துளி தீ நீயாவாய் 23 (6)

ஒரு பக்கம் அத்தனை சந்தோஷம் ஒன்று இவளுக்குள் பிய்த்துக் கொண்டு வருகிறது என்றால் மறுபுறம் அடப்பாவமே நல்லா இருக்கணும்னு நினைக்க வேண்டிய நேரத்துல போய் என்னதெல்லாம் நினச்சு வச்சிருக்கேன். பாவம் எல்லாரையும் படுத்தி இருக்கமே! என்றும் இருக்கிறது.

“ரொம்..ரொம்ப சாந்தோஷமா இருக்குது சார், ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார் இத என்ட்ட சொன்னதுக்கு” என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இவள் பால்கனியைப் பார்க்க,

அவன் முகத்திலும் இவளுக்கு மிஞ்சிய மகிழ்ச்சிதான். ஆனாலும் அவனுக்கு வாழ்த்துச் சொல்ல கூட வரவில்லை போலும். கூச்சமோ சங்கோஜமோ வகைப்பட்ட ஒரு புன்னகையில் நின்றிருந்தான் அவன்.

அடுத்தும் ப்ரவி மதுவை சாப்பிடச் சொல்ல,

“வீட்ல பவி இல்லைன்றதால சமைக்க ஆள் வரல, அதனால நான் செய்ற தோசைதான், சாப்டுற அளவுக்கு நல்லாதான் இருக்கும், நீ முதல்ல சாப்டு மது” என ஒரு உரிமையாகவே SPசார் பேசுகிறார் என்றால்,

இங்கோ இவளை சந்தித்திருந்த பால்கனியின் கண்கள், அதீத அவசரமாய் ‘வேண்டாம்’ ‘வேண்டாம்னு சொல்லு’ என கூப்பாடு போடுகின்றன.

அப்படி ஒன்னும் சார சமைக்க விட்டு  இவ சாப்டிட மாட்டாதான், ஆனாலும் இதெல்லாம் கொஞ்சம் டூ மச்சா இல்ல? என்கிறது அவன் பதற்றத்தைக் கண்ட இவள் மனம்.

“கண்டிப்பா உடனே சாப்ட்டுடுவேன் சார், ஹோட்டல் இன்னும் திறந்திருக்கு, வர்றப்ப பார்த்தோம், உங்களுக்கு ஏன் வீண் சிரமம்? நீங்க கேட்டதே சந்தோஷமா இருக்கு” என முறையாய் பதில் சொல்லி இவள் கிளம்ப முறைப்பட,

அப்போதும் பால்கனியிடம் தட் சகஜமின்மை மட்டுமே உட்கார்ந்திருந்தது.

இருவரையும் ஒரு கணம் பார்த்த ப்ரவி, இவர்கள் கிளம்ப தீர்மானமாக இருப்பதை உணர்ந்தவனாக, “சரி இங்க சாப்டுவ, உங்க ரெண்டு பேர்ட்டயும் நிதானமா பேசலாம்னு நினச்சேன், எனி வே, முதல்ல நீ சாப்டுறது முக்கியம், அதனால உடனே கிளம்பு” என விடை கொடுக்க,

அடுத்த சில நிமிடங்களில் இவள் பால்கனியோடு காரில் ஹோட்டல் நோக்கி சென்று கொண்டிருந்தாள்.

“அதென்ன சாரப் பார்த்தா அட்டென்ஷன்ல கூட நிக்க முடியாம அப்படி ஒரு கூச்சம்? சார் உங்கட்ட எவ்வளவு உரிமையா பழகுறாங்க? ஆனா நீங்க இப்படியே தெறிச்சு தெறிச்சு ஓடினா அப்றம் எப்படி? நல்லா பழகிக்க கூட யோசிச்சீங்கன்னா அடுத்து எப்படி பொண்ணு கேட்பீங்க? அப்படியே நீங்க காத்துதான் வருது வாய்ஸ்ல கேட்டுட்டாலும் அவங்க எப்படி தருவாங்களாம்?”

“சார் வந்து தோசை செய்து தர்றேன்னார், அவ்வளவு தூரம் அவங்க சொன்னதுக்கு, நானா இருந்தா நீங்க என்ன சார் செய்றது, நம்ம வீடுதானேன்னு உரிமையா போய் நாமளே செய்து சாருக்கும் கொடுத்துட்டு வந்திருப்பேன்! பாவம் சாரும் சாப்ட்டாரோ இல்லையோ?”

இவள் பொறிந்து கொண்டே வர, மறுப்பே சொல்லாமல் அத்தனை அர்ச்சனையையும் வாங்கிக் கொண்டு வந்தான் அவளால் அர்ச்சிக்கப் பட்டவன்.

“என்ன நீங்க? நான் பாட்டுக்கு பேசிகிட்டே இருக்கேன்?” என அடுத்தும் எகிறியவள், சட்டென எழுந்த ‘பள்ளியிலிருந்து கிளம்பும் போது இவள் எப்படி வந்தாள்? எவ்வளவு தூரம் அவன் கெஞ்சிக் கொண்டு வந்தான்? இப்போதும் அவன் எத்தனை அமைதியாக இவள் திட்டுகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறான்’ என்ற உணர்வில், மனம் அவனிடம் நெகிழ்ந்துவிட

“என்னண்ணா நீங்க? வேணிக்கு பவியண்ணி குடும்பம் எவ்வளவு முக்கியம்னு உங்களுக்கு நல்லாவேத் தெரியும். அதில் அவங்களா பழக வர்றப்ப கூட நீங்க விலகிப் போகக் கூடாதுல்ல” என வெகுவாக இறங்கிய தொனியில் ஆதூரமாய் தெரிவித்தாள்.

பின் அதுவும் போதாதெனத் தோன்ற “ரொம்ப படுத்துறேன்லண்ணா உங்கள?” என குற்ற உணர்வு மேலிட அவள் கசிய,

‘லூசா நீ?’ என்பது போல இப்போது மட்டும் இவளைத் திரும்பிப் பார்த்தவன், “நீ சொல்ற எல்லாமே சரின்றதாலதான் என்ன சொல்லன்னு தெரியல” என தன் நிலையைக் குறிப்பிட்டவன், “சார் வீட்ல சகஜமா இருக்கணும்னு எவ்வளவோ நினச்சேன் தான், ஆனா முடியல மதும்மா” என ஒத்துக் கொள்ளவும் செய்ய,

“ஏன்ணா?  எல்லார்ட்டயும் அவ்வளவு கான்ஃபிடென்ட்டா மூவ் பண்ணுவீங்க, சார்ட்ட மட்டும் என்ன? மரியாதைங்கிறது வேற இது வேறல்ல” என வருகிறது இவளது ஊக்குவிப்பு மற்றும் அணுசரனை. இது தாழ்வுமனப்பான்மை என்கிறாள்.

அவனிடமிருந்து இதற்கெல்லாம் பதிலேதும் வரவில்லை. இவள் மனதில்தான் அவன் தன் தொழிலைக் கூட ‘நாங்கதான் கேரளா முழுசுக்கும் காய் அனுப்புறமாங்கும்’ என வெகு உயர்வாகத்தான் பேசுவான் என்பதெல்லாம் வந்து நிற்கிறது.

படிப்பு சம்பந்தமானால் மட்டும்தான் “என்ன இருந்தாலும் நான் படிக்கலைல” என சற்று தொனி அவனுக்கு தாழும் என்பதும் கருத்தில் வர,

“ஏன்ணா SP சார் வீட்ல எல்லோருமே ரொம்ப படிச்சவங்கன்னு யோசிக்கீங்களா?” என மனதில் பட்டதைக் கேட்டாள். ஒரு பெருமூச்சு மட்டும் வருகிறது அவனிடமிருந்து.

அதை அவனது ஆமோதிப்பாக புரிந்தவள் “என்னண்ணா நீங்க? இருக்கதிலேயே பெஃஸ்ட் சிஎம்னு நாம இப்பவும் காமராஜரத்தான் சொல்றோம், அவர் படிக்காதவர்தானே! அதே நேரம் அவர ஏன் பெஸ்ட்னு சொல்றோம்? பிள்ளைங்க படிப்புக்கு அவர் கொடுத்த முக்கியத்துவம்தான் முதல் காரணம். அப்படிப் பார்த்தா நீங்களும்தான் இங்க எத்தனை பேர் படிப்புக்கு எவ்வளவு எஃபெர்ட் எடுக்குறீங்க? அப்றம் என்ன?” என தீவிரமாய் எடுத்துப் பேச,

அவனோ இதுவரை இருந்த இறுக்கம் எல்லாவற்றையும் இழந்தவனாக, பின்னே இவனை இப்படியெல்லாம்  யாராவது என்றாவது சீராட்டி இருக்கிறார்களாமா என்ன?  “மதும்மா காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுன்னு சொல்வாங்கதான், ஆனாலும் இது உனக்கே ஓவராத் தெரியல?” என கிண்டலுக்கு வர,

“உங்களுக்கு ஆசையா இருந்தா, நீங்க வேணா காக்கா குஞ்சா இருந்துட்டுப் போங்க, நான்லாம் காக்காவா இருக்க முடியாது” என இவள் அதற்கு முறுக்க,

வாய்விட்டு சிரித்தான் அவன்.

அதே நேரம் இவர்கள் நாடிச் சென்ற ஹோட்டலும் வந்துவிட, இவளுக்கு உணவு வாங்கவென பால்கனி இறங்கிச் சென்றுவிட, இந்தப் பேச்சு இதோடு முடிந்து போனதாகத்தான் பால்கனி நினைத்தான்.

ஆனால் கடவுளின் கணக்கு வேறல்லவா?

அடுத்த பக்கம்