துளி தீ நீயாவாய் 25 (17)

வேணியும் பால்கனியும் மதுவுக்கு உதவ இறங்கவில்லை எனில் இதை எப்போதோ செய்திருப்பான் ப்ரவி. ஆனால் இவன் வலுக்கட்டாயமாக இதைச் செய்வதைவிட, வேணி போய் மதுவிடம் பழகி மதுவின் மனதை மாற்றிவிட்டு இதைச் செய்வது இன்னுமே சரியாகப்பட்டதால்தான் இவ்வளவு நாளும் இவன் பொறுமையாக இருந்தான்.

‘திருந்தாதவர்களை காப்பாற்றி வைத்தும்தான் என்ன பயன்? திரும்ப அவங்க அதையேத்தான செய்வாங்க’ என்ற அணுகுமுறை.

இப்போதோ சாருமதியை கைது செய்தால் இது மதுவுக்கான பிரச்சனையை முழுதாக முடிவுக்குக் கொண்டு வரும். அதோடு அவசர அவசரமாய் பால்கனி அவளை நாமக்கல்லில் கொண்டு போய் வைப்பதையும் தள்ளிப் போடும் என்பது ப்ரவியின் கணக்கு.

மது சாருமதியை நீங்கி நாமக்கல் போய்விடுவதுதான் அவளுக்கு நல்லது என்றுதான் ப்ரவியும் நம்பினான். ஆனால் இத்தனை சடுதியாய் மதுவை அங்கு அனுப்பிவிடுவது இங்கு வேணிக்கு ஆபத்தாகக் கூடுமே என்ற ஒரு எச்சரிக்கை உணர்வும் இருந்தது அவனுக்கு.

மது இங்கு இருப்பதால் வேணியை கடத்திக் கொண்டு எங்காவது ஓடிவிடலாம் என விபரீதமா பால்கனி எதையும் சிந்திக்க மாட்டான் என்ற ஒரு நம்பிக்கையில்தானே, வேணிக்கு துப்பாக்கி காவலெல்லாம் போட்டு, பால்கனியை விலக்கி நிறுத்தி வைத்திருப்பது. இதில் மதுவை வேறு ஊருக்கு அனுப்பிவிட்டால் பால்கனி வேணியின் மீது கை நீட்ட மாட்டான் என்று இல்லையே!

அதுவும் என்னதான் வேணி பால்கனியுடன் நேரடியாகப் பேசவில்லை என்றாலும் மது வழியாக பால்கனி ஒரு வகையில் வேணியுடன் செய்தி பகிர்ந்து கொண்டுதான் இருக்கிறான், வேணியின் அனைத்து விஷயங்களையும் அறிந்தும் கொண்டிருக்கிறான். இதில் மது இடம் மாறிப் போய்விட்டால், வேணியுடனான மொத்த தொடர்பும் அறுந்துவிட்டதாக உணர்வான்தானே!

அப்றம் எந்த வேதாளம் எந்த மரத்தில் ஏறுமோ?

அதனால் மது தற்சமயம் நெல்லையிலேயே இருக்கட்டும், அதே சமயம் சாருமதியிடம் இருந்தும் மது பாதுகாக்கப்பட வேண்டும் என கைது நடவடிக்கைக்கு ஆயத்தம் செய்திருந்தான்.

அதற்காக அவன் ஒரு காரில் விகாஷை மஃப்டியில் மது வீட்டிற்கு வெகு அருகிலேயே நிறுத்தி இருந்தான் அந்தக் காலை.  இந்தக் கைதை பிறர் கவனம் ஈர்க்கும் வகையில் செய்ய விரும்பவில்லை ப்ரவி. ஏனெனில் மதுவை இது முடிந்த வரை பாதிக்காமல் இருக்க வேண்டும் என எண்ணினான் அவன். அதனால்தான் இந்த மஃப்டி மற்றும் கார் ஏற்பாடெல்லாம்.

கூடவே வேறு ஒரு திட்டமும் இருந்தது ப்ரவி அன்ட் கோவிடம். அதன்படி சாருமதி கைது செய்யப்படுவதாகச் சொல்லி விகாஷ் அவளை காரில் அழைத்துக் கொண்டு கிளம்ப வேண்டும். புல்லட் புலிக்காரன் அதாவது மீரட் குறுக்கே வந்து அந்தக் காரை நிறுத்தி, சாருமதியை இன்னொரு காரில் ஏற்றி அனுப்பிவிட்டு பின்னால் போக வேண்டும்.

அதாவது அதைப் பார்க்கும் பால்கனிக்கு புல்லட் புலிக்காரன் சாருமதியை கடத்திப் போகிறான் எனத் தோன்ற வேண்டும். சும்மா வாயால எவனோ வடை சுடுறான்னு புல்லட்புலிக்காரன பத்தி பால்கனி நினச்சுடக் கூடாதுல்ல. ரொம்பவும் தீவிரமாய் புல்லட்காரன் இவனை சரணடைய வைக்க ஏதோ காய் நகர்த்திக் கொண்டிருக்கிறான் எனத் தோன்ற வேண்டுமே! அதற்காகத்தான் இந்த ஏற்பாடு.

எப்படியும் சாருமதியிடம் பவி ப்ரேஸ்லெட்டை கொடுத்தது பால்கனியாகத்தானே இருக்கும் அந்த அடிப்படையில் தனக்கு எதிரான சாட்சியாக சாருமதியை அவன் பயன்படுத்தப் போகிறானோ என மிரள்வான்தானே பால்கனி.

தப்பித் தவறி கூட பால்கனி அந்த புல்லட்காரனைத் தேடி இவர்கள் வலைவிரிக்கும் பெங்களூருக்கு வராமல் இருந்திடக் கூடாதே! அதற்காகத்தான் இந்த ப்ரெஷர் போடும் நாடகம்.

ஆக இதற்காக மீரட்டும் தயாராக வந்திருந்தான்.

இதில் ப்ரவி யூகித்தபடியே அந்த நாள் காலை மது வீட்டுக்கு வரவும் முன்பு போன்ற கீழ்நிலை வாழ்க்கைக்கு சாருமதி மதுவைக் கட்டாயப்படுத்த, மது எண்  ப்ரவி வகையில் எப்போதும் கண்காணிப்பில் இருக்கும் ஒன்றாததால்,  மது பால்கனிக்கு அழைக்கவும், அது மூலம் விஷயம் அறிந்து, அப்போதே விகாஷை சாருமதியைப் போய் கைது செய்வதாகச் சொல்லி அழைக்கச் சொல்லிவிட்டான் ப்ரவி.

அப்போது சாருமதியிடம் எதற்காக அவள் கைதாகிறாள் என்பதும் சொல்லப்படவே செய்தது. மைனர் பெண்ணை தவறான தொழிலில் ஈடுபடுத்துவதாகத் தான் வழக்கு அவள் மேல்.

கூடவே “நாங்க அமைதியாத்தான் உன்ன கூட்டிட்டுப் போகணும்னு நினைக்கிறோம், நீயும் சத்தம் போடாம கூட வந்துட்டா உனக்கு நல்லது” எனவும் அறிவுரை ஒன்று அழுத்தமாய் அவளுக்குக் கொடுக்கப்பட,

அவள் எதுவுமே நடவாதது போல் அமைதியாய் கிளம்பிவிட்டாள்.

என்ன கிளம்பும் போது மதுவிடம் போய் நடிக்க வாய்ப்பு வந்திருப்பதாகச் சொல்லிவிட்டு வந்துவிட்டாள். அதற்குக் காரணம் முழு ஈகோ. அப்போதுதானே அவள் இந்தத் தொழில் செய்யாவிட்டால் பிழைக்க முடியாது, அது இது என மகளிடம் கத்திக் கொண்டிருந்தாள். அதில் இப்போது போய் இந்த தொழிலுக்காக கைதாகிறேன் என எப்படிச் சொல்ல என்ற ஈகோ.

‘Immorality knows no love’ என்பது சத்தியமான உண்மை. இப்படி திடுதிப்பென விட்டுப் போகிறோமே, மகள் என்ன செய்வாள் என்ற தவிப்பு துளி கூட இல்லை சாருமதியிடம். தன் ஈகோவை மட்டும் காப்பாற்ற நினைத்துக் கொண்டு பொய் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டாள் சாருமதி.

சாருமதி மதுவிடம் பேசும் போது மது பால்கனியுடன் தொடர்பில்தானே இருந்தாள். ஆக அவர்கள் அழைப்பை கேட்டுக் கொண்டிருந்த ப்ரவிக்கு சாருமதியின் பேச்சும் காதில் விழ, மதுவுக்கும் பால்கனிக்கும் சாருமதியை அழைத்துப் போவது போலீஸ் என்றே தெரியவில்லை என்று புரிந்தது.

அடுத்த பக்கம்