துளி தீ நீயாவாய் 25 (14)

இதனால அவங்களுக்கு வெறும் பொருளாதார இழப்புதான் இருக்கும்னு எப்படிச் சொல்ல முடியும்? மன உளச்சல்ல இருந்து, பண இழப்பினால தொழில் சுருங்கி, பலருக்கு வேலை போறது வரை என்னல்லாமோ நடந்திருக்குமே!.

நரேன் அப்பாவே பிசினஸ் நொடிச்சதாலதான் எல்லாத்தையும் இழந்துட்டதா தகவல். அதனாலதான இவன் கஷ்டப்பட்டிருக்கான். இப்ப இன்னும் எத்தன நரேன இவன் தெருவில நிறுத்துறானோ?

அவன் செய்றது குற்றம். அது நின்னே ஆகணும் அதை செய்ததுக்கான தண்டனையும் அவன் அனுபவிச்சே ஆகணும். ஆனா அப்படி வங்குற தண்டனை அவன் தப்புக்கானதா மட்டுமாதான் இருக்கணும், அவன் திருந்த அவனுக்கு வாய்ப்பு கொடுக்கணும்.

அதுதான் என் கன்சர்னே தவிர, போய் இன்னும் நல்லா திருடுன்ற போல காப்பாத்தி விடுறது இல்ல” என தெளிவு படுத்திய ப்ரவி

“உனக்கு ஒன்னு தெரியுமா? இப்ப அவன திருடன்னு நான் அரெஸ்ட் செய்யலைனா, இன்னொரு ஆஃபீஸர் அவன டெரரிஸ்ட்ன்னு ஷூட் பண்ணி பிடிப்பான். அதுதான் ஆகும். தண்டிக்கப்படாத குற்றங்கள் எப்பவுமே பெரிய பெரிய அழிவுக்குத்தான் அஸ்திவாரமா இருக்கும்

இங்க ஏற்கனவே இவன காமிச்சு நாட்டுக்குள்ள தீவிரவாத கூட்டம் வந்துட்டுன்னு புரளி கிளப்பிவிட்டு ஆதாயம் தேடிப் பார்க்குது ஒரு அரசியல் கட்சி. நாளைக்கு  அவங்களே எங்கயாவது குண்டு வச்சுட்டு, இந்த குடோன் கூட்டம்தான் வச்சுட்டு, அரசாங்கத்துக்கு சட்டம் ஒழுங்க பாதுகாக்க தெரியல, அதனால ஆட்சிய கலைன்னு ஆரம்பிச்சாங்கன்னா, ஷூட் அட் சைட் ஆடரோடதான் அடுத்து டிபார்மென்ட் நரேனே தேடவே செய்யும்” என முழுக்கவும் பவி வயிற்றில் திகிலை கொட்டிவிட்டு,

“அதுக்குத்தான் நாம அவன சீக்கிரம் அரெஸ்ட் செய்யணும், ஆனா அப்படி செய்றதுக்கு முன்ன, அவன்தான் திருடன், அவன் மட்டுமாதான் திருடுறான், அவன் கூட இருக்க எல்லோரும் வேலையாட்கள்தானே தவிர, இவனோட கூட்டாளிகளோ, கிரிமினல்ஸோ கிடையாது அப்படின்றதுக்கெல்லாம் கோர்ட் ஏத்துக்கிடுற போல பக்காவா எவிடென்ஸ் ரெடி பண்றதோட,

அவன் யாரையும் கொலை செய்ற மாதிரி ஆளெல்லாம் கிடையாது அப்படின்றதுக்கும் சேர்த்து சாலிடா எவிடென்ஸ் ரெடி பண்ண்ணும்” என நம்பிக்கையாக முடித்தான்.

இந்த நோக்கத்தில் அமைந்தவைதான் அடுத்து வந்த ப்ரவியின் திட்டங்கள் எல்லாம்.

தில் மறுநாள் வந்து நிற்கிறார் இன்ஸ்பெக்டர் வாசன். அவர் லஞ்சம் அழகு என ஆராதிக்கும் மனசுக்காரர். பால்கனியின் சோலைராஜன் வந்து முந்திய தினம் நடந்த சம்பவத்தை பற்றியும், ப்ரவியை வந்து மிரட்டிப் போன அந்த திருடனைப் பற்றியும் தகவல் தந்தால் கணிசமான தொகை தருகிறேன் என்க,

ப்ரவி இந்த குடோன் திருட்டு வழக்கைப் பற்றியெல்லாம் ஜஜி தவிர யாரிடமும் பேசுவதே கிடையாதே, அதனால் வாசனுக்கு இது பற்றி சிறு தகவலும் தெரியாது என்பதால் அதற்கான விடையை ப்ரவியிடம் இருந்து பிடுங்க வந்திருந்தார் அவர்.

வாசனை மட்டுமல்ல, வாசன் வழியாய் விஷயத்தை அறிய முனையும் பால்கனியாகிய நரேனையே திசை திருப்பத்தான்,

“பொதுவா புலி எங்க இருக்கும் சர்க்கஸ்லதானே! பெங்களூர்க்கும் தூத்துகுடிக்கும் இடையில் எங்காயாவது சர்க்கஸ் இருக்கான்னு பாருங்க வாசன்” என பதில் சொல்லி அனுப்பிவிட்டான் ப்ரவி.

இதில் பால்கனிக்கு ப்ரவி  பெங்களூர் பக்கம் ஏதோ ஒரு கல்ப்ரிட்டை குடோன் திருடன் என்று எண்ணி தேடிக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் தோன்ற, ப்ரவி தன்னை சந்தேகிக்கவே இல்லை என்ற எண்ணம் வலுவாகுமே!

இந்த வாசனோடன உரையாடலைத்தான் வேணியிடம் கசியவிட்டான் ப்ரவி. பால்கனியை முடிந்த வரை சேதாரம் இல்லாமல் கைது செய்ய வேண்டும் என்ற நோக்கம் ப்ரவிக்கு இருந்தாலும், அவன் திருடன், தண்டனை பெற்று சிறைக்குப் போகப் போகிறவன். அடுத்தும் கூட திருந்துவான் என எதுவும் இல்லாதவன், நிதானமற்ற, நன்மையும் தீமையும் கலந்த மனதுடையவன், ஆகையால் அவன் வேணியை மட்டுமல்ல எந்தப் பெண்ணையும் மணக்கும் தகுதியற்றவன் என்ற எண்ணம்தான் ப்ரவிக்கு.

அதோடு 20 வயதில் ஒருவன் காதல் என பிதற்றுவதெல்லாம் அடுத்த இரண்டு வருடம் கூட தொடருமா என சொல்ல முடியாத ஒரு தற்காலிக உணர்ச்சிதான் என்ற விஷயமும் இருக்கிறது.

இதில் இன்றைய மனநிலையில் வேணி பால்கனியை முழு மொத்தமாய் மறுக்கத்தான் செய்கிறாள் என இவனுக்கு நன்றாகத் தெரிந்தாலும், இவனுக்குத் தெரியாமல் பால்கனியை அவள் சந்தித்துக் கொண்டிருக்கிறாள் என்ற விஷயமும் இருக்கிறதாகையால், அவனைப் பற்றி வேணியை எச்சரிக்கைப் படுத்தவே ப்ரவி இந்த தகவலை அவளிடம் விட்டான்.

இதில்தான் வேணி ப்ரவியிடம் வந்து பால்கனி அவளிடம் பேசுவதை  நேருக்கு நேராக தெரிவித்து, அவன்தான் வயலுக்கு வந்து மிரட்டிய திருடனா எனக் கேட்டாள்.

அவளிடம் பால்கனிதான் திருடன் என்பதையும், அவனைப் பிடிக்க இவன் ஏற்படுத்திய நாடகம்தான் அந்த வயலுக்கு வந்தவன் என்ற ரகசியங்களைச் சொல்லி, அதை அவள் மனமுதிர்ச்சியோடு கையாள்வாள் என இவன் எப்படி நம்பி எதிர்பார்க்க முடியும்?

ஆக வயலுக்கு வந்தவன் பால்கனி இல்லை, அதற்காக பால்கனி நல்லவன் என நினைக்காதே என்று மட்டும் இவன் சொல்லி வைக்க, அப்போதுதான் பால்கனியின் அந்தப் பள்ளிகளுக்கான போட்டி பற்றிய திட்டத்தை வேணி இவனுக்குச் சொன்னாள்.

ப்ரவியைப் பொறுத்தவரை இந்த திட்டத்திற்கு வேணியை அனுப்புவது என்பது கத்தி மேல் நடக்கும் நிலைதான்.

அடுத்த பக்கம்