துளி தீ நீயாவாய் 25 (10)

பால்கனி அதாவது நரேனின் கடந்த கால வாழ்க்கையை பற்றி ப்ரவி இதுவரை அறிய வந்திருந்த அனைத்துமே ப்ரவிக்கு வெகுவாக பரிதாபமாக இருக்கிறதென்றாலும், நரேன் மீது ஏராள அக்கறையை அது தருகிறது என்றாலும், குடோன் திருடன் &கோ  தீவிரவாதியாக இருந்து அணு உலையை தகர்க்கும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்ற இவனது துறை இவனுக்கு தகவல் அளிந்திருந்ததால்,

‘பாவம் இந்த நரேனோட கடந்த காலம் ரொம்ப கஷ்டமா இருந்திருக்குது அதனால அணுமின் நிலையத்த ஆட்டைய போடட்டும், தமிழ் நாடு, கேரளா, ஸ்ரீலங்காலன்னு சில கோடி பேர்தான காலியாவங்க, பாவம் பாவப்பட்ட பையன் ஆசைப்படுறான், செஞ்சுட்டு போகட்டும்’ என விட முடியாதே!

ஆக பால்கனி மற்றும் அவன் கூட்டத்தை வலை விரித்துப் பிடிப்பதில் ப்ரவிக்கு இரண்டாம் சிந்தனை கிடையாது.

இதை எல்லாவற்றையும் ப்ரவி அவனை இந்த வழக்கிற்கு நியமித்திருந்த ஐஜியிடம் சொல்லி, அதோடு பால்கனியிடமிருந்தே ஆதாரங்களையும் அவன் கூட்டத்தை பற்றிய தகவலையும் பெற தன் திட்டத்தையும் விவரிக்க,

“வெல், உங்க ப்ளான் ரொம்ப நல்லா இருக்குது யங் மேன், இதுக்கு சூட்டபிளா ரெண்டு கேன்டிடேட் நான் உங்களுக்கு அரேஞ்ச் செய்றேன்” என்றார் ஐஜி.

அப்படி அவர் இந்த திட்டத்தில் ப்ரவிக்கு உதவ ஏற்பாடு செய்த இரண்டு பேரில் முதலாமவர் மீரட். அடுத்த நபர் கருண்.

“உள்ளூர் போலீஸ் யார் எப்ப நம்ம ப்ளான ஆப்போனென்ட்ட லீக் பண்ணிடுவாங்கன்னு தெரியாத இந்த சூழ்நிலைல, இவ்வளவு ரிஸ்க் அண்ட் சென்சிடிவ் கேச நீங்க உள்ளூர் போலீச  வச்சு செய்தீங்கன்னா, அது உங்களுக்கும், ஏன் நாட்டுக்கும் கூட ஆபத்தில் முடியலாம், அதனால உங்களால 100% நம்ப முடியுற, அந்த பால்கனிக்கு சந்தேகம் வர முடியாத வெளியூர் ஆட்கள மட்டுமா வச்சு ப்ளான் செய்றதுதான் புத்திசாலித்தனம்” என ஒரு விளக்கம் வேறு ஐஜியிடம்.

மீரட் வேணி விஷயத்தில் உள்ளே வர நேர்ந்ததே, அப்போது அவனைப் பற்றியும் ஐஜியிடம் சொல்லி இருந்தான் ப்ரவி.

“எதாவது முன்ன பின்ன இந்த கேஸ்ல மிஸ்ஸாகி அணுமின் நிலையத்துக்கு மட்டும் எதோ ஆகிட்டுன்னா, அது உங்க கருணுக்கும், மீரட்டுக்கும் கூட ஆபத்துதானே” என்று வேறு ஒரு கேள்வி அவரிடம்.

இதற்கு மேல் அவரிடம் இவன் என்ன சொல்ல?

ஆனால் மீரட் கருண் இரண்டு பேரையும்தான் பிடி பிடியென பிடித்தான் ப்ரவி “அவர் கேட்டார்னா அதுக்குன்னு இப்படித்தான் சரின்னு சொல்லி வைப்பீங்களா?” என்பதுதான் அதன் சாரம்சம். அவர்களின் பாதுகாப்பு இவனுக்கு இவனைவிடவுமே முக்கியம் அல்லவா?

“ஆஹா இம்புட்டு பொறாமையா மாக்கான் உனக்கு, நீ மட்டும் நாட்டுக்கு சேவை செய்வ, நாங்க மட்டும் செய்ய கூடாதாமா?” என வந்த கருணின் கவ்ண்டர் டயலாக்கின் மொத்த அர்த்தம்

“உனக்கு ஆபத்துனா நான் வரமா யார்டா வருவா?” என்பதுதான் என ப்ரவிக்கே தெரியுமாதலால் அவனிடம் வாய் மூட வேண்டியதானால்,

“உங்க இடத்துல இருந்தா நானும் கூட உங்கள போலத்தான் பேசுவேன், என் இடத்துல இருந்தா நான் இப்ப என்ன செய்றனோ அதைத்தான் நீங்க செய்வீங்க, இது உங்களுக்கும் தெரியும், ஸோ இப்ப நீங்க திட்டி முடிச்சுட்டீங்கன்னா அடுத்து என்னன்னு பார்ப்போமாண்ணா?” என்ற மீரட்டின் அணுகுமுறையில், அடுத்தென்ன என்றே இவனும் நினைக்க வேண்டியதாயிற்று.

மீரட்டின் கூற்று 100% உண்மையல்லவா?

ஆக அடுத்துதான் அந்த வயல் சீனுக்கு செட் போட்டார்கள்.

பால்கனிதான் குடோன் திருடன் எனும் பட்சத்தில் இத்தனை பெரிய பெரிய சுரங்கங்கள் தோண்ட தேவையான பெரிய பெரிய கருவிகளையும், அவன் கூட்டத்தையும் அவன் எங்காவது ஒழித்து வைத்திருக்க வேண்டும்தானே. அந்த விஷேஷித்த கருவிகள் கிடைத்தாலே அது மிகப் பெரிய சாட்சியாய் இருக்குமே!

அப்படி கருவிகள் இருக்கக் கூடும் என ப்ரவிக்கு சந்தேகம் விழுந்த இடம் பால்கனியின் வயல். நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலம், அதில் அத்தனை ஆட்கள் வேறு பகலிலும் இரவிலும் கூட வேலை செய்கிறார்கள். செங்கல் அறுக்கும் வேலையெல்லாம் பெரிய பெரிய மெர்குரி விளக்குகள் போட்டு இரவிலும் நடக்க, இதைவிட கருவிகளை ரகசியமாய் புதைத்து வைக்க வேறு எந்த இடம் சிறந்ததாக பால்கனிக்குத் தோன்ற முடியும்?

வெளியாள் எப்பவுமே உள்ளே வர முடியாதே! பக்கத்திலிருக்கும் பவியின் இடத்தை வேறு இவர்கள் விற்றுவிட வேண்டும் என அவன் விரும்பினானே! இவர்கள் அறியக் கூடாத எதையும் அறிந்துவிடக் கூடாது என்பதற்காக இருக்கலாமே!

அதோடு வேலை செய்யும் அந்தக் கூட்டமே நரேனின் சுரங்கம் தோண்டும் கூட்டாளிகளாவும் இருக்கலாம்தானே!

ஆனால் இப்படி எல்லா நேரமும் ஆள் புழங்கும் இடத்தில் போய் எப்படி ரகசியமாய் மண்ணை கிளறி கிளறி ஒவ்வொரு இடமாய் கருவியைத் தேட? யாரைத் துப்பறிய?

எல்லாவற்றிற்கும் மேலாக நம் மீது போலீஸ் சந்தேகம் விழுந்திருக்கிறது என கனிக்கு கொஞ்சம் தோன்றினாலும் அவன் கூட்டத்தோடு தப்பிப் போக எத்தனை வாய்ப்பு? ஆக

அடுத்த பக்கம்