துளி தீ நீயாவாய் 24

“அதெல்லாம் ஒன்னுமில்ல, அந்த குடோன் திருட்டு கேஸ் முடிஞ்சிட்டு, அதான் பவியை கூட்டிட்டுப் போகலாம்னு வந்தேன்” என்றான் ப்ரவி.

அவன் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறன் என்பதெல்லாம் இவள் காதில் விழுகிறதாமா என்ன?

நடந்து கொண்டிருக்கும் அவன் நீண்ட நீண்ட ப்ளாக் ஜீன் கால்கள் முதல் போலீஸ் ஸ்டைல் ஹேர் கட் வரை ஒரு மாய மின்காந்த புலத்துக்கு மையமாகிப் போன நிலையில் இவள் பார்வை பயணித்துக் கொண்டிருக்க, மேக ஸ்தம்பங்களில் மின்னல் பின்னல்கள் பிறக்கும் வகை அறிந்து கொண்டிருந்தாள்.

“என்னதூஊஊ? முடிஞ்சிட்டாஆஆ?” என இப்போது கேட்கிறது ஒரு குரல். கருண் வந்திருந்தான்.

“ஏ மாக்கான் என்னடா செய்து வச்ச நீ? அந்த பொடிசு இப்ப எங்கடா?” அக்கறை ஆர்வம் எல்லாம் இருந்தது அவன் குரலில். கொஞ்சம் ஆதங்கமுமோ? கேட்டபடி அவன் வீட்டுக்குள் வர,

“எரும இங்க என்ன பண்ற நீ?” என ப்ரவி அவனை எதிர்கொள்ள,

“ஏன் நீ மட்டும்தான் சொல்லாம வருவியா? நானும் இனிமே குடும்பஸ்தனாங்கும், அதனால நானும் சொல்லாமலே வருவேன்” என்றபடி இவர்களைத் தாண்டிப் போய் சோஃபாவில் அமர்ந்த கருண்

“ஏய் கொத்துபரோட்டா, இனி இவன் எதாவது கேஸ இழுத்தடிச்சான்னு வச்சுக்கோ பேசாம இங்க கிளம்பி வந்துடு, உன்னை பார்க்கணும்ன்றதுக்காக உடனே கேஸ முடிச்சுட்டு வந்து நிப்பான் பாரு” என இப்போது பவியை பேச்சுக்குள் இழுக்க,

அதில்தான் சற்று சுதாரித்து இயல்பு நிலைக்கு வந்த பவி “ஐய, அறிவு பொங்குது! நாளைக்கு லினி வீட்ல வர்றாங்கள்ல, கூட லினியும் வர்றாளா இருக்கும், அதான் நீ அடிச்சு பிடிச்சு ஓடி வந்திருப்ப, அதுக்கு ஏன்டா எங்கள வம்புக்கு இழுக்க?” என வாயாட,

அப்போது இயல்பாய் இவளை கடந்த ப்ரவி “அவன் சொல்றது நிஜம்தான்மா தாயே, உன்னவிட்டுட்டு ரெண்டு நாள் கூட தாக்குப் பிடிக்க முடியல” என முனங்கிவிட்டுப் போக, குப்பென இவள் தேகமெங்கும் குத்திட்டு நிற்கிறது தேன் கங்குகள்.

என்ன சொல்லிவிட்டானாம் இவன்? இவளுக்குள் ஏனாம் இதெல்லாம்?

“ஹான் என்னது? சொல்லவே இல்ல? அப்படில்லாம் அவ இங்க வரலாமா? கல்யாணத்துக்கு முன்ன பொண்ணு மாப்ள வீட்டுக்கு வந்தா ஊர்ல நல்லா எடுத்துக்க மாட்டாங்கன்னு சொல்லி அவ என்னை தனியா துரத்திவிட்ருக்கா, இருக்கு அவளுக்கு, இப்பவே அவள லீவ போட்டு வரச் சொல்றேன்” என்றபடி கருணோ இப்போது தன் மொபைலை தேடி எடுத்துவிட்டு நிமிர்ந்தால்,

பாவம் பையன் தனியா பேசிகிட்டு இருந்திருக்கான்.

ப்ரவி முன்னே சாப்பாட்டு அறையைப் பார்த்துப் போக அவனுக்குப் பின்னால் ஓடாத குறையாக போய்க் கொண்டிருக்கிறது அவனது குத்துவிளக்கு.

“அஹம் அஹம் அப்படில்லாம் உன்ன தனியா கக்ஷ்ட்டப்பட்டு சாப்பிட விட்டுடமாட்டேன்டா மாக்கான், இதோ நான் வரேன் உன் ஹெல்புக்கு” என இப்போது இவன் வேகமாய் அவர்களை முந்திப் போனவன்

“மாப்ள முதல் தடவ விருந்துக்கு வந்துருக்கார் என்ன க்ஷ்பெஷலா செய்த கொத்துபரோட்டா?” என ப்ரவியை அவன் வீட்டுக்கே மாப்பிளையாக்கி உணவு மேஜை நாற்காலி ஒன்றில் போய் அமர்ந்த கருண்,

“இவனுக்கு பிடிச்ச கோழி ரசம் எதுவும் வச்சியா என்ன?” என்றபடி பாத்திரத்தை திறந்து ஆராய,

அவ்வளவுதான் இங்கு பவிக்கு ‘ஆஹ்’ என ஒரு முறை ஓங்கரித்து அடங்கியது.

“ஏன்டா ரெண்டு பேரும் அவள பாடா படுத்துறீங்க? இவன் என்னடான்னா திட்டுதிப்புன்னு நேரம் கெட்ட நேரத்துல வந்து நிக்கேன்னு ஒரு மெசேஜ் அனுப்புறான், பிள்ள அதை ஒரு விஷயமா எடுத்துகிட்டு ஓடி ஓடி சமையல் செய்துருக்கு, அதுக்குள்ள நாலஞ்சு தடவ வாந்தி ஆகிப் போச்சு, போதாத குறைக்கு இப்ப நீயா? அவளுக்கு நீ சொன்ன வார்த்தைய சொன்னாலே குமட்டுதாம். எவனாவது இனி அது போல எதாச்சும் வாய திறந்தீங்க வாயிலயே வச்சுடுவேன்” என பொரிந்தது வேற யார் தயாளன்தான்.

“சீக்கிரமா சாப்டு முடிச்சு அவள தூங்க விடுங்க” என்றுவிட்டு அவர் வரவேற்பறைக்கே போய்விட,

“ஆஹா என்ன ஒரு மரியாதைடா உனக்கு மாமனார் வீட்ல?” என இதுக்கும் கருண் கிண்டலடிக்க,

ப்ரவியோ இப்போது இவன் பின் மண்டையில் ஒரு தட்டு தட்டியவன் “சாப்டுடா எரும” என்றபடி அடுத்த இருக்கையில் போய் அமர்ந்து கொண்டான். அதோடு அவனோடு வந்த பவியையும் அவனுக்கடுத்து உட்கார கைகாட்டிவிட்டு, அவள் முன்னும் ஒரு தட்டை எடுத்து வைத்தவன் “ரொம்ப டைம் வாமிட் பண்ணிட்டியா பவிமா? ரசம் சாதம் சாப்ட்டா கொஞ்சம் பெட்டரா இருக்கும்ல? கொஞ்சமா சாப்டு என்ன?” என அவளுக்கான தட்டில் பரிமாறத் தொடங்கி, தன் மொத்த கவனத்தையும் அவளை கவனிப்பதில் காட்ட,

பவியோ இப்போது அவனை கண்ணோடு கண் பார்க்கவே தடுமாறினாள். கருண் முன்னிலையில் இவளது ஆள் விழுங்கும் பார்வைகள் அநாகரீகமானது என்ற ஒன்று அவளை செலுத்த தன்னவனை பார்ப்பதை தவிர்த்து தட்டைப் பார்த்தபடியே “ம் கொஞ்சமா போதும், முதல்ல நீ சாப்டு” என சமாளித்துக் கொண்டிருந்தாள்.

அடுத்த பக்கம்