துளி தீ நீயாவாய் 25 (16)

இது ஒரு தூண்டில். இதன் மூலம் தூண்டப்பட்டு நரேனின் குறி அந்த புல்லட் புலிக்காரன் மேல் திரும்பினால் அது ப்ரவி அன்ட் கோவுக்கு ஜாக்பாட்.

ஏற்கனவே விமலுக்குப் பதிலாக பால்கனி என நரேன் செய்து வைத்திருக்கும் ஆள் மாறாட்டம், தான் பெங்களூரில் இருந்து கொண்டு இங்கு ப்ரவி வீட்டில் இருந்ததாக செட்டப் செய்ய நினைத்தல் என்பவை ஆள் மாறாட்டத்தில் நரேனுக்கு இருக்கும் நம்பிக்கையை ப்ரவிக்கு உணர்த்தியிருக்க,

‘ஆள் மாறட்டம் செய்து நீ தப்பித்துக் கொள்ள வாய்ப்பிருக்கு’ என்ற ஆசையைத் தூண்டினால் நரேன் மீரட்டினை நோக்கி வருவான், அப்போது இவர்கள் அவன் திருடன் மட்டும்தான், தீவிரவாதி அல்ல என நிரூபிக்கும் வகையில் கைதாக வைக்கலாமே என்பது ப்ரவியின் நோக்கம். அதற்கான முயற்சி அது.

ஆனால் ப்ரவி இப்படி தூண்டில் போடும் முன்னாகவே ‘சார் யார குடோன் திருடன்னு நினைக்காரோ அவனையே திருடன்னு மாட்டிவிட்டுட்டா, நாம சார்ட்ட இருந்து நிரந்தரமா தப்பிக்க வழி இருக்கு போலயே’ என ஏற்கனவே முடிவு செய்திருந்தானே பால்கனி, ஆக ப்ரவியின் தூண்டிலை ஆசையாகவே இப்போது கவ்விக் கொண்டான்.

காவல் துறையில் தனக்கிருந்த வாசன் போன்ற கைக்கூலிகள் மூலம் அந்த புல்லட் புலிக்காரனைப் பற்றி தீவிரமாக தகவல் சேர்க்க முயன்றான்.

அதே காலகட்டத்தை பால்கனி வயலில் நிறுவி இருந்த கேமிராப் பதிவுகள் மூலம், அங்குள்ளவர்கள் இரவு பகலாக முறையாக மாதம் முழுவதும் வேலைதான் செய்கிறார்கள் என்பதற்கான சாட்சிகள் சேகரிப்பதிலும்,

அவர்களது செலவு முறை, கடன் இன்ன பிற பொருளாதார நிலவரம், அது அவர்களது வருமானத்தோடு முற்றிலும் ஒத்துப் போகிறது என நிரூபிக்கத் தக்கதான ஆதாரங்களை சேகரிப்பதிலும் செலவழித்தான் ப்ரவி. அதன் மூலம் அவர்கள் சராசரி வேலையாட்கள் கொள்ளையர்கள் அல்ல என்பதை நீதி மன்றத்தில் நிரூபிக்க முடியும்.

இதற்குள் இங்கு பால்கனியோ மதுவுடன் வெகுவாக நெருங்கி இருந்தான். மதுவின் பாசத்தோடு சேர்த்து, இதில் அவன் ப்ரவி அன்ட் கோவின் மனதையெல்லாம் கொள்ளை அடித்தான் எனச் சொல்லத் தேவையில்லை.

அதே நேரம் வேணியைப் பார்க்க முடியவில்லை என ப்ரவியின் வீட்டுக்குள்ளேயே வர துணிந்து இவர்களுக்கு பீதி கிளப்பினான்

போலீஸ் பார்வை என்று ஒன்றிருக்கிறது. அதற்குள் வருவது எத்தனை ஆபத்தானது என ஒவ்வொரு திருடனுக்கும் தெரியும். அந்த பயத்தில்தான் ப்ரவியின் முன் வர சற்றும் தைரியமில்லாமல், அவன் இல்லாத நேரம் பார்த்து ப்ரவி சம்பந்தப்பட்டவர்களைச் சந்திப்பான் பால்கனி. அது ப்ரவிக்கு நன்றாகவே புரியும்.

ஆனால் வேணியைப் பார்க்க வேண்டும் என இந்தமுறை அது எதையும் யோசிக்காமல் பால்கனி ப்ரவி வீட்டுக்கு வந்து நிற்க, ப்ரவிக்கு வேணியை பால்கனி வலுக்கட்டாயமாக எதாவது செய்துவிட்டால் என்ன செய்வது என்ற அழுத்தம் அதிகமானது.

பால்கனி எந்நேரம் எதைச் செய்வான் என யாருக்குத் தெரியும்? என்ற மிக முக்கிய விஷயமும் இருக்கிறதுதானே! அதனால்தான் பாதுகாப்புக்கு இருந்த அதிகாரியை துப்பாக்கியை காட்டி அவனை தடுக்கச் சொன்னான் அந்நேரம்.

ப்ரவியை நேரடியாக பகைத்துக் கொள்ளக் கூடாது என பால்கனி இதற்கு அடங்கிப் போய்விடுவான், ஆனால் கொஞ்சமாவது டயலாக் எல்லாம் பேசி எகிறுவான் என ப்ரவி நினைக்க, ஆனால் பால்கனியோ துப்பாக்கியைக் கண்ட மாத்திரத்தில் நடுங்கிப் போய்விட, அதிலிருந்து வேணிக்கு எந்நேரமும் துப்பாக்கிப் பாதுகாப்புப் போடுவதென முடிவு செய்துவிட்டான் ப்ரவி.

முன்பு வீட்டு பாதுகாப்புக்கு இருந்த காவலரை மாற்றிவிட்டு, நெல்லை பகுதிக்கு முற்றிலும் புதுமுகமான கமேண்ட்டோ ட்ரெய்ன்ட் போலீஸ் அதிகாரி விகாஷை ப்ரவி வீட்டின் பாதுகாவலுக்கு நியமித்திருந்தனர்.

அவர்தான் அடுத்து வேணியை பால்கனி நெருங்காமல் பள்ளியிலும் துப்பாக்கி முனையிலேயே அவனை மிரட்டி அனுப்பிக் கொண்டிருந்தார்.

வேணியிடம் நெருங்க முடியவில்லை என வேணியை பலவந்தமாக பால்கனி எங்காவது கடத்திப் போய்விடுவானோ என்ற அச்சமும் இப்போது இல்லை. ஏனெனில் மதுவும் பால்கனிக்கு இப்போது மிக முக்கிய உறவாகப்படுகிறதே! ஆக மதுவின் வாழ்வு சீரமைவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்காமல், வேணியோடு போய் எங்காவது தலைமறைவாகவெல்லாம் நினைக்க மாட்டான் என்ற நம்பிக்கை இருக்கிறது இவர்களுக்கு.

அதற்கேற்றார் போல இதை புல்லட்காரன் நிமித்தம் வேணிக்கும் பவிக்கும் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பாகப் புரிந்து கொண்ட பால்கனி, புல்லட்காரனைத்தான் இன்னும் தீவிரமாக தேடினான்.

இதற்கிடையில் மதுவுக்கு ஏற்ற பள்ளி என  அவன் நாமக்கல்லில் ஒரு பள்ளியை முடிவு செய்திருப்பதை அறிந்தான் ப்ரவி. அதே நேரம் மதுவின் அம்மா சாருமதியின் மொபைல் முழு கண்காணிப்பில் இருந்ததால் அந்த குறிப்பிட்ட வார இறுதியில் அவள் வாடிக்கையாளரை தன் வீட்டுக்கு வரச் சொல்லி இருப்பதும் தெரிய வந்தது.

சாருமதி மதுவை வலுக்கட்டாயமாக பழைய தீய தொழிலுக்குக் கட்டாயப்படுத்த முயன்றால், சாருமதியை உடனடியாக கைது செய்து மதுவுக்கு உதவுவது என்ற முடிவுக்கு வந்திருந்தான் ப்ரவி.

அடுத்த பக்கம்