததும்.

நடந்த விஷயம் இதுதான்.

ப்ரவி இந்த வழக்கை ஏற்று நெல்லை வரும் போது அவனிடம் திருடன் பற்றி சில யூகம் இருந்தது. அது என்னவெனில் தூத்துக்குடி பகுதிகளில் கை வரிசை காட்டி வரும் திருடன், அங்கேயே வசிப்பவனாக இருந்தால், எப்படியும் அங்குள்ள காவல் துறையில் தகவல் சொல்ல என சிலரையாவது அறிந்து வைத்திருப்பான், அதன் மூலம், ப்ரவி அங்கு வந்திருப்பது பற்றி அறிந்து அவனை அங்கிருந்து கிளப்ப முயல்வான். எதாவது தொல்லையும் தரலாம் என எதிர்பார்த்தான் ப்ரவி.

அதே நேரம் திருடனோ பெங்களூரில் திருடிவிட்டு அங்கிருந்த காவலாளி எண் மூலம் ப்ரவியை அழைத்துப் பேசி,  அவன் பெங்களூரில் இருப்பதை வெளிப்படுத்தினான். அதாவது அவன் தூத்துக்குடி பகுதியை மட்டுமாக குறிவைக்கவில்லை, எந்த மாநிலத்திலும் என் கைவரிசையை காட்டுவேன் என காட்டுகிறான் என்பதுதானே இதற்குப் பொருள்.

‘தூத்துக்குடி பகுதியில் ‘நீ என்னை தேடுவது வேஸ்ட்’ என்ற செய்தியாகவும் ப்ரவி இதை எடுத்துக் கொள்ளலாம்.

இதில் அந்த திருடன் அழைத்ததிலிருந்து 4 மணி நேரத்தில் நெல்லையில் ப்ரவியின் வீட்டின் மாடியில் ஏதோ ஒரு ஆள் நடமாட்டம். அதில் வேணி அலற, இவர்கள் போய் பார்க்க, அங்கு கிடந்த சில பல சிகெரெட் துண்டுகள் வெகு நேரமாக அங்கிருந்து யாரோ வீட்டை கண்காணித்தது போன்ற தோற்றத்தைத் தந்தது.

ஆனால் ப்ரவிக்கு கீழ்தளத்தில் பவி மின் விசிறியைக் கூட போடாமல், இவன் வருகைச் சத்தம் காதில் விழவும் எழுந்து தன் அறைக்கு போய்விட வேண்டும் என, இவனுக்காக தூங்காமல் காத்திருந்தது தெரியும்.

அதோடு வீட்டின் முன்புறம் பாதுகாப்பு காவலர் வேறு இருந்திருக்கிறார். ஆக வந்தவன் பின் புறமாகத்தான் வீட்டு மாடிக்கு ஏறி இருக்க முடியும். இதில் அதற்கு அடுத்திருந்த அறையில் அத்தனை கவனமாக சத்தத்தை கவனித்துக் கொண்டு விழித்திருந்த பவி, வந்தவன் வருகையை உணராமல் இருந்திருக்க முடியாது.

நான்கு மணி நேரமாக வேணியும் சிகரெட் புகையில் உட்கார்ந்து கொண்டு அங்கு ஆள் வந்ததையே அறியாமல் இருந்திருக்க முடியாது. ஆனாலும் வேணியை இவன் அந்த சமயத்தில் முழுதாய் நம்பத் தயாராய் இல்லை. அன்றுதானே அவள் இவன் வீட்டுக்கு வந்திருந்தாள். அவளைப் பற்றி எதுவுமே தெரியாத போது இவன் ஏன் நம்ப வேண்டும்? வந்த நபர் வேணியைப் பார்க்கக் கூட வந்திருக்கலாமே!.

ஆனால் இவனது பவியை இவனால் 100% நம்ப முடியும். பவியின் செயல்படியே பார்த்தாலும், வந்தவன் தான் அங்கு சில மணி நேரம் இருந்ததாக இவர்களை நம்ப வைக்க முயற்சி செய்திருக்கிறானே தவிர, அவன் அங்கு அத்தனை நேரம் உண்மையில் இருந்திருக்கவில்லை, பவி கண்ணசந்த சமீப நேரத்தில்தான் வந்திருக்கிறான் எனப் புரிந்தது ப்ரவிக்கு.

அதுவும் பவி விழித்திருந்ததோ, மாடியில் வேணி இருந்ததோ அவனுக்குத் தெரியவில்லை. ஆகவேதான் சிகரெட் துண்டுகளைப் போட்டு இவனை ஏமாற்ற முயற்சி செய்திருக்கிறான்.

அப்படி இத்தனை முயற்சி செய்தாவது தான் ப்ரவி வீட்டு மாடியில்தான் இருந்தேன் என ஒருவன் ஏன் நம்ப வைக்க வேண்டும்? அதாவது அந்த நேரம் அவன் வேறு எங்கோ இருந்திருக்கிறான். அதுவும் ப்ரவிக்கு தெரிந்த விதமாய்.

அடுத்த பக்கம்