துளி தீ நீயாவாய் 25 (15)

யாதொருவருக்கும் ஒரு பைசா கொடுக்க விரும்பாத பால்கனி எப்போது வேணியுடன் பழக வேண்டும், அவள் மனதைக் கவர வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பல லட்சங்களை வாரி இறைக்க முடிவு செய்துவிட்டானோ, அப்போதே அவன் வேணி விஷயத்தில் காட்டும் தீவிரம் ப்ரவிக்குப் புரிகிறது.

இதற்குச் செல்லாமல் வேணியை இவன் தடுத்து வைத்தால், பூட்டிய அறைக்குள் கூட புகுந்து தூக்கும் இந்த பால்கனி அடுத்து எந்த வகையில் வேணியுடன் தொடர்பில் இருக்க முயல்வான் என்றும் சொல்வதற்கில்லை.

வேணியைக் காண எல்லா பாதைகளும் அடைக்கப்பட்டுவிட்டதாக உணரும் போது, உணர்ச்சி வேகத்தில் வேணியை அவன் வலுக்கட்டாயமாக தூக்கிப் போய்விட்டால் என்ன செய்வது?

காதலில் மட்டும் எந்த செயலுமே குற்றமில்லை என சொல்லித் திரியும் திரைப்படங்கள்தான் ஏராளம். பால்கனியோ மூவி அடிக்ட். அதோடு அவனிடம் நேர்மையும் இல்லை. ஆக வேணியின் மீது பால்கனி கைவைக்கவே மாட்டான் என்றெல்லாம் எந்த நிச்சயமும் கிடையாதே!

அதற்கு இந்த பள்ளித் திட்டத்தை அனுமதித்தால், வேணியிடம் எதுவும் விபரீதம் செய்யாமல், மரியாதை சம்பாதிக்க என ஒழுங்காக நடந்து கொள்ள முயல்வானே என்ற ஒரே காரணத்துக்காக ப்ரவி இந்தத் திட்டத்தை அனுமதிக்க வேண்டியதாயிற்று.

இது கட்டாயத்தினால் எடுக்கும் பெரும் ஆபத்தான முயற்சிதான் என்றாலும் இதன் பலனும் அதிகம் என்றும் ப்ரவிக்குத் தெரியும்.

வேணிக்கு வலை விரிக்க பால்கனியால் இந்த திட்டத்தை இயற்ற முடியுமென்றால், பால்கனியை வலையில் வீழ்த்த இந்த திட்டத்தை ப்ரவியால் இயக்க முடியும்.

அதே நேரம் வேணி பால்கனியிடம் வெகு திடமாக நடந்து கொண்டாலும், அப்போதுதான் அவள் சந்தித்திருக்கும் ஏமாற்றம் வெகு கவனமாகவே அவளை நடந்து கொள்ள வைத்தாலும், அவள் இன்னும் வெறும் 17 வயதுப் பெண்தான். பால்கனியின் ‘நான் நல்லவன் வல்லவன் அப்படிப் பட்ட பெருமகன் உனக்காக உயிரையும் கொடுப்பவன்’ என்ற வகை வலையில் அவள் மனம் சரியாமல் பாதுகாக்க வேண்டியதும் அவசியம்.

ஆக பால்கனியின் இந்தப் பள்ளித் திட்டத்தை தன் வசதிப்படி இவன் இயக்கவும், வேணியை மனதளவில் பாதுகாக்கவும் பவியை இந்த திட்டத்திற்கு  வேணியுடன் அனுப்பி வைத்தான்.

இதில் இவன் எதிர்பார்த்ததையும் விட வேகமாய் காய் நகர்ந்தது.

எடுத்ததும் வேணி பால்கனியிடம் போய் நீதான் திருடனான்னு சார்ட்டயே கேட்டுட்டேன் தெரியுமா? அவர் இல்லைன்னு சொல்லப் போய்தான் உன்ட்ட பேசவே செய்றேன் எனச் சொல்லி வைக்க,

பால்கனிக்கு ‘சாரே என்னை திருடன் இல்லைனு சொல்லிட்டாரே, அவர்க்கு என் மேல சந்தேகமே இல்லை’ என இது புரிந்து வைக்க,

இந்த வேணிதான் இப்போது ப்ரவியின் சந்தேகம் இவன் மீது விழும்படி இவன் உடை மாற்றம், மொழி மாற்றம், மறைந்து மறைந்து வேணியை துரத்துதல் என எல்லாவற்றையும் ப்ரவியிடம் எடுத்துக் காட்டிப் பேசி இருக்கிறாள், இதனாலேயே அவரின் சந்தேகம் நம்மேல் வந்துவிடக் கூடாதென

வேணி ப்ரவியிடம் சுட்டிக்காட்டிய தனது முரண்கள் இயல்பானவை எனக் காட்டிக்கொள்ள, தனது உண்மையான கடந்த காலத்தை பவியிடம் சற்று கோடிட்டு காட்டியபடி, பள்ளித் திட்டத்தில் தன்னை சேர்த்துக் கொண்டான்.

என்னதான் பள்ளித் திட்டம் அவனதாய் இருந்தாலும் அதுவரைக்கும் ப்ரவியின் கவனத்துக்குள் வரக் கூடாதென, அடுத்தவர் அதைச் செய்வதாகக் காட்டி திரை மறைவில் இருந்த பால்கனி, இப்படி வெளிப்படையாய் வெளிவரத் துவங்கினான்.

‘சார்தான் எப்படியும் நம்மள சந்தேகப்படலையே’ என்பதுதான் இந்த தைரியத்தின் அடிப்படை.

வேணி அன்றன்று தான் பால்கனியிடம் என்ன பேசினேன் என்பதை வந்து ப்ரவியிடம் சொல்லிவிடுவாள் என்பதால், அதன் மூலம் பால்கனியின் இந்த செயலை காரண காரியத்தோடு புரிந்து கொண்ட ப்ரவி, பால்கனி வந்து இவன் வலையில் மாட்டியேவிட்டான் என்பதை இந்த கணம் புரிந்து கொண்டான்.

இதை அறிந்த போதுதான் ஆட்டுக் குட்டி மாட்டியதாக மீரட்டுமே மகிழ்ந்து கொண்டது.

அன்று ப்ரவி அன்ட் கோ அனைவருக்குமே வெகு மகிழ்ச்சியான நாள். மொத்தத்தில் இவர்கள் எல்லோருக்குமே நரேன் இவர்கள் விரும்பிய வகையில் கைதாவது நரேனுக்கே நல்லது என்ற நம்பிக்கை இருந்ததன் அடையாளம் அது.

பால்கனியோ அன்று பவியிடம் பேசிய கையோடு மதுவை கூட்டிக் கொண்டு கிளம்பினான். அதன் உள்நோக்கம் இங்கு யாருக்குமே தெரியாதே! ஆக ப்ரவிதான் பால்கனியை கண்காணிக்க கிளம்பிச் சென்றது.

அப்போது பால்கனியும் மதுவும் மதுவின் வீட்டிற்கு சற்று தொலைவில் மரங்கள் உண்டு செய்த சற்று மறைவான பகுதியில் காரை நிறுத்திவிட்டு காரின் ஒரு பக்கமாக இறங்கி நின்று பேசிக் கொண்டிருக்க,

காரின் ஜன்னல் வேறு திறந்திருந்ததால் மறுபக்கமாய் கவனத்தை ஈர்க்காமல் பால்கனியின் மொபைலை எடுப்பது ப்ரவிக்கு அத்தனை கஷ்டமானதாக இல்லை.  பால்கனி தன். மொபைலில் எதுவும் ரகசியங்கள் வைத்திருக்கிறானா எனத் தேட வேண்டியது அவசியம். அதுதான் மொபைலை அவனிடமிருந்து எடுக்க முதல் காரணம்.

அதோடு புல்லட் புலிக்காரன் இவனை குறி வைக்கிறான் என ஒரு தகவலையும் இவனுக்கு மீரட் மூலம் கொடுக்க விரும்பினான் ப்ரவி. ஆக பெங்களூருக்கு கருணைப் பார்க்கச் சென்றிருந்த மீரட் எண்ணிற்கும், மதுவின் எண்ணுக்கும் conference call முறையில் பால்கனியின் எண்ணிலிருந்து அழைத்தான். அழைப்பை ஏற்று மீரட்டிடம் பேசிய பால்கனிக்கு ப்ரவி அதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்பதே தெரியாது.

அடுத்த பக்கம்