துளி தீ நீயாவாய் 25 (2)

இதெல்லாம் எனக்கு சொன்னது கூட உங்க வேணிதாண்ணா. அவங்க கூட வாழணும்னு அவ்வளவு ஆசைப்படுவீங்களேண்ணா, இப்படி பேசுற வேணி கூட, சட்டத்துக்கு புறம்பான வாழ்க்கை ஒன்னையும் வச்சுகிட்டு மனம் ஒத்து வாழ முடியுமாண்ணா? வாழ்நாள் முழுக்க தன் சொந்த மனைவிட்ட நடிக்க முடியுமா? அப்படி நடிக்க முடிஞ்சாலுமே அதில் நடிக்கிறவங்களுக்கு என்ன சந்தோஷம் கிடச்சிட முடியும்? இதில் மேரேஜுக்கு பிறகு தப்பித் தவறி வேணிக்கு இதெல்லாம் தெரிஞ்சிட்டா? ஐயோ நினைக்கவே எனக்கு நடுங்குது. உடஞ்சி போய்ட மாட்டாங்களா? ரெண்டாவது தடவையும் ஒரு ஆண்ட்ட ஏமாந்திருக்கோம்னு தோணும்ல, அடுத்தெல்லாம் அவங்க அதைத் தாங்கிட்டு உயிரோட இருப்பாங்கன்னு நினைக்கீங்களா? அப்படி அவங்க உயிரோடவே இருந்துட்டாலும் என்னைக்காவது சந்தோஷமா இருப்பாங்களா?

அதுக்காக வேணிக்காக மாறுங்கன்னு சொல்றேன்னு நினச்சுடாதீங்க! ஏன்னா அதுக்கெல்லாம் காலம் வாய்ப்பு கொடுக்குமான்னே சொல்லத் தெரியல. உங்க ரகசிய பக்கங்கள் சட்டத்தின் முன்னால எந்த அளவு கறுப்பு, சட்டம் அதுக்கு என்ன தீர்ப்பு தரும்னு எனக்குத் தெரியாது. அதனால வேணியும் நீங்களும் அடுத்து பார்க்கிற வாய்ப்பே வருமான்னு எனக்குத் தெரியலதான்.

ஆனா வேணி கூட கறுப்பு ரகசியங்கள் உள்ள கணவனா வாழ்றதவிட,  இதெல்லாத்தையும் விட்டு வெளிய வந்துட்ட உங்களோட வாழ்க்கை கட்டாயம் ரொம்பவே நல்லாதான் இருக்கும்.

இதெல்லாம் பேசுறதுக்குத்தான் சரி, நிஜத்தில் நியாயமா இருக்கணும்னு நினச்சுட்டா நாம அழிஞ்சிடுவோம்னு  பயந்துடாதீங்கண்ணா,  வேணி நானெல்லாம் எங்க வாழ்க்கை முறைய திருத்திக்கிட்டப்ப பவியண்ணி, SP சார்னு வேணிக்கும், அந்த வேணி, நீங்கன்னு எனக்கும் கடவுள் எதோ வழியா கண்டிப்பா வந்திருக்கார். அது போல உங்களுக்கும் எப்படியாவது வந்துடுவார்.

இது எல்லாமே என்னோட சஜசன்தான்ணா, ஆனா இதுபடி நீங்க செய்தாலும் செய்யலைனாலும் என்னென்னைக்கும் நீங்க எனக்கு அண்ணாதான். அது மாறாது” என கிடைக்கும் நேரத்துக்குள் சொல்லி முடித்துவிடவேண்டுமென, அவசர அவசரமாயும், அதே நேரம் பால்கனிக்கு தவறாய் எதுவும் புரிபட்டுவிடக் கூடாது, மனம் வருத்தியும்விடக் கூடாதென்று வார்த்தைகள் தேர்வு செய்வதில் ஒரு வகை நிதானத்திலுமாய் மது படபடத்துக் கொண்டிருக்க,

இப்போது பால்கனி எழுந்து கொண்டான். அனிச்சையாய் அவனோடு சேர்ந்து இவளும் எழுந்தாள். எந்த ஒரு உணர்வுமின்றி காணப்பட்ட அவன் முகத்தை வைத்து அவன் என்ன நினைக்கிறான் என்றே புரிந்து கொள்ள முடியவில்லை மதுவுக்கு. பளீரென வெட்டிப் போகிறது ஒரு கொடும் மின்னல் இது அவர்களது இறுதி சந்திப்பாக இருக்கக் கூடுமென. அவ்வளவுதான் அவளை மீறி அண்ணா என அழுகையாய் விம்மிவிட்டாள். “என்னை பார்க்க வருவீங்கதானண்ணா?” எனும் போதெல்லாம் அவள் அழுகிறாள் என அந்த அறை முழுமைக்கும் தெரிந்திருக்கும்.

இடம் பொருள் பாராமல், அவன் ஒரு கை நீட்டி, அவளை பின் கழுத்தோடு பற்றி, தன் மார்பில் அழுந்த சேர்த்துக் கொண்ட போது “இல்லன்னு மட்டும் சொல்லிடாதீங்கண்ணா, எனக்கு நீங்க வேணும்” என்ற அவளது வெடிப்பு அவளுக்கும் அவன் மார்புக்கும் இடையில் மற்றவருக்கு கேட்காவண்ணம் கொட்டிக் கொண்டிருந்தது.

இதில் அவனுக்கு தன் மீது கோபமில்லை எனப் புரிந்தாலும் மதுவின் மனத் தவிப்புக்கு இது போதாதே. “ப்ளீஸ்ணா சொல்லுங்கண்ணா வருவீங்கதானண்ணா? ப்ளீஸ் வருவேன்னு சொல்லிடுங்கண்ணா” அவள் அவன் மார்புக்கு மட்டும் கேட்கும் படி இன்னும் கதற,

“வீட்டுக்குள்ள வர்றதுக்கு குருவிக்கு கதவுதான் திறந்திருக்கணும்னு இல்ல” என வருகிறது அவனது பதில். அவனது இந்தக் குரலை இதற்கு முன் அவள் அறிந்ததில்லை. இந்த பதிலையும் அவளுக்குப் புரியவில்லை. ஆனால் இதில் பீறிட்டுக் கொண்டு கிளர்ந்த பீதியில் பேச்சற்று போயிற்று அவளுக்கு. வெடுக்கென நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள்.

அவனோ அவ்வளவுதான் கிளம்பலாம் என்ற ரீதியில் கடைக்கு வெளியே தெரிந்த சாலையைப் பார்த்தான்.

அப்பொழுதுதான் அடுத்த பீதி வந்து விழுகிறது மதுவுக்கு. “ஐயோ சாரோட ஆட்கள் யாரும் ஃபாலோ பண்றாங்களாண்ணா?” அவன் காதோடு கிசுகிசுத்தாள். அவன் முகபாவத்தில் எதாவது மாற்றம் வந்தாலல்லவா இவளுக்கு எதாவது புரிய!

அப்படியே அவளை அழைத்துச் சென்று, அவளுக்கென ஏற்கனவே வரச் சொல்லி இருந்தான் போலும், அந்த கேபில் மௌனமாகவே அவளை ஏற்றி, வார்த்தையற்ற வெறும் கையசைப்பில் விடை கொடுத்தான்.

“டேய் பொடிசு மதுவ டேக்சில அனுப்பிட்டு தன் காரப் பார்த்து போதுடா. அந்த மதுப் பொண்ணு அழுதிட்டே போகுதுன்னு நினைக்கேன், ரொம்ப கன்ஃபார்மா தெரியல” காஃபிடேவுக்கு எதிரிலிருந்த கடைக்கு முன்பாக நிறுத்தி இருந்த காரிலிருந்து தன் மொபைலில் ப்ரவியிடம் தகவல் சொல்லிக் கொண்டிருந்தான் கருண்.

“ம் ஊர் மாறிப் போறால்ல அதான் அழுவாளா இருக்கும் மது. அவங்க ரெண்டு பேருமே எமோஷனல் டைப் தான்” ப்ரவியின் பதில் இது.

“பக்கத்தில் போய் கவனிச்சிருந்தா என்ன பேசுறாங்கன்னு ஓரளவு தெரிஞ்சிருக்கும், எனக்கென்னமோ வித்யாசமா படுது. இங்க வர்ற வரைக்கும் மது சிரிச்சுகிட்டு இருந்துச்சு” கருண் அழுத்தம் கொடுக்க,

“வித்யாசமா இருந்தாலும் பிரவாயில்ல, நமக்குத் தேவை அவன் எங்க இருக்கான்ற இன்ஃபோதான். நீ பக்கத்தில் போய் அவன் கண்ல விழுந்தியோ, கதை என்னாகும்னு புரியுதுல்ல” ப்ரவி எச்சரித்து வைத்தான்.

“சரி சரி உனக்கு உன் தம்பி சேஃப்டிதான் கடமையவிட முக்கியம்னு தெரியுமே” கருண் இங்கு ப்ரவியை சீண்ட,

“அவன் அலர்ட் ஆகிட்டா ப்ளான் சொதப்பிடுமேன்னு சொன்னா, நீ ஏன் எரும ஓவரா கற்பனை செய்ற” ப்ரவி பதிலுக்கு தன் தம்பியை வார,

இங்கு பால்கனி அதற்குள் தான் வந்திருந்த காரிலேறி கிளம்பிவிட்டான்.

“டேய் பொடிசு கிளம்புது”

“ம், அவன் கார் ஜி பி ஆரெஸும் அதைத்தான் காட்டுது, நீ அவன கேர்ஃபுலா ஃபலோ பண்ணு”

அடுத்த பக்கம்