துளித் தீ நீயாவாய் 24 (2)

என்னதான் தனக்கு தட்டு சாப்பாடு என அதுவரைக்கும் தனக்குத் தானே பரிமாறிக் கொண்டிருந்தாலும் கருணின் கண்கள் அதுவரைக்கும் அவர்கள் மீதே இருக்க, இப்போது தன் தட்டோடு போய் நின்று கொண்டது.

பின் சட்டென நியாபகம் வந்தவனாக “டேய் இப்பதான ரெண்டு பேருமா முதல் தடவ வீட்டுக்கு வந்திருக்கீங்க, ஒரே ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க” என அவன் எழுந்து ஓட,

தன்னவளைப் பார்க்க என்றுமட்டுமே ஓடி வந்தவன்தானே ப்ரவி.  பார்க்கவும் கழுத்தோடு இழுத்துக் அணைத்துக் கொள்ளத்தான் அவனுக்கு விருப்பம். தன் தாயை, தகப்பனை, சகோதரனை, சகோதரியை, குழந்தையை, நண்பனை என யாரையும் பார்க்கவும் பாசமாய் அணைத்துக் கொள்வதை அனுமதிக்கும் சமூகம் அதே உரிமையை ஒருவனுக்கு தன் மனைவியின் மீது தருகிறதா என்ன?

ஆக வந்த நொடியிலிருந்து இதுவரைக்கும் அதற்கு வாய்ப்பே அமையாமல் போக, கிடைத்த இந்த அரைகுறை தனிமையில், எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்தான்.

தனக்கு அடுத்து அமர்ந்திருந்த அவளை தோளோடு வளைத்துப் பற்றி சற்றாய் தன் புறம் இழுத்துக் கொண்டவன்,  அவள் கன்னக் கதுப்பில் இதழ் ஒற்ற முனைய, இவன் இழுத்த வகையில் அனிச்சையாய் அவள் இவன் புறம் திரும்புவாள்தானே அதில் அவள் இதழிலேயே இவன் இடம் எடுக்க,

ப்ரவிக்கோ இதில் சிரிப்பு வந்துவிட்டது என்றால், அவனை பார்க்கவே தடுமாறிக் கொண்டிருந்த பவிக்கு எப்படி இருக்குமாம். எலெக்ட்ரிக் ஷாக் அடித்தது போல் எதிர்பாரா இந்நிகழ்வில் அவளுக்குத் தூக்கி வாரிப் போட, அவள் அச்சோ என மிரண்டு போய் சுற்றும் முற்றும் யாரும் இருக்கிறார்களா எனப் பார்த்துவிட்டு இப்போது இவனை முறைக்க, பின்ன எங்க வச்சு விளையாடுவது என இருக்குதானே!

ப்ரவிக்கோ இது இன்னும் ஸ்வாரஸ்யம் கூட்ட, இப்போது முறைத்துக் கொண்டிருந்தவள் கன்னத்தில் இவன் வெகு வெகு நிதானமாய் ஒன்று கொடுக்க, அவளோ இதையும் எதிர்பார்த்தாளாமா என்ன? “அச்சோ, தொடாத, அடி பிச்சுடுவேன்” என்றெல்லாம் சின்னஞ்சிறு குரலில் மிரட்டியபடி இவனை விலக்கித் தள்ள, அதில் இவனைத் தொட்ட அவளது இடக்கையை அவளால் உருவ முடியாத படி  பிடித்து தன் மடி மீது வைத்துக் கொள்ள,

அப்போது திரும்பவுமாய் வந்து சேர்ந்தான் கருண்.

‘டேய் இவன என் கையை விடச் சொல்லுடா’ என முன்பானால் கருணிடமே இவள் ப்ரவியை போட்டுக் கொடுத்திருப்பாள், ஆனால் இப்போது இதையெல்லாம் யாரும் பார்த்துவிடக் கூடாதெனதான் இவளுக்கு படபடக்க, அந்த வினோதத்தையும் அனுபவித்துக் கொண்டே இன்னுமே இவள் கை அவன் மடியில் இருந்தாலும் ஒன்றுமே நடவாதது போல் கருணைப் பார்த்து ஒரு ஈ.

“முதல்ல இத சாப்ட்டுட்டு அப்றமா சாப்பாடு சாப்டுங்கடா” என்றபடி பவிக்கும் ப்ரவிக்குமாக ஒரு ஒரு இனிப்பை பரிமாறினான் கருண்.

எதிர்பாரா நேரத்தில் இவர்கள் பின்னாக வந்து நின்று இவர்கள் அளவுக்கு குனிந்து மூவரும் வருவது போல ஒரு செல்ஃபியையும் எடுத்துக் கொண்டு தன் இருக்கையில் போய் அமர்ந்து மொபைலை நோண்ட, வேற என்ன செய்வான் அந்த ஃபோட்டோவை லினிக்கு அனுப்ப,

அடுத்த நொடியே அவளிடமிருந்து அழைப்பு வர “அதெல்லாம் வந்துட்டேன், ஊருக்குள்ள வந்துட்டேன்னு சொன்னேன்ல அப்றம் இன்னுமா வீட்டுக்கு வராம இருப்பேன், நீ வர்றப்ப பார், ஊர் ரொம்ப சின்னதுமா,

ஆமா அவனும் வந்திருக்கான், அது அப்படித்தான் நாங்க சொல்லாம கொள்ளாமலே இப்படி ஒன்னு போல நிறைய டைம் செய்து வைப்போம், ட்வின்ஸ்னா அப்படியாகும்னு படிச்சிருக்கேன்,

யெஸ்ஸ்ஸ்ஸ் ஆமா எனக்கும் சாப்பாடு இருக்கு, வேற யாரு பவிதான், அவளுக்கு கஷ்டமா? ஹ ஹா எங்க அவளுக்கு பிடிக்காத ஒரு வார்த்தை யாராவது இங்க பேசிரட்டும் பார்ப்போம், யார் எங்க தயாண்ணாட்ட அடி வாங்குறது? இது பிடிவாதமா அவ சமச்சிருப்பா, பிள்ள சமைக்க ஆசைப்படுதேன்னு சமைக்க விட்டுருப்பார் எங்க தயாண்ணா” வெகு சின்ன குரலில் தன்னவளிடம் கருண் பேசிக் கொண்டே எழுந்து போக,

பவியின் காதில் இது விழுகிறதுதான். தன் கை அல்ல தானே தன்னவன் கைக்குள் சிக்கிக் கொண்டது போல அல்லாடிக் கொண்டிருக்கு அவள் நிலையில் கூட இந்த வார்த்தைகள் அவள் மனதில் கரைந்து கலக்கின்றனதான்.

நடந்ததை பார்த்தவன் போல் அப்படியே அச்சு பிசகாமல் சொல்லிக் கொண்டு போகிறான் இந்த கருண். தயாப்பா எப்போதுமே இப்படித்தான் என்பதால் இப்போதும் இதுதான் நடந்திருக்கும் என அவனுக்குத் தெரிந்திருக்கிறது. இவள் திருமணம் நடந்த அந்த நேரங்கள் கடுமையாய் காயம் செய்திருந்தாலும், அதன் தழும்பு என்றாவது எங்காவது தெரியக் கூடுமாயிருக்கலாம் என்றாலும், அடிப்படையில் இவள் வாழ்க்கையில் எதையும் இழந்துவிடவில்லை இவள். இவள் குடும்பம் என்றென்றைக்கும் போல் இன்றைக்கும் இவளுக்கே இவளுக்கென இருக்கிறதுதான்.

ஒருவாறு மனம் நிறைந்து போனது இவளுக்கு. அடுத்த டைம் லினிட்ட பேசுறப்ப தயாப்பாட்ட இதே சலுகை செல்லம் எல்லாம் அவளுக்கும் கொஞ்ச கூட மாறாமல் கிடைக்கும் என்பதை தெளிவாய் சொல்லி வைக்க வேண்டும் என மனதுக்குள் குறித்துக் கொண்டாள். அது இவள் வீட்டிலுள்ள அனைவரோடும் லினியின் உறவு நன்றாக அமைய அவசியம் அல்லவா? அதோடு அது ஒன்றும் பொய்யுமில்லை. இவளுக்குத் தெரியும் இவள் தயாப்பாவால் வீட்டு பெண்ணை விட ஆண்களை முக்கியப்படுத்த அவருக்கு வராது என. ‘வீட்டுக்கு வர்ற பொண்ண நல்லா வச்சுருக்கவன்தான் ஆம்பிளை’ என்ற ஒரு கலாச்சார நம்பிக்கை உண்டு  இங்கெல்லாம். அதோடு தன் மனைவி பிள்ளைகளை தன்னை விட்டுக் கொடுத்து அன்பு செலுத்தி ஒழுங்காய் நடத்தாதவன் எந்த ஒரு சிறு காரியத்துக்கும் கூட தலைவனாக இருக்க தகுதியற்றவன் என வேதாகமும் சொல்கிறதே. அந்த பின்னணியில் வந்தவர் என்பதால் தயாப்பா அப்படித்தான் இருப்பார். வீட்டு பொண்ணுங்களுக்காகத்தான் பசங்க இருக்காங்கன்னுதான் அவருக்கு யோசிக்க வரும். அவர் கைபட வளர்க்கப்பட்டதாலா? ப்ரவி கருணிடமும் கூட இந்த சுபாவம் அதிகம். இவள் மனம் இப்படி எங்கோ ஒரு சூழ சூழப் பெருகும் சமாதானத்தில் அமிழ்ந்து கொண்டு போக,

அடுத்த பக்கம்