துளி தீ நீயாவாய் 23 (5)

அவள் முழு மொத்தமுமே இலகுவாகிவிட்டதே முழு நிம்மதியைத் தர, அதோடு ப்ரவியே வரச் சொன்ன பிறகு இவனால் உள்ளே வராமலும் இருக்க முடியாது எனப் புரிய, ப்ரவி நின்றிருந்த வாசலை நோக்கி நடக்கத் துவங்கினான் பால்கனி.

ப்ரவியின் கண்களோ தன்னை நோக்கி வரும் பால்கனியின் மீதே நிற்க, அவனோ வெகு அருகில் வரும் வரையும் ப்ரவியை நேர்க்கொண்டு பார்க்கவில்லை. பின் அப்போதுதான் உணர்ந்தவனாக பெரிதாக ஒரு கும்பிடு “வணக்கம் சார்” என வருகிறது அவனது வார்த்தைகள்.

அதற்கு ப்ரவி “வாங்க பால்கனி, என்னதிது பவி மட்டும் அண்ணி, நான் சாரா?” என்றபடி பால்கனியின் கூப்பி இருந்த இரு கைகளை தன் ஒற்றைக் கையால் பற்றிக் கொண்டவன், அடுத்த கையால் பால்கனியின் முதுகில் நட்பாய் ஒரு தட்டல். உரிமை வாசம் தூக்கல் அதில்.

“நினச்சதவிடவும் யூ லுக் வெரி ஸ்மார்ட்” என்றான் அடுத்து. இங்கு பால்கனி நெளிந்தான்.

“தேங்க்ஸ் அண்ணா” ஒன்று மெல்லியதாய் வெளிப்பட்டது அவனிடமிருந்து.

இதையெல்லாம் ஒருவித ரசனையோடு பார்த்துக் கொண்டே வந்த மது, இவன் முதுகுப் புறமாக நின்று கொண்டு அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் “காத்துதான் வருதுன்னுதான சொன்னீங்க?” என இவனது பேச்சுத் தொனியை கிண்டலடிக்க,

இதில் ப்ரவியே பக்கென சிரித்துவிட, ஐயையோ சார்க்கு கேட்டுட்டு போலயே என ஒரு பேந்த முழியில், அடுத்து ஒரு ஈஈஈஈ பாவத்தில் இவள் சமாளித்தாள்.

“என்ன மது உங்கண்ணாவ ரொம்பவும் டென்ஷனாக்கிட்டப் போல” என ப்ரவி தன் கவனத்தை இப்போது இவள் மீது கொண்டு வர,

“அ..அது, பவி மேம் நல்லா இருக்காங்களா? அன்னைக்கு அவங்களப் பார்த்ததுல இருந்து. ரொம்ப கஷ்டமா போய்ட்டு, இப்ப அவங்க தூங்கி இருப்பாங்க என்ன?” என இவள் இங்கு வந்த பிரச்சனையைத் துவங்கினாள்.

அடுத்தெல்லாம் பேச்சு பவி பற்றி திரும்பிவிட்டது.

“முதல்ல உள்ள வாங்க ரெண்டு பேரும்” என உள்ளே அழைத்த ப்ரவி, மதுவும் பால்கனியும் நுழையவும் அவர்களுக்குப் பின்னாக உள் வந்தவன்

“உள்ள அடுத்த ரூம் டைனிங் ரூம், அதில ஸ்வீட் பாக்ஸஸ் இருக்கும் பாரு, அதில் கொஞ்சம் எடுத்துட்டு வாயேன்” என இவளிடம் கேட்டான்.

உள்ளே சென்ற மது கண்ணில் படுகிறது மேஜை மீது அடுக்கி இருந்த கருண் வாங்கிய இனிப்பு பெட்டிகள். ஒன்றொன்றும் ஒரு கிலோ அளவாவது இருக்கும். இத்தனை இனிப்பு எதற்கு வீட்டில்? சார் வீட்ல என்ன விஷேஷம்? அட பங்க்ஷன் எதுக்குமா மேம் போயிருக்காங்க, அதுக்கா இவ்வளவு சீன் கிளப்பிட்டேன்..சே! தொல்ல பண்ணி இருக்கேன் என எதெல்லாமோ யோசித்தபடி சென்றவள் இனிப்பை எடுக்க அருகில் எதாவது இருக்கிறதா எனப் பார்க்க,

மேஜையில் கிடந்த புத்தகங்கள் ஒன்றில் நீட்டிக் கொண்டிருந்த ஒரு வெள்ளைக் காகிதம் கண்ணில் பட, அது வெற்றுக் காகிதமாக இருக்கும் பட்சத்தில் அதை பயன்படுத்தலாம் என அதை இவள் உருவினாள்.

அதில் கறுப்பு மை பேனாவால்  V ——>   N என எதோ எழுதப்பட்டிருப்பதுதான் முதலில் கண்ணில் படுகிறது. எதுவும் தேவையான குறிப்பாக இருக்குமோ என நினைத்தபடி இவள் மீண்டும் அதை எடுத்த இடத்திலேயே வைக்கப் போகும் போதுதான் சட்டென மனதில் பல்ப் எரிகிறது இவளுக்கு. V என்பது வேணி, N என்பது நரேன் என.

“அதென்னணா உங்களுக்கு பால்கனின்னு நம்ம ஊர்பக்க பேர், பூனம்க்கு மட்டும் அங்க உள்ள பேர்?” என இவள் கேட்டதுக்கு ஒருவித முகம் சுண்டலோடு “என்னையும் அம்மா நரேன்னுதான் கூப்டுவாங்க” என இவளது அண்ணன் குறிப்பிட்டது இவளுக்கு ஞாபகம் இருக்கிறது.

இதில் ‘ஆக SP சாருக்கும் வேணிய அண்ணாவுக்கு கொடுக்க மனசு இருக்கோ?’ எனத் தேன் மின்னல் ஒன்று தெவிட்டத் தெவிட்டத் இவளுக்குள் தோன்றிவிட, அந்த காகிதத்தை இப்போது கவன கவனமாக மீண்டும் ஒரு முறை பார்த்தாள்.

V  ——>     N தவிர அந்த V யிலிருந்து அடுத்த அம்புக்குறி CC என எதையோவையும் பார்த்து நீண்டிருக்க,

இன்னும் எதெல்லாமோ வேறு எழுதி இருக்கவும் ‘சே ஆனாலும் உனக்கு ஓவர், இப்படித்தான் வேணிக்கும் அண்ணாவுக்கும் கல்யாணம்னு SP சார் எழுதிப் பார்க்காங்களாங்கும்’ என தன்னைத்தானே மானசீகமாக குட்டிக் கொண்டவள்,

‘இது என்ன சப்ஜெக்ட்டா இருக்கும்?’ என அவளுக்கு இருக்கும் படிப்பின் ஆர்வத்தால் இயல்பாய் வந்த கேள்வியின் நிமித்தம், அந்த காகிதம் இருந்த புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தாள். சாயில் ஃபிஸிக்ஸ் என்றிருந்தது.

பிஸிக்ஸ் அவளுக்கு பொதுவாகவே வெகு விருப்பமான பாடம், ஆனால் இந்த சாயில் பிஸிக்ஸில் என்ன படிப்பார்கள் எனப் புரியவில்லை, ஆக பக்கத்தில் இருந்த அடுத்த புத்தகத்தின் தலைப்பையும் பார்த்துக் கொண்டவள் கண்டிப்பாக இதைப் பற்றி வேணியிடம் கேட்க வேண்டும் என முடிவு செய்து கொண்டாள்.

இதுதான் பால்கனி சென்று சரணடைய முக்கிய காரணியாக அமையும் என, எந்த உள்நோக்கமும் இன்றி புத்தகத்தை அங்கு விட்டு வைத்திருந்த ப்ரவி கூட கற்பனை செய்திருப்பானா என்ன?

அடுத்து இவள் ஒரு முழு பெட்டியாகவே இனிப்பை எடுத்துப் போக,

‘முதல்ல நீ எடுத்துட்டுட்டு உங்க அண்ணாவுக்கும் கொடு” என உபசரித்த ப்ரவி “பவி கன்சீவா இருக்கா,  இந்த டைம்ல அவள கவனிச்சுப் பார்த்துக்க பெரியவங்க  யாராவது வேணும்னு அதுக்கு அரேஞ்ச் செய்திருக்கோம். அதனாலதான் அவ இங்க இல்ல, அவ சேஃப்டி ரீசன்ஸ்காக இதை வெளிய யார்ட்டயும் சொல்லல” என இழையோடும் புன்னகையோடே தெரிவிக்க,

அடுத்த பக்கம்