துளித் தீ நீயாவாய் 24 (3)

ஏற்கனவே இவளது ஒரு கையை பிடித்து வைத்திருந்த ப்ரவி அதை சட்டை செய்யாதது போல் இவள் அமர்ந்து இருப்பதால், கருண் எழுந்து போனதும் இன்னுமாய் சீண்டவென, பால் அல்வாவை ஒற்றை விரலால் எடுத்துக் கொண்டிருந்த அவளது அடுத்த கை விரலை இனிப்போடு தன் வாய்க்குள் விட்டெடுக்க,

ஒரு வகையில் அவள் கையிலிருந்ததை இவன் சாப்பிட்டான் என்றதான சின்ன நிகழ்வுதான் இது, ஆனால் பவிக்கு பக்கவாட்டு நெற்றி முதல் பாதத்திற்கு சற்று மேல் வரை சிலிர்த்துவிட, காதல் என்பதைத் தாண்டி ஆசை என்ற ஒன்றை அது நியாபகப் படுத்திவிட, “சீ போடா, எப்பவும் இதானா உனக்கு” என்றபடி விரலை வெடுக்கென உருவிக் கொண்டாள் இவள்.

அதோடு “கையவிடு முதல்ல” என எழுந்து போய் கையை வேறு கழுவிவிட்டு வர,

அந்நேரம் கருணும் வந்து சேர, அடுத்தெல்லாம் கருண் ஏன் வந்தான் என்பதைப் பற்றியே பேச்சு சுழன்று முடித்தது. லினி வீட்டினர் நாளை இங்கு வருகின்றனர். அந்நேரம் பவியும் தயாளனும் மட்டுமாய் நின்று எல்லா ஏற்பாட்டையும் கவனிப்பது கஷ்டமாகும் எனத் தோன்ற, விடுமுறை கேட்டுப் பார்த்திருக்கிறான் அலுவலகத்தில், அதுவும் கிடைக்க கிளம்பி வந்திருந்தான் கருண்.

“நீ வர்றன்னு தெரிஞ்சா என் ரெண்டு நாள் லீவ காலி செய்திருக்க மாட்டேன்” என அவன் ப்ரவியிடம் புலம்பிக் கொண்டிருக்க,

“பவிமா நீ போய் முதல்ல படு, இவனுங்கட்ட இருந்து பேசிகிட்டே இருந்தன்னா காலை வரைக்கும் வில்லடிப்பான் சின்னவென்லாம், உனக்கு உடம்புக்கு ஒத்துக்காது” என இப்போது தயாப்பா சொல்ல,

இவள் கிளம்பி இவர்களுக்கான அறைக்கு வந்தும்விட்டாள்.

இவளுக்கு ப்ரவிட்ட நிறைய வில்லடிக்கணுமே! அதுக்கு அவன் சீக்கிரம் வந்தாகணுமே! அவன் வருவான் என வெகு ஆவலாக இவள் காத்திருக்கத் துவங்கினாள். அவன் வாங்கி பரிசளித்த அந்த கட்டில் மேல்தான் அமர்ந்திருந்தாள்.

‘போடா நான் இன்னும் உன்னை சைட் அடிக்க கூட செய்யல, நீ மட்டும் சைட் அடிச்சு லவ் பண்ணி கல்யாணம் செய்துருக்க’ அடிக்கடி அவள் புலம்பிக் கொள்ளும் ஒரு டயலாக்கை நினைத்து சிரித்துக் கொண்டிருந்தாள் அவள். இன்னைக்கு அவன் வந்த நேரத்துல இருந்து என்ன செய்திருக்காளாம் இவள்? அதைத்தான் நினைத்து இந்த சிரிப்பு. தட் ஹை நானும் சைட் அடிச்சுட்டேன் மொமன்ட். அவன் மீது தனக்கிருப்பது வெறும் அன்புதான், ஈர்ப்பு என அவன் மீது எதுவுமில்லையோ என அவளுக்குள் இருந்த குறைபாடு நீங்கிப் போயிருந்தது. உண்மையான திருமணத்தில் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வந்துவிடுகிறதா? அல்லது பிரிவில் தம்பதிகளுக்குள் இந்த ஈர்ப்பு உண்டாவது இயல்பானதா? இதெல்லாம் இவளுக்குத் தெரியாது. ஆனால் இது  பிடித்திருக்கிறதுதான்.

ஆனால் இந்த ஈர்ப்பு காந்தப் புலம் எல்லாவற்றையும்விட திருமண வாழ்க்கையில் இவள் அனுபவித்துக் கொண்டிருக்கும் அந்த இயல்பான அன்புதான் உண்மையில் படு ஆழமானதாகப் படுகிறது. அதையே அனுபவித்தபின் இதையெல்லாம் காதல் என யோசிக்க அபத்தமாகக் கூட இருக்கிறது. அதுதான் உண்மையில் காதல் போலும்.

“போடா என் லவ்தான் எடுத்ததுமே ஸ்ட்ராங்கா ஆரம்பிச்சுருக்கு” தன்னைத்தானே பாராட்டிக் கொண்டாள்.

இதையெல்லாம் அவனிடம் இவள் கதையளக்க காத்திருக்க, புதிதாய் பிறந்திருக்கிறதே ஒரு காந்தப்புலம், அது வேறு இவள் எதையெதையோ எதிர்பார்க்கச் சொல்லி அதகளப்படுத்திக் கொண்டிருக்க,

சற்று நேரத்தில் வந்த அவனோ, “பாவம் உன் தூக்கத்த கெடுத்து ரொம்ப லேட்டாக்கிட்டேன், நீ படுத்துக்கோ, நான் இங்கதான் இருப்பேன், ஒரு சின்ன வேலை, அதை முடிச்சுட்டு வந்து படுக்கிறேன், காலைல நான் சீக்கிரமே கிளம்ப வேண்டி இருக்கும்,  நாளைக்கு லினி வீட்ல வந்துட்டு போனதும் கருணும் அண்ணாவுமா உன்னை அங்க நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடுவாங்க” என்றுவிட்டு,

“குட் நைட்” என அறையிலிருந்த சோஃபாவில் போய் அமர்ந்து கொண்டான். கொண்டு வந்திருந்த தன் லேப் டாப் பேகை வேறு திறக்கத் துவங்கினான்.

அசந்து போனாள் பவி எனதான் சொல்ல வேண்டும். ஏனெனில் அவளுக்குத் தெளிவாகவே புரிகிறது அவளவனுக்கு கோபம் என. ப்ரவியின் கோபம் எப்படி இருக்கும் என இவளுக்குத் தெரியாது எனச் சொல்லிவிட முடியாதுதான். மற்றவர்களிடம் அவர்களது செயலுக்குத் தக்க கோபம் கொள்வான்தான். ஆனால் இவள் வரையில் அவன் கோபப் படுவானா என்பதே கேள்விக் குறிதான். சில நேரங்களில் இவள் செயல் பிடிக்கவில்லை எனில் அவன் கண்களில் கோபத்தை பார்த்திருக்கிறாளோ? அதுதான் அளவு. ஆனால் இப்படி மூஞ்சை தூக்குததெல்லாம் புது அனுபவம்.

“ஆக கசினா இருக்க வரைக்கும்தான் கோபபட மாட்டீங்க, அவளையே கல்யாணம் செய்துக்கிட்டா கோபபடலாம் போல” என்றபடி இப்போது அவனை இடித்துக் கொண்டு போய் அமர்ந்தவள் அவன் கையை வேலை எதுவும் செய்ய முடியாதவாறு இறுக்கிப் பற்றிக் கொள்ள,

அவளை ஒரு பார்வை பார்த்தான் அவன். பின் எதுவும் சொல்லாமல் இவள் கையை அவன் பிரித்துவிட முயல,

“கல்யாணத்தன்னைக்கு நைட் நீ என்ன கும்முன கும்முக்கே நான் சண்ட போடலையே, என்னப் பார்த்தா கல்யாணம் செய்ததும் சண்டை போடுறன்ற நீ” பவி இப்போது ப்ரவி போல் மிமிக் செய்தாள். அவன் பார்வையை இப்படி மொழிபெயர்த்தாள்.

இதற்கு அவனின் பார்வை கூட கிடைக்கவில்லை.

“என்னன்னு நிதானமா சொல்ல முடியாத அளவு கோபம்னா கத்தவாவது செய், தாங்கிப்பேன் ப்ரவி, ஆனா பேசாம இருந்தன்னா என்ன செய்வேன்?” இவளது இந்தக் கேள்வியில் இப்போது இவளை ஒரு பார்வை திரும்பவும் பார்த்தான். அவன் கோபம் கரைந்திருப்பது இவளுக்குப் புரிகிறது.

“என்னாச்சுப்பா?” அவன் தாடை பற்றி இப்போது இவள் கேட்க,

பச் என்றபடி அவள் கையை அவன் எடுத்துவிட,

அதே நேரம் சட்டென இவளுக்கு உறைக்க, “எப்பவும் இதானா உனக்குன்னு நான் கேட்டத மனசுல வச்சுகிட்டு நீங்க டிஸ்டென்ஸ் மெயின்டெய்ன் செய்றீங்களாங்கும்?” என்றவள்,  அவன் எதுவும் சொல்லும் முன்னும் அவன் மீது விழாத குறையாக இறுக அணைத்திருந்தாள்.

அடுத்த பக்கம்