துளி தீ நீயாவாய் 25 (19)

அப்படி நம்ப வைத்துவிட்டால் அடுத்து வெறும் திருட்டு வழக்கு மட்டும்தான் நரேன் மீது வரும். பெரும் தொகை ஃபைன் இருக்கும், அதை கட்டிவிட்டால் சிறிய காலம் மட்டுமே சிறை வாசம் இருக்கும்.

அது முடியும் முன் பால்கனி தன் வழிகளை திருத்திக் கொள்ள முடிவு செய்துவிட்டால் எல்லாமே சுபமாகிவிடும். அன்புக்கு அடி பணியும் பால்கனியின் மனதுக்கு பேசுவோர் பேசினால் காது கேட்கும்தான். திருந்துவான் என நம்பினான் ப்ரவி.

ஆயிரத்தில் ஒரு வாய்ப்பாய் பால்கனி அப்படி திருந்தவில்லை எனில் இவன் தன்னாலான முழு பலத்தோடும் பால்கனியை காப்பாற்ற போராடிப் பார்த்துவிட்டான் என்று இருக்கும். விடுதலையான பின்பு பால்கனி மீண்டும் தன் கைவரிசையை காட்டினால் அவனுக்கு மரணம் பரிசாக காத்திருக்கும். எப்படியும் அவரவர் வாழ்க்கை அவரவர் கையில்தானே!

இந்த திட்டத்தை ப்ரவி  ஐஜியிடம் கூட தெரிவிக்கவில்லை. முதற்காரணம் ப்ரவியின் மீது அன்பும் அக்கறையும் உள்ள அவர் இவன் இத்தனை ரிஸ்க் எடுப்பதை கட்டாயமாக அனுமதிக்க மாட்டார். என்னதான் கனி உதவிக்கு வராமலே போனாலும் இவன் தன்னை காத்துக் கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்திருந்தாலுமே அவர் கண்டிப்பாக மறுப்புச் சொல்லிவிடுவார்.

அதோடு அவருக்கும் காவல்துறையின் மற்ற அதிகாரிகள் போல நரேன் தீவிரவாதி என்ற வகை படு ஆபத்தான ஆளாகத்தான் இருப்பான் என்ற நம்பிக்கை ஆழமாக இருக்கிறது. இதில் அவனை காப்பாற்ற இவன் முயற்சி  எடுப்பதை எப்படி அனுமதிப்பார்?!

ஆக “அந்த மதுவுக்காக அவன்ட்ட சாஃப்ட் கானர் இருக்குதுன்னா, அந்த மதுவுக்காக அவன் தன்னோட டனலிங் இன்ஸ்ட்ருமென்ட்டையோ (சுரங்கம் தோண்டும் கருவி) அல்லது அதோட ஃபார்முலாவையோ வெளியிடுற போல எதாவது ப்ளான் செய்ங்களேன்,

இந்த பெங்களூர் நேஷனல் லெவல் செமினாரையே யூஸ் செய்துக்கலாம். ஸ்கூல் குழந்தைங்க அட்டென் செய்றதுக்கு நானே ஏற்பாடு செய்றேன். மது கூட அவன வரவைங்க, சைக்கோதனமாதான இருக்கான், அதுல யோசிக்காம ஃபார்முலாவ வெளிய சொல்லிட்டான்னா, நாட்டுக்காவது யூஸ் ஆகும், கோர்ட்ல இவன் எவ்வளவு ரிஸ்கான ஆள்ன்றதுக்கு பெரிய எவிடென்ஸாவும் இருக்கும்” என அவர் சொல்லி இருந்த காரியத்தை செயல் படுத்துவது போல் அந்த பெங்களூர் செமினாரை ஏற்பாடு செய்துவிட்டு,

அதன் பின்னணியில் இந்த சர்கஸ் நாடகத்தையும் திட்டமிட்டிருந்தான் ப்ரவி.

எப்படியும் இந்த அலர்ட் ஆறுமுகம் நரேன்லாம் ஒரு செமினார்காக தன் ஃபார்முலாவெல்லாம் வெளிய சொல்ல மாட்டான்னு இவனுக்கு முழு நம்பிக்கைதான்.

இதெல்லாம் முடிந்து இப்போது இவர்கள் காத்திருக்கும் போது, அந்த பால்கனியாகிய நரேன் தூங்கப் போயிருக்கிறானாம்.

இரண்டு மணி நேரம் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு காத்திருக்கிறார்கள் இவர்கள்.

“ப்ச் இன்னுமே ஒரு மணி நேரம் கழிச்சு கிளம்பினாலும்  ஷோ டைமுக்கு பொடிசு வந்துட முடியும்தான். ஆனா அதனாலதான் தூங்குறானா? இல்ல இது வேறதுவுமான்னு தெரியலயே” என்கிறான் கருண். அவன் இப்போது பால்கனி இருக்கும் அந்த ஹோட்டலிலேயே இருக்கிறான்.

“அண்ணா நாம கால் பண்ணா அவன் எழும்பிடுவான். குடுங்க நான் கால் செய்றேன்” இது மீரட். ஒட்டு கேட்டல், அதை பதிவு செய்தல், இவர்களுக்குள் கலந்துரையடிக் கொளல் என அனைத்திற்குமான கருவிகள் உள்ள ஒரு கண்காணிப்பு வேனில் இருக்கிறான். அவனுக்கு அடுத்திருந்த ப்ரவியோ ஒரு முறை தன் கைக் கடிகாராத்தை மீண்டுமாய் பார்த்தவன், சில நொடி இறுகிய மௌனத்துக்குப் பின் தன் வீட்டுக்கு அழைத்தான்.

“வேணிட்ட பால்கனி பத்தி நமக்குத் தெரிஞ்ச எல்லாத்தையும் சொல்லிடு பவிமா, எனக்கென்னமோ இங்க கொஞ்சமா நெருடுது இந்த நரேன் பிகேவியர், அங்க வேணிக்கு நம்மால முடிஞ்ச முழு செக்யூரிட்டிக்கு ஏற்பாடு செய்திருக்கேன், இருந்தாலும் அவனால பூட்டின ரூமுக்குள்ள கூட வர முடியும்ன்றப்ப எதை சேஃப்டின்னு சொல்ல?

நமக்கு அவனப் பத்தி தெரிஞ்சிட்டுன்னு அவன் அலர்ட் ஆகுறானோன்னு இருக்குது. அப்படின்னா நிரந்தரமா வேற இடத்துக்கு ஓடிடுவான். போறப்ப வேணிய விட்டுட்டு போவான்னு எனக்குத் தோணல, எனக்கென்னமோ வந்து அவன் வேணிய தூக்கிட்டுப் போய்டுவான்னே இருக்கு.

நீ எதுக்கும் வேணி பக்கத்துலயே இரு” என செய்ய வேண்டியவைகளை தன் மனைவிக்குச் சொல்லிக் கொண்டு போனான்.

இதற்குள் இதைக் கேட்டுக் கொண்டிருந்த கருண் கொதித்தான்.

“லூசாடா நீ, அவன் சைக்கோ போல வேணிட்ட போறப்ப இவ போய் குறுக்க நிக்கணுமா உனக்கு? கன்சீவா இருக்காடா. அவன் இவள கையப் பிடிச்சு முரட்டுத்தனாம இழுத்து அடுத்தபக்கமா தள்ளினா கூட தாங்குவாளா?”

இவர்கள் திட்டம் உடைகிறது என்ற புரிகையில் எல்லோருமே தவிக்கத் துவங்கி இருந்தனர்.

“விகாஷ் கன்னோட உங்க கூட இருப்பார்மா, நீ தைரியமா இரு” இதற்கும் பதிலை ப்ரவி பவித்ராவிடம்தான் சொன்னான்.

“நீங்க எல்லோரும்  விகாஷ் கூட ஹால்ல போய் இருங்க, நான் விகாஷ்ட்ட பேசிட்டு, டிபார்ட்மென்டையும் அலர்ட் செய்துட்டு திரும்ப லைன்ல வரேன், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுறேன்டா”

அவனது அந்த ‘டா’வில் ப்ரவி தனக்குள் எத்தனை உடைகிறான் என்பது பவிக்கு புரியாமலில்லை.

கடைசியில் இவளை ஆபத்தில் கொண்டு போய்விட்டுவிட்டானே என தவிக்கிறான்.

அடுத்த பக்கம்