துளி தீ நீயாவாய் 23 (7)

அதற்கு முன்னாக இங்கு மதுவும் கனியும் கிளம்பிச் செல்லவும் தனது காரை எடுத்துக் கொண்டு அமரகுளம் நோக்கி பறந்து கொண்டிருந்தான் ப்ரவி.

“மை டியர் பொண்டாட்டி வீட்டுக்கு வர்றேன், இப்பவே வர்றேன்” இப்படி ஒரு மெசேஜை வேறு தன்னவளுக்கு அனுப்பி இருந்தான்.

அங்கோ அச்செய்தியைப் பார்க்கவுமே பவிக்கு மழை தொட்ட மலர்வனம் போலத்தான் நிலை. இருக்கும்தானே!

அவளென்ன ஆசை ஆசையாகவா அங்கு போய் இருக்கிறாள்? தயாப்பாக்காக மட்டுமே வந்தவள்தானே! இத்தனைக்கும் சரியாய் ஒரு மாதம் முன்புவரை இதுதான் அவளது வீடு. அப்போதைவிடவும் கூட இப்போதெல்லாம் தினமுமே இவளிடம் பேசியும் விடுகிறான் ப்ரவி. ஆனாலும் வெளியே இயல்பாய் இருப்பது போலத் தெரிந்தாலும் உள்ளுக்குள் இவள் உலகம் நிறமற்றுக் கிடந்தது.

இதில் இன்று அவன் சிணுங்கினானே அடுத்தெல்லாம் அப்படியே கிளம்பி அவனிடம் போய்விடமாட்டோமா என்ற ஒரு நிலை. இதில் அவன் வருகிறேன் என்றால் என்னாவாளாம் இவள்?

முதல் காரியமாக அத்தனை மணிக்கு இழுத்துப் போட்டு சமைத்தாள். “அவங்க கண்டிப்பா சாப்டுருக்க மாட்டாங்க தயாப்பா. அப்படியே வெளிய எதாவது சாப்ட்டுட்டு வந்தாலும் வீட்டு சாப்பாடுன்னா இஷ்டப்படுவான்னு உங்களுக்குத் தெரியும்தானே!”

“இத்தனை மணிக்கு அடுப்பில போய் நிக்கவா?” என குறுக்க வந்த தயாப்பாவை இப்படிச் சொல்லி சமாளித்துவிட்டு இவள் பரபரவென சமைத்து முடிக்க,

அடுத்து போய் ஒரு குளியல் போட்டு ஈர முடியுடன் திருத்தமாய் ஒரு புடவை உடுத்திக் கொண்டு இவள் வந்த போதெல்லாம் எதையோச் சொல்ல வாயெடுத்த தயாப்பா ஒன்றும் சொல்லாமல் நிறுத்திக் கொண்டார்.

வேற என்ன ‘இத்தன மணிக்கா குளிப்பா ஒருத்தி?’ என ஆதங்கப்பட்டவர் அதை சொல்லும் முன்னும் அவள் இத்தனை நாட்களில் பகலிலும் கூட ஒரு இரவு உடையைத் தவிர வேறு எதுவும் உடுத்தாமல், சாயந்தர நேரம் கட்டாயம் தலை சீவி பின்னலிட  வேண்டும் என்ற இவரது இந்த வீட்டுச் சட்டத்தின் நிமித்தம் கடமைக்கு அந்நேரம் மட்டும் தலை வாரிக் கொண்டு மத்தபடி முடி பறக்க கிடந்தாள் என்பது அவருக்கு கவனத்தில் வந்துவிட, அடுத்து ஒன்றும் சொல்லவில்லை.

சற்று நேரம் வீட்டு வாசலுக்கும் உள்ளுக்குமாய் அலைந்தவள், “என்னல நீ? ஒன்னும் சொல்லக் கூடாதுன்னு பார்க்கிறேன், ஆனா வயித்துப் பிள்ளைகாரி இப்படி ஓடிகிட்டு இருந்தா எவ்வளவு நேரம் நான் பார்த்துகிட்டு சும்மா நிக்க” என்ற தயாப்பாவின் குரலில்தான் தான் என்ன செய்கிறோம் என்பதையே உணர்ந்தவள்

தன்னை நிலைப்படுத்திக் கொள்ளவென அடுத்து சாப்பாடு பொருட்களை எடுத்து வந்து உணவு மேஜையில் கிரமமாய் வைக்கத் துவங்கினாள். அப்போதுதான் காதில் விழுகிறது ப்ரவியின் கார் சத்தம்.

மொழுக்கென அடி வயிற்றில் உடைந்து வைத்த அமிழ்த குப்பிக்கு என்ன பெயர் என இவளுக்குத் தெரியவில்லை. அதிலிருந்து ஏதோ சுகந்தம் விஷம் போல் விறுவிறென இவளுக்குள் ஏற இவள் நடக்கிறேன் என பேர் செய்து கொண்டு ஓடாத குறையாக வாசலை அடையும் போது, வீட்டிற்கு ஆறு படிகள் உண்டு அதில் இரண்டு இரண்டு படிகளாக துள்ளி ஏறியபடி வந்து கொண்டிருந்தான் இவளவன்.

பொளீரென வெட்டிப் பாய்ந்த முல்லை வாச மின்னல் ஒன்று பாவை இவள் உடல் இடம் வலம் எல்லையெங்கும் பதம் காண்கிறதென்றால், இவள் கன்னக் கதுப்புகளில் கனத்த மென்மையாய் தோன்றிப் படிகிறது மஞ்சள் வண்ண சொர்க்கத் தூவானங்கள்.

ஓடிப் போய் அவன் நெஞ்சுக்குள் ஒண்டிக் கொள்ள ஒன்று உந்தித் தள்ளுகிறது என்றால் மற்றொன்றோ வைத்த கண் வாங்காமல் அவனைப் பார்த்துக் கொள்ள பறக்கிறது.

அவன் அவனது அடையாளமான சன்னப் புன்னகையுடன் வந்தவன் இவளின் இந்த மின்னலை உணர்ந்தானா என்ன? சற்றாய் ஒற்றைப் புருவத்தை அசைத்து என்ன என கேட்கிறானோ?

எப்போதெப்போதையும் விட பேரழகனாய் பட்டான் அவன்.

என்னதிது?!!!! அவனுக்குள் இவள் விழுந்து கொண்டிருக்கும் வேகத்தைத் தாங்க முடியாது இவளே அயர்ந்துதான் போனாள்.

இவன் இவளுக்கு என்றுமே இருந்தவன்தானே! விடுதியில் இருந்து என்றாவது அவன் வருவதும், ஆவலாய் இவள் அவனை எதிர்க் கொள்வதும் வழக்கம்தானே! அவன் பசி சாப்பாடு என எப்போதுமே இவள் அக்கறைப்படுவதுதான். ஆனால் அன்று போல் இல்லையே இன்று இவள் நிலை. அவன் வருகிறேன் எனச் சொன்ன நொடியிலிருந்து இவளை பாய்ந்து செலுத்திக் கொண்டும் பாடாய் படுத்திக் கொண்டும் இருப்பது வேறு எதுவுமோவும் தான்.

இதற்கு மேலெல்லாம் இதைப் பற்றி யோசிக்க அவளுக்கு நேரமோ நிலைமையோ ஏது? படி ஏறியவன் நேராக இவளருகில் வர, அதே நேரம் “வாடா” என வரவேற்றபடி தயாளன் அங்கு வந்து சேர,

“ம் நீங்க எப்படி இருக்கீங்க?” என்றபடி இவளவனோ தன் அண்ணன் புறமாக முகம் திருப்ப, இரண்டு சாண் இடைவெளியில் இவளை கடக்கும் அவன் முகத்தின் ஒவ்வொரு கோணமும் புகைப்படமாகி  இவளுக்குள் பதிய,

அவன் கண், இமைமுடி, நாசி, தாடை என ஒன்றொன்றிலும் விழுந்து எழுந்து கொண்டிருந்தாள் இவள்.

“என்னடா இத்தன மணிக்கு அடிச்சு பிடிச்சு வந்து நிக்க? பிரச்சனை ஒன்னும் இல்லையே” என்ற தயாப்பாவின் கேள்விக்கு, வழக்கத்தைவிடவும் சற்று பெரிதான புன்னகையுடன்,

“அதெல்லாம் ஒன்னுமில்ல, அந்த குடோன் திருட்டு கேஸ் முடிஞ்சிட்டு, அதான் பவியை கூட்டிட்டுப் போகலாம்னு வந்தேன்” என்றான் அவன்.

அவன் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறன் என்பதெல்லாம் இவள் காதில் விழுகிறதாமா என்ன?

தொடரும்…

துளி தீ நீயாவாய் 24

 

வாசகர் 2020 – போட்டி