துளித் தீ நீயாவாய் 24 (7)

“அதெல்லாம் தேவையில்ல, நீ ப்ளான் படி நாமக்கல்லே போ, இன்னொரு டைம் இப்படி உங்க ஸ்கூல விட்டு தூரமா வர்ற ஒரு வாய்ப்பு நமக்கு எப்படி கிடைக்கும்? நைட் ஸ்டடி பாதிக்காம இருக்க இதுதான் பெஸ்ட்னு பேசினோமே! இப்ப நான் எப்படியும் SPசார் கூட சர்கஸ்லதான் இருக்கப் போறேன். அதனால உன் விஷயத்தில் யாரும் சட்டுன்னு என்னை கைகாட்ட முடியாது. மீறி எதாவது கேள்வியாச்சுன்னாலும், கேட்கிறது போலீசா மட்டும்தான் இருக்கும். SP சார்ட்ட என்ன நடந்துச்சுன்னு உண்மைய சொல்லிட்டேன்னா அதுவும் அடங்கிடும். ஆயிரத்தில் ஒரு வாய்ப்பா சார்க்கு நாம செஞ்சது சரின்னு படலைனா, அப்பவும் ரெண்டு திட்டு வேணா கிடைக்குமே தவிர, அடுத்தெல்லாம் ஒன்னும் இஷ்யூ இருக்காது. நாமக்கல்ல அட்மிஷன் போட்ட உன்னை திரும்பி கொண்டு போய் உங்க ஸ்கூல்லல்லாம் விட்றமாட்டார்”  என இவனும் தொடர,

அடுத்து செமினார் ப்ரெசென்டேஷன் என பரபரப்பாய் படபடப்பாய் கழிந்தது நாள்.

அன்று மாலை ஒரு மூன்று மணி போல் இவர்களது பிரிவு கருத்தரங்கெல்லாம் முடிய, மதுவின் பள்ளிக் குழு கிளம்ப ஆயத்தமானது. மதுவுடையது இறுதிச் சுற்று வரை வந்திருந்தது அவளுக்கு வெகு உற்சாகமளிக்க சள சளத்துக் கொண்டே வந்த அவள், அண்ணா கண்டிப்பா எனக்கு நீங்க இன்னைக்கு ட்ரீட் கொடுக்கணும் என இவனிடம் கேட்டது.

சற்று தலை சாய்த்து அவளை ஒருவிதமாய்ப் பார்த்தான் இவன்.

“ஏன்ணா?” என இவன் முகம் பார்த்தவள், “எல்லோரையும் விட்டுட்டுப் போறேன்னு அழுதுட்டு கிடப்பான்னு நினச்சா இவ என்ன எஞ்சாய் பண்றதிலேயே இருக்காளேன்னு பார்க்கிறீங்களா?” எனக் கேட்க,

“ப்ச், இல்ல, இது எங்க மதுதானான்னு மட்டும்தான் பார்த்தேன்” என வருகிறது அவனது பதில்.

அவளோ “எனக்கு கொஞ்ச நேரமாவது உங்கட்ட பேசிட்டு இருக்கணும்ணா அதான்” என்றாள்.

“உங்க முகம் எப்பவும் என் கண்ல சிரிச்சா முகமாவே நிக்கணும்ணா” எனும் போதெல்லாம் அவள் கண் குளமாகி இருந்தது.

“லூசா நீ? ரெண்டே நாள்ல அங்க வந்து நிப்பேன்றேன், அப்றமும் அடிக்கடி வருவேன் மதும்மா” என இப்போது இவன் அதட்ட, அதில் இவனுமே உணர்ச்சி வசப்படுவதுமே தெரிய,

“எனக்கு காஃபிடே காஃபி எப்படி இருக்குன்னு தெரியணும், சோ போறேன், விருப்பப்படுறவங்க வந்து ஜாய்ன் செய்துக்கலாம். விருப்பம் இல்லைனா பில் மட்டும் பே பண்ணிட்டு வந்துடலாம்” என இதை ஒரு ஜோக் போல அவள் இப்போது அறிவிக்க

“என்ன இவ்வளவு சிம்பிளா இருக்கு உன் ட்ரீட் ஐடியால்லாம், நீல்லாம் வேலைக்கு போய் ஏர்ன் செய்ய ஆரம்பிச்ச பிறகு நான்ல்லாம் இவ்வளவு சிம்பிளா ட்ரீட் கேட்பேன்னு நினச்சுடாத” என்றபடி அவனும் சமனப்பட்டவன், ஒரு காஃபிடே முகவரியை கூகிளில் தேடி அதை அவன் இவர்களின் சந்திப்புப் புள்ளியாய் அவளிடம் சொன்னான்.

“சொன்னது ஞாபகம் இருக்குல்ல, உன் டீம் பீபுள் எல்லோரும் இங்க மெயின் கேட் பார்த்து போக ஆரம்பிக்கவும், நீ நான் காமிச்சனே அந்த கேட் வழியா வெளிய போய்டு. இவங்க உன்ன மிஸ் செய்துடுவாங்க, நான் கொடுத்த கேப் நம்பர் வச்சிருக்கல்ல, அது அங்க கேட்ல இருந்து இடது பக்கம் கொஞ்சம் தள்ளி வெயிட் பண்ணுது, நம்பர் செக் பண்ணிட்டு ஏறு. ஏறினதும் என்னோட இன்னொரு நம்பர் கொடுத்தேன்ல, அதுக்கு ஒரு கால் செய்ற, நான் இப்பவே கேப் ட்ரைவர்ட்ட இந்த காஃபிடேக்கு வரச் சொல்லிடுறேன். அங்க பார்க்கலாம்” என அடுத்து அவன் விடை பெற,

அடுத்து இவர்கள் சந்தித்துக் கொண்டது காஃபி டேயில்.

கேபிற்கு முன்னே போய்ச் சேர்ந்திருந்த இவன் கேபிற்காய் வாசலிலேயே நிற்க, வந்து நின்ற கேபிலிருந்து இவனைப் பார்க்கவும் ஈஈஈ என்ற புன்னகையோடு இறங்கி வந்தது மது.

அதுவரைக்கும் பள்ளிச் சீருடையில் இருந்தவள் இவன் வாங்கிக் கொடுத்திருந்த ஒரு ஃபுல் லெந்த் க்ரே ஸ்கர்ட் க்ரீம் நிற டாப்ஸ் என உடை மாற்றி வந்திருந்தாள். முடியை வேறு விரித்துவிட்டு ஃப்ரெஷப் செய்து என இந்த ஊர் பெண்ணாய் அவள்.

“எப்படி இருக்குண்ணா?” என்பதுதான் முதல் கேள்வியும்.

“ஜோரா இருக்குதே” என்றபடி அவளை எதிர்கொண்ட அவன் அடுத்து கேபுக்கு செட்டில் செய்து அனுப்பிவிட்டு,

“எங்க மதுமா இதுக்கெல்லாம் டைம் கிடச்சுது?” என்றபடியே காஃபி டே நுழை வாயிலைப் பார்த்து நடக்க,

“அது எல்லோரும் மெயின் கேட் பார்த்து போகவும் நான் பக்கத்திலிருந்த ரெஸ்ட் ரூம்குள்ள போய்ட்டேன். அங்க வச்சு மாத்தினேன்” என்றாள்.

“சூப்பர் ஐடியாதான்” என இவன் பாராட்ட, அதற்குள் இவர்களுக்கான டேபிளை இவர்கள் நெருங்கி இருக்க, அந்த ஓரமான இடத்தில் சென்று அமரவும்,

“ஆக்சுவலி ஐடியா என்னது இல்ல, சோ நீங்க என்னை பாராட்டக் கூடாது” என்ற மது,

இவன் திகைப்பாய் அவள் முகம் பார்க்கவும் “எங்களுக்கு இன்சார்ஜா வந்திருந்தாங்களே ராணி டீச்சர் அவங்களுக்கு அந்த ரெஸ்ட் ரூம்ல ஒழிஞ்சுகிட்டு கால் செய்து என் அம்மா என்னை படிக்க விடமாட்டேன்னு ரொம்பவும் படுத்துறாங்க மேம், இப்ப எனக்கு நல்ல இடத்தில் மேல் படிப்பு படிக்க ஸ்பான்சர் கிடச்சிருக்கு, இந்த வாய்ப்ப என்னால இழக்க முடியாது, அதனாலதான் போறேன், நீங்க வருத்தப்படாம உங்க ப்ளான் படி லால்பாக் எல்லாம் நம்ம பிள்ளைங்கள கூட்டிட்டுப் போய்ட்டு நைட் ட்ரெயின பிடிங்க, என்னை காணோம்னு டென்ஷனாகி கஷ்டபடாதீங்கன்னு சொல்லிட்டு, அப்படியே அங்க நெல்லைல எங்க ஸ்கூல் ஹெச் எம்க்கும் கால் பண்ணி இதையே சொன்னேன்” என குண்டை அதிர்வின்றிப் போட்டாள்.

அதிர்ந்து போய் இதைக் கேட்டுக் கொண்டிருந்தவன் “அவங்க என்ன சொன்னாங்க?” எனக் கேட்க,

“ராணி மேம்ட்ட பேசிட்டு உடனே கால கட் செய்துட்டு உடனே ஹெச் எம்மை கூப்ட்டனா, அதனால ராணி மேம் எது சொல்லவும் வழி இருந்திருக்காது. ஹெச் எம் முதல்ல ரெண்டு நிமிஷம் என்ன விளையாடுறியா? வெளில என்னல்லாம் நடக்கு, எதை நம்பி போற, முதல்ல ராணிட்ட போய் நில்லு, எதுனாலும் இங்க வரவும் பார்த்துக்கலாம்னு அதட்டினாங்க, அப்றம் அவங்களே தணிஞ்சு உங்க அம்மா பத்தி கேள்வி பட்டுருக்கேன், வேற பிள்ளைங்க யாருக்கும் இதை என்னால சொல்ல முடியாது, ஆனா உன் சூழ்நிலைக்கு இது தப்பும்னும் இல்ல, என்ன ஷ்காலர்ஷிப் என்ன இன்ஸ்டிடூஷன்னு டீடெய்ல்ஸ் தா, விசாரிக்கேன்னாங்க, இல்ல அதெல்லாம் முடியாது, எப்படியும் எங்க அம்மா காதுக்கு அது போய்டும், அங்க வந்து இழுத்துட்டு வந்துடுவாங்கன்னு நான் பிடிவாதமா சொல்லவும், சேஃபா இரு, கவனமா இரு, அந்த நீ படிக்கப் போற இன்ஷ்டிடூஷன் நிஜத்துல இருக்கான்னு கூகிள்ள பார்த்து கன்ஃபார்ம் செய்துக்கோ. அந்த இடத்துக்கு ஃபோன் செய்து அப்படி இடம் இருக்கா, உனக்கு அட்மிஷன் கிடச்சுருக்கான்னு எல்லாம் பேசிடு, உன்னைத் தவிர யாரையும் நம்பாத, எதாவது இஷ்யூன்னா உடனே எனக்கு கால் செய்னு கொஞ்சம் அட்வைஸ் செய்தாங்க, என்னால என்ன முடியுமோ அதைச் செய்றேன்னு சொன்னாங்க, இப்படி பெங்களூர்ல யூனிஃபார்ம்ல சுத்தாதே, அதுவே யாருக்காவது கண்ண உறுத்தப் போகுது அப்படின்னும் சொன்னாங்க, இந்தப் பாய்ண்ட் சரின்னு பட்டதால மாத்திக்கிட்டேன்” அவள் சொல்லிக் கொண்டே போக,

என்ன சொல்லவெனத் தெரியாத முகபாவத்தோடு அமர்ந்திருந்தான் பால்கனி.

அடுத்த பக்கம்