துளி தீ நீயாவாய் 25 (18)

அதனால் சாருமதி செல்லும் காருக்குப் பின் மீரட் சும்மா சென்றாலே போதும் அந்த புல்லட்காரன் தான் சாருமதியைக் கடத்துகிறான் என பால்கனி நினைத்துக் கொள்வான் என முடிவு செய்து, ப்ரவி மீரட்டை சாருமதி செல்லும் காரை பின் தொடரச் சொன்னான்.

என்ன ப்ரவி எதிர்பார்த்த டைமிங் கொஞ்சம் சொதப்பி, அவர்கள் கிளம்பிப் போன பின்பே பால்கனி அங்கு வந்து சேர்ந்தான்.

ஆனாலும் மது எடுத்த ஃபோட்டோ காப்பாற்றியது.

அன்றைய நாளின் அடுத்த பகுதியில் பால்கனியை கவனித்த வரை ப்ரவிக்கு ஒன்று தெளிவாகப் புரிந்தது. அவன் வெகுவாக ஆடிப் போய் இருக்கிறான் என.

சாருமதியைக் காணவில்லை என மது ப்ரவியிடம் சொல்ல, ப்ரவி சாருமதியைத் தேடத் துவங்கினால், எங்கு புல்லட்காரன் சாருமதியை கடத்திய காரணம் வெளிவந்துவிடுமோ என்ற பெரும் பயமாக அது இருக்கலாம் என்பதே ப்ரவியின் புரிவு.

ப்ரேஸ்லெட்டை பால்கனிதான் சாருமதிக்கு கொடுத்தான் என புல்லட்காரன் சாருமதி மூலம் நிரூபித்துவிடுவானோ என அவன் மிரண்டு போய் இருக்கலாம் என எண்ணினான் ப்ரவி.

இதில் இவனை சந்திக்க வந்த மது பால்கனியே தனக்கு லோக்கல் கார்டியனாக வேண்டும் எனக் கேட்க, இதை ப்ரவி மறுக்கவில்லை. பால்கனியை மது விஷயத்தில் 100% நம்பலாம் என்பது இதற்குள் இவனுக்குத் தெரியும்.

மதுவுக்கும் இது ஆறுதலாகப்படும் எனப் புரிய சரி என்றுவிட்டான்.

அதோடு இது பால்கனிக்கு எத்தனை பெரிய நம்பிக்கையை உண்டு பண்ணும் என்றும் இவனுக்குத் தெரியுமே!

‘தன் மேல் கடுகளவும் எதிர்மறையான எண்ணம் இல்லை என்றால்தானே, இப்படி லோக்கல் கார்டியன் பொறுப்பை எல்லாம் சார் எனக்குத் தருவார்’ என பால்கனி எண்ணுவான் என ப்ரவி எதிர்பார்க்க,

அதை செயலில் காட்டி கொண்டாடித் தீர்த்துவிட்டான் பால்கனி.

அன்று இரவு ப்ரவி பள்ளிக்குப் போனதற்கு உள்நோக்கம் என பெரிதாய் எதுவுமில்லை. திறந்த வெளியில் ஒரு திரைப்படம். அங்கு அவன் மனைவியின் அருகில் உட்கார்ந்திருப்பதாய் நினைக்கவே ஏதோ அவனுக்கு நன்றாய்பட்டது அவ்வளவே. ஆனால் இவனுக்கு தன் மீது சந்தேகமே இல்லை என எண்ணும் அப்போது கூட பால்கனி இவன் பார்வையில் வரவில்லை என்பதை இவன் மனம் குறித்துக் கொண்டது. பையன் அவ்வளவு கவனமா இருக்காராம்!

ஆனால் அடுத்து மது சாப்பிடாமல் அழுது கொண்டிருக்கிறாள் எனவும் இதுவரை எந்தக் காரணத்துக்காகவும் இவன் பார்வைக்கு வராத பால்கனி, இவன் முன்னால் வந்து நிற்கவும் அதுவரைக்குமான பால்கனியின் பலம், பலவீன அடிப்படையில் இவன் செதுக்கிக் கொண்டிருந்த திட்டத்தை செயல்படுத்துவது என முடிவுக்கு வந்துவிட்டான் ப்ரவி.

தான் படிக்காதவன் என உலகை நம்ப வைத்துக் கொண்டிருக்கும் பால்கனி, ஒவ்வொரு விஷயத்திலும் மகா கவனமாய் இருப்பவன், தான் மாட்டிக் கொள்வேனா என யோசிக்கக் கூட முடியாமல், அல்லது யோசித்தும் தன் மனதை அடக்க இயலாமல் வேணிக்காக உடை, மொழி, மறைக்கப்பட்ட தன் கடந்த கால வாழ்க்கை என தன் அடையாளத்தை வெளியிடுகிறான்.

மதுவிற்காகவோ அதையும்விட அதிகமாய் தான் படிக்காதவன் என நடிப்பதையே மறந்தவன் போல அவளது பாட சந்தேகங்களுக்கான பதில்களை தேடி எடுத்து படிக்கக் கொடுக்கிறான்,

இது எல்லாவற்றிற்கும் மேலாக, அவனுக்கு இத்தனை முக்கியமான இந்த இரு உறவுகளையும் அவன் நெருங்க முடியாதபடி தன் கைக்குள் வைத்திருக்கும் ப்ரவியையோ அவன் சின்னதாய் கீறல் செய்யக் கூட விரும்புவதில்லை. இவனே அறியாமல் இவன் கைக்குள் இருந்து வேணியையும் மதுவையும் உருவிக் கொண்டு போய்விட வேண்டும் என்றுதான் எண்ணுகிறானேத் தவிர, இவன் மீது கை நீட்டும் எண்ணம் துளியும் இல்லை.

அதுவும் ஆரம்பத்தில் எப்படியோ இப்போது இது சர்வ நிச்சயம்.  இந்த விஷயங்களை யோசித்துதான் ப்ரவி தன் திட்டத்தை தீட்டி இருந்தான்.

தான் விரும்புவர்களுக்காக எந்த எல்லையையும் தாண்டுபவன் இந்த நரேன் என்பதுதான் இவனது திட்டத்தின் அடிப்படைக் கோடு.

அதை செயல்படுத்த பெங்களூரை தேர்ந்தெடுக்க காரணம், முன்பு சர்கஸை ப்ரவி பெங்களூரில் தேடுவது போல ஒரு கருத்தை வாசன் மூலம் பால்கனிக்கு கசிய விட்டிருந்தனரே அதுதான். ஆக பெங்களூருக்கு ஒரு சர்கஸை வரவைத்து, அங்கு புல்லட்புலிக்காரனை பிடிக்க வலை விரித்திருப்பதாக பால்கனிக்கு தகவல் கிடைக்கச் செய்து,

பால்கனி அங்கு வரும் போது ஒரு விளையாட்டு விபரீதமாகி, அதில் வாலண்டியராய் பங்குபெற்ற ப்ரவி ஒரு பெட்டிக்குள் மாட்டியவனாய் ஒரு ஆழ குழிக்குள் வைக்கப்பட்டு, அவன் மீது பல அடி உயரங்கள் மண் சரிந்து விட்டது போல் ஒரு காட்சியைக் காட்ட,

பால்கனி நிச்சயமாக ப்ரவியை காப்பாற்ற வருவான். அதற்கு அவனது சுரங்கம் தோண்டும் கருவியையும் எடுத்து பயன்படுத்துவான் என்பது ப்ரவியின் நம்பிக்கை.

கருண், மீரட்டுக்கே கனி ப்ரவிக்காக வருவானா என இதில் சற்று சந்தேகம் இருந்தாலும் ப்ரவிக்கு முழு நம்பிக்கை இருந்தது. இத்தனை நாள் கனியை கண்காணித்ததில் அவன் உணர்ந்தது இதைத்தான்.

அப்படி தன்னை தேடிக் கொண்டிருக்கும் காவல்துறை அதிகாரிக்கே ஆபத்தென்றால் உதவ வருபவன் தீவிரவாதியாகவோ, தேசத்திற்கு அழிவு செய்பவனாகவோ, மனிதர்களை துன்புறுத்துபவனாகவோ இருக்கவே முடியாது என வழக்கு மன்றத்தை நம்ப வைக்க முடியுமே! அதற்குத்தான் இத்தனை பாடும்.

அடுத்த பக்கம்