துளித் தீ நீயாவாய் 24 (5)

அண்ணன்காரன் ஒத்துக் கொண்டான். என்னதான் சாருமதியால் இப்போது மதுவுக்கு தொல்லை இல்லை என்றாலும் அவள் எந்த நிமிடம் வந்தாலும் ஆபத்துதானே! அதற்குள் இவன் மதுவை இங்கிருந்து அழைத்துப் போய்விடதான் நினைத்திருக்கிறான் மது சொல்வது போல் பள்ளி அனுமதி இன்றி அவள் கிளம்பிப் போனால் லோக்கல் கார்டியனாக இவனுக்கு கட்டாயம் சிக்கல்தான். நைட் ஸ்டடி பாதிக்கப்படுவதும் இவனுக்கு சுத்தமாக சம்மதமில்லை.

அதற்காக இதில் சிக்கல் இல்லை என்று அர்த்தம் இல்லை, ஆனால் சமாளிக்க வழி இருக்கிறது எனப்படவும் பால்கனி ஒத்துக் கொண்டான்.

“இந்த வர்கிங் மாடல், செமினார் எல்லாம் நீ இங்க இருந்து கிளம்ப ஒரு ரீசன், மத்தபடி ஜெயிக்கணும் அது இதுன்னு ஆசப்படலைனா எனக்கு உன் திட்டம் ஓகே” என இவன் சொல்ல, “சும்மா ட்ரைப் பண்றோம் ஜெயிச்சா ஜாக்பாட். இல்லைனாலும் ட்ரைப் பண்ணோம்னு இருக்கும்ல” என்ற கொள்கையின் அடிப்படையில் மது மண்டை ஆட்ட,

அடுத்து இவளையே இப்படி அப்படி என கேள்வி கேட்டு யோசிக்கவிட்டு கொஞ்சமா கத்த கூட விட்டு இவள் பதிலுக்கு அவன கதறடிச்சி, சுரங்கம் தோண்டும் போது உண்டாகும் அதிர்வை குறைக்க வகை செய்யும் ஒரு கருவியை வடிவமைத்தார்கள் இருவரும். மூன்று வாரத்துக்குள் இது என்பது இமாலய சாதனையாகத்தான் பட்டது மதுவுக்கு.

இங்கு பால்கனியோ மதுவுக்காக முன்பே நாமக்கல்லில் ஒரு பள்ளியை தெரிந்தெடுத்திருந்தான். முதல் காரணம் மது தமிழ் வழிக் கல்வி பயில்பவள். ஆக அவன் நினைத்தது போல் டெல்லி முசோரி என கொண்டு போய்விட வழி இல்லை. அடுத்த காரணம் சாருமதி தன் மகளை தேடுவது என்றானால் முதல் இலக்கு சென்னை போன்ற பெருநகர பள்ளிகளாகத்தான் இருக்கும்.

தமிழ்வழிப் பள்ளிகளில் மட்டுமே மது படிக்க முடியும் என்பதால் ஊரைக் கண்டு பிடித்துவிட்டால் ஒவ்வொரு பள்ளியாக தேடியே எளிதாக மதுவை சாருமதியால் கண்டுபிடித்துவிட முடியும்.

ஆக சாருமதியால் யூகிக்க முடியாத சிறுநகரங்கள் மதுவுக்கு பாதுகாப்பானது என எண்ணி இந்தப் பள்ளியை ஏற்ற ஒன்றாக முடிவு செய்து எல்லா ஏற்பாடுகளையுமே செய்திருந்தான் அவன்.

இப்போது இந்த அண்ணன் தங்கை திட்டப்படி மது செமினாருக்கு அவளது பள்ளி குழுவினரோடு பெங்களூர் செல்ல வேண்டும், எல்லோரும் பார்க்க இவனே சென்று அவளை வழி அனுப்பி வைப்பான். அடுத்து இவன் யார் கவனத்திலும் படாமல் நாமக்கல் சென்று காத்திருப்பான். மது பெங்களூருவிலிருந்து அவளாக கிளம்பி நாமக்கல் வந்துவிட, இவன் அங்கு அவளுக்கு ஏற்பாடு செய்திருக்கும் பள்ளியில் சேர்த்துவிட்டு, அவளுக்கென பார்த்திருக்கும் விடுதியில் உரிய விதமாய் அமர்த்திவிட்டு வர வேண்டும்.

வேணியும் பால்கனியுமாகத்தானே மதுவை சாருமதியிடமிருந்து காப்பாற்றுவதாக உடன்படிக்கை. ஆனாலும் இதை வேணியிடம் இப்போது சொல்ல வேண்டாம் என்றுவிட்டான் மதுவிடம்.  “நாமக்கல்ல நீ செட்டில் ஆன பின்ன இங்க எதுவும் இஷ்யூ இல்லைன்னு ஆனதும் வேணிட்ட சொல்லிக்கலாம், இல்லன்னா அவளுக்கு விஷயம் தெரிஞ்சும் SP சாருக்கு சொல்லலைன்னு சாருக்கு தோணும், எப்படியும் நாம சார்ட்டயே கூட இதை பின்னால மறைக்க போறது இல்லதான், ஆனா இப்பவே சொல்ல வேண்டாம்தானே! சார் இதெல்லாம் புரிஞ்சுக்கிற ரகம்தான். ஆனா ஆயிரத்தில் ஒரு வாய்ப்பா, இதை வேண்டாம்னுட்டார்னா நாம அவர மீறி செஞ்சோம்னு இருக்க கூடாது” என அவன் சொல்ல, மதுவுக்கும் இது சரியென்றே பட்டது.

இதில் மது பள்ளி குழுவினரோடு செமினாருக்கு கிளம்ப வேண்டிய நாள் வந்தது. அன்று இரவு பெங்களூர் கிளம்பிய ட்ரெயினில் உற்சாக ஊற்றான மதுவை அனைவரும் பார்க்க அவளது பள்ளிக் குழுவினருடன் வழி அனுப்பினான் பால்கனி. மொத்தக் குழுவுக்கும் ஐஸ்க்ரீம் ஸ்பான்சர் செய்தான் அவன்.

இதில் மறுநாள் இருள் கூட பிரியாத நேரத்தில் பால்கனி நாமக்கல் கிளம்பிவிடுவதாக ஏற்பாடு. அதற்காக தன் காரில் அவன் தன் லக்கேஜை இரவே எடுத்து வைத்துக் கொண்டிருந்த நேரம் வருகிறது ஒரு அலைபேசி அழைப்பு. அழைத்தது இன்ஸ்பெக்டர் வாசன்.

“சார் கேட்டீங்களே அந்த புலிகாரன பத்தி SP சார் எங்க தேடுறார்னு, நான் கூட சொன்னனே அவன் ஒரு சர்க்கஸ்காரனா இருப்பான்னு சார் நினைக்கார். அப்பதான் கூட்டமா அவங்க இடம் பெயர, திருட வசதியா இருக்கும்னு நினைக்கார் போலன்னு. பெங்களூர் தூத்துகுடி ஸ்டெரெச் எதாவது சர்க்கஸ் இருக்கான்னு பார்க்கச் சொன்னார்னு, இப்ப ஒரு நாலஞ்சு நாளா அங்க பெங்களூர்லதான் SPசார் சுத்திகிட்டு இருக்காப்ல. சைனீஸ் சர்கஸ்னு பேர் சார். அத தான் டார்கெட் செய்துருக்காங்க போல. எப்படியும் இத்தன நாள் சார் அங்க இருக்கார்னா அந்த புலிக்காரனுக்கு  ஏதாச்சும் ட்ராப் செட் செய்துருப்பார். உங்களுக்குத்தான் தெரியும்ல நம்ம SP சார் ட்ராப் செட் பண்ணி ஆட்கள பிடிக்கதுல கில்லாடின்னு, அந்த புலிக்காரன் மாட்னதும் எந்த ஜெயில்ல வச்சுருக்காங்கன்னு சொல்றேன் சார், வேணும்னா வந்து நாலு கும்மிட்டுப் போங்க” என்றார் அவர்.

இது இவன் வாழ் நாளைக்கும் கிடைக்க முடியாத ஒரு வாய்ப்பல்லவா? அதை இவன் எப்படி தவறவிடவாம்? ஆக உடனடியாக தன் திட்டத்தை மாற்றி அமைத்து இப்போதே பால்கனி விமானம் மூலம் கிளம்பிப் போனது பெங்களூருக்கு. போய் ஹோட்டல் லீலா பேலஸில் ஒரு அறை எடுத்து தூங்கிப் போனவன், காலையில் முதல் வேலையாக ரென்ட் அ கார் முறையில் ஒரு லேண்ட் ரோவர் காரை வேறு எடுத்துக் கொண்டான். சீனா இருக்கணும்ல!

அடுத்து இவன் செமினார் நடக்கும் இடத்திற்கு சென்று சேர்ந்த நேரம், காரிலிருந்து இறங்கிய இவனை முதலில் பார்த்தது சற்று தூரத்திலிருந்த மதுதான். க்ரீம் கலர் பேண்ட்ஸ், ஒருவித டார்க் க்ரே ஷர்ட், கிட்டத்தட்ட அவன் ஷர்ட் கலரிலியே கார். சன் க்ளாஸ் வேறு கண்ணில்.

ஒன்றுக்கு ரெண்டு முறை பார்த்துவிட்டு பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டது மது. அவளுக்கு இவனை அடையாளம் தெரியவில்லை என்பது புரிகிறதே.

தன் குழுவினரோடு நின்றிருந்தவளிடம் “ஏய் மதுமா என்ன இங்க நிக்கிறீங்க, ப்ரெசென்டேஷன் ஆரம்பிச்சிருக்குமே” என்றபடி இப்போது இவன் போய் நிற்க,

“அச்சோ அண்ணா நீங்கதானா? இந்த ராதிகா கூட ஸ்டேஷன் வந்தாங்கல்ல அந்த உங்கண்ணா போல இருக்குன்னு சொன்னா, நீங்க இங்க வரலைன்னு சொன்னீங்களேன்ணா” என துள்ளலாகவே இவனிடம் வந்தாள் அவள்.

அருகில் வரவும் மேலும் கீழுமாக இவனை ஒருமுறை பார்த்துக் கொண்டாள் அவள்.

ஆரம்பத்தில் ஓரளவு சதைபாங்காக இருந்த இவன் கொஞ்சம் கொஞ்சமாக உடல் இளைத்து வருவது போல் தோன்றும் அவளுக்கு. “உடம்ப பாருங்கண்ணா இளச்சுகிட்டே போறீங்க” என்றால் “அதெல்லாம் பக்காவா பார்த்துகிட்டே இருக்கேனே” என பதில் வரும்.

“டயட் அது இதுன்னு வேணி போல மெலிஞ்சிடணும்னு கஷ்டப்படுறீங்களோ” என ஒருதரம் இவள் யூகித்து கேட்டதற்கு அவனிடமிருந்து பதிலே வரவில்லை.

அடுத்த பக்கம்