துளி தீ நீயாவாய் 25 (12)

அடுத்து மீரட் புகை மறைவிலே அவன் மறைந்திருந்த பெட்டிக்கே திரும்பப் போக வேண்டும்,  புல்லட்டை உள்ளே தள்ளி, தானும் உள்ளே போய்விட்டு உள்ளே ஒரு லெவரை இழுத்தால் பெட்டி திரும்ப மண்ணுக்குள் போய்விடும், பெட்டி மேல் மண்ணும் சரிந்திடும்.

இவன் முதுகில் ஆக்சிஜென் சிலிண்டர் வைத்து அதன் மீதுதான் ஜெர்கின் போட்டு ஆக்க்ஷன் செய்தது எல்லாம். இருந்த புகையில் யாரும் பெரிதாய் இதை பார்த்துவிட முடியாது என்பதால் இப்படி திட்டமிட்டிருந்தனர். ஏற்கனவே அந்த சிலிண்டர் உதவியால் சுவசித்துக் கொண்டிருப்பதால் இன்னும் இரண்டு மணி நேரம் வரை சுவாசிக்க எந்தப் பிரச்சனையும் இல்லை.

இவனோ உடனடியாக தன் ஜெர்கின், ஹெல்மெட் முகம் மறைக்கும் மஃப்ளர் என எல்லாம் கழற்றிவிட்டு,  சிவப்பும் கருப்புமாய் ஒரு சட்டையை அணிந்து கொண்டு, ஷூக்களை கழற்றி விட்டு பக்கிள் செருப்புகளை அணிந்து கொண்டு,

பெட்டியின் அடுத்த பக்கத்தில் சதுர வடிவில் தெரியும் சின்ன கதவின் தாழை திறந்தால், அங்கு ஒரு ஆள் தவழும் அளவிற்கான அலுமினிய குழாயின் முகப்பு இவனுக்குத் தெரியும். அதாவது அக்குழாய் பெட்டி இருக்கு ஆழத்திற்கு இணையாக மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருக்கிறது. அதில் தவழ்ந்தபடி சற்று தூரம் சென்றால் மேலே செல்ல திறப்பு இருக்கும்.

அதற்கு நேர் மேலாக வயலுக்கு கரம்பை மண் அடிக்கும் லாரி நின்று கொண்டு இருக்கும். கரம்பை மண் என்பது ஏரி குளங்களில் இருந்து கிடைக்கும் வண்டல் மண், வயலுக்கு உரமாக பயன்படுத்துவர். கருப்பு நிறத்தில் இருக்கும். லாரி அல்லது ட்ராக்டரில் கரம்பையை வயலுக்கு கொண்டு வருவதும், அந்த வாகனங்கள் அந்த மண்ணை மூன்று நான்கடி உயர குன்று போல கும்மமாக கொட்டி வைத்து போவதும், பின் அதை எடுத்து வயல் முழுவதும் பரப்பிவிடுவதும் நடைமுறை.

ஆக யாருக்கும் கவனத்தில் உறுத்ததாதபடி  இந்த லாரியின் பக்கவாட்டு தரையில் கரம்பை கும்மமாக கொட்டி வைக்கப்பட்டிருக்க,

இவன் மேலே வர வேண்டிய திறப்பின் அருகில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு பழைய லுங்கியை  உடுத்திக் கொண்டு, அந்த கரம்பை கும்மம் மறைவில் வெளியே வந்தால்,

தப்பித் தவறி யாரும் பார்த்தாலும் கூட லாரி ட்ரைவர், வெயில் மறைவுக்கு லாரியின் அடியில் படுத்திருந்தவர் எழுந்து வருகிறார் எனதான் நினைப்பர். இவன் அந்த லாரியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட வேண்டியதுதான்.

மீரட் யார் கண்ணிலும் பட்டுவிடக் கூடாது என்பது முதல் அவனுக்கு சின்ன கீறல் கூட ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதான் மிக முக்கியமாய் இருந்தது ப்ரவிக்கு. அப்படியே கிளம்பி சென்னை போய்விட வேண்டும் என்பது மீரட்டுக்கான ப்ரவியின் கட்டளை.

மொத்தத்தில்  இவர்களது நாடகம் வெற்றி, சக்ஸஸ், ஜெயம், சுபம். வேணி மட்டும்தான் மயங்கிப்போனது.

அன்று இரவு வீட்டுக்கு வரும் போது அத்தனை அத்தனை உற்சாகமாக இருந்தான் ப்ரவி. திட்டப்படி கனியின் வேலையாட்களை எல்லாம் வெளியே அனுப்பிவிட்டு, தரைக்கு அடியில் வெகு ஆழத்தில் சுரங்க கருவிகள் புதைக்கப்பட்டிருந்தாலும் அவைகளை காட்டிக் கொடுக்கதக்கதான மேக்னட்டோ மீட்டருடன் அந்த வயலை அத்தனையாய் அலசியாகிவிட்டது. கேமிராக்களும் அத்தனை அமைத்தாகிவிட்டது.

கருணும் இவனும் மட்டுமாகத்தானே மொத்த வயலையும் தேடித் திரிந்தது. அதில் எக்கசக்கமான உடல்வலி இருந்தாலும் அண்ணன் தம்பி இருவருக்குமே வெகுவான மகிழ்ச்சி ஒன்று உள்ளே ஓடியது.

அதற்குக் காரணம் வயலில் இருந்து சுரங்கம் அமைக்கத் தக்கதான எந்த கருவிகளும் கிடைக்கவே இல்லை. அதோடு அங்கு இயங்கிக் கொண்டிருந்த செங்கல் சூளை, மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களில் பயன்படுத்த பட்ட கருவிகள் வழக்கமானவைகளாய் இல்லாமல், சின்னதும் பெரிதுமான மாறுபாட்டுடன், வேலையை எளிதாக அதனாலேயே  வேகமாக செய்து முடிக்கத் தக்கனவாய் வடிவமைக்கப் பட்டிருப்பதையும் இவர்களால்  காண முடிந்தது.

ஆரம்பத்தில் இவர்களுக்கு உதவ என உள்ளே நின்றிருந்த பால்கனியின் ஆட்களிடம் ‘இவை எங்கே வாங்கப்படுகின்றன, உங்களுக்கு மட்டும் எப்படி இத்தனை வசதியான கருவிகள் கிடைக்கின்றன?’ என்ற ரீதியில் இவர்கள் சாதாரணம் போல் பேசிக் கொள்ள,

“எல்லாம் எங்க சார்வா ஏற்பாடுதான். சிலத வாங்கி மாத்தி தருவாரு, சிலத அவரே செஞ்சுடுவாரு, இதெல்லாம் அவருக்கு தண்ணி பட்டபாடு, நேரம் பொழுது போறது தெரியாம மெஷினும் அவருமாத்தான் இருப்பாரு” என பதில் கிடைத்தது இவர்களுக்கு.

பால்கனியைத்தான் அவர்கள் அப்படிச் சொன்னது.

இதுதான் வெகு உற்சாகத்தையும் ஒருவித மன நிம்மதியையும் தந்தது ப்ரவிக்கு.

“நரேனோட பாஸ்ட்ட நினைக்கிறப்ப அவங்க எல்லோருமா சேர்ந்துதான் இவன இப்படி ஆக்கிட்டாங்க, இதுல நரேன மட்டும் இப்ப குற்றவாளின்னு தண்டனை வாங்கிக் கொடுக்கணுமான்னு எப்பவுமே வலிக்கும் பவிமா.

அந்த மாணிக்கத்த மீட்டோம்ல அந்த டைம்ல இவன் நம்ம கைல கிடச்சிருந்தா கூட நிலமை இவ்வளவு தூரம் போய்ருக்காதுல்ல அவனும் நல்லா இருப்பானேன்னு இருக்கும். ஆனா இன்னைக்கு பார்க்கிறப்ப இப்ப கூட காலம் கடந்திடலைனுதான் தோணுது.

அடுத்த பக்கம்