துளி தீ நீயாவாய் 23 (4)

“எங்கம்மா என்னை ஏமாத்தின ஒரு சுயநலவாதின்னு மட்டும்தான்ணா எனக்கு முதல்ல தோணிச்சு, ஆனா எவ்வளவு பெரிய கிரிமினல்ன்னு இப்பதான் நல்லா புரியுது. அவங்களோட அத்தனை கிரிமினல் ஆக்டிவிட்டிக்கும் நான்தான் காரணமோன்னு நினைக்கப்ப திகீர்னு இருக்குதுண்ணா” என எதோ புலம்பினாள் அவள்.

“ப்ச் நீ என்னடா செய்வ இதுக்கெல்லாம்? கண்டதையும் போட்டு குழப்புறத முதல்ல நிறுத்து, ஃபிஷ் ஃப்ரை பிடிக்கும்னு சொல்வியே, இந்த ஹோட்டல்ல நல்லாருக்கும், சாப்டுறியா?” பேச்சை இந்த திசைக்கு இழுத்தான். அவளை சாப்பிட வைக்கும் முயற்சி.

‘சும்மா இப்படிச் சொன்னா அவ சாப்டுடுவாளா..போ உனக்கு பேசக் கூட வர மாட்டேங்குது…கண்டிப்பா நீ இந்த டைமும் தோத்துடுவ’ என்கிறது இவனுக்குள் துடித்துக் கொண்டிருக்கும் பயம்.

“என்னைய தினம் தினம் கொன்னு அதுல வந்த காச வச்சி பவி மேடத்தை அடிச்சிட்டாங்க, அப்படின்னா மேம்க்கு எதாவது ஆகி இருந்தா நான்தான காரணம்” அவள் புலம்பல் தொடர, என்னதான் இவனிடம் வாயாடினாலும் இப்படியெல்லாம் என்றுமே இவனிடம் பேசிடாதவள் இப்படிச் சொல்லவும் இவன் இன்னுமாய் அரண்டு போக,

“அண்ணிக்கு ஒன்னும் இருக்காது, கண்டிப்பா நல்லாதான் இருப்பாங்க, ஆமா அது என்ன அண்ணிய மேடம்ன்ற” என பேச்சைத் திருப்ப முயன்றான்.

‘பாரு டென்ஷன்ல உனக்கு சுத்தமாவே பேச வரல, அவ அண்ணியப் பத்தி நினைக்காம இருக்க அண்ணியப் பத்தியே அவட்ட கேட்கிறியேடா லூசு’ என்கிறது இவனது மூச்சிழந்து கொண்டிருக்கும் மனம்.

“நான் மேம் கூட சேரப் போய்தான இப்படி ஆகிட்டு, அதான் இனி மனசால கூட அவங்க பக்கத்துல போக மாட்டேன்” என அவளோ இப்போதும் உழன்றவள் “மேம்க்கு மட்டும் எதாவது ஆகி இருந்துதோ நான் செத்தே போய்டுவேன்” என பழைய நிலைக்கே சென்றிருந்தாள்.

‘அதிகபட்சம் என்னடா ஆகும்? செத்துதான போவேன், போகட்டும், நிம்மதி’ என்ற விமலின் குரலாக மட்டும்தான் அது இவன் காதுக்குள் விழுகிறது.

ஒரே ஒரு கணம் பின்னால் வரும் பேட்ரோலிங் காரை கவனித்தான் இவன். அது எதற்கு மதுவின் பாதுகாப்புக்கா? என்ன பாதுகாப்பை தந்துவிடுமாம் அது?

சட்டென ஸ்டியரிங்கை ஒடித்தவன் யூ டர்ன் எடுத்து போக்குவரத்தற்ற அந்த சாலையில் காரை பறக்க வைத்தான்.

அப்போதுதான் பவியை அழைத்திருந்தான் ப்ரவி. அங்கோ அவள் இணைப்பை ஏற்றது அவனது அண்ணன் தயாளன் “பிள்ளைக்கு வாந்தியாகுதுடா, ஒரு ரெண்டு நிமிஷம் கழிச்சு கூப்டு” என தகவல் தர,

அதே நேரம் ப்ரவியின் அலுவலக மொபைல் அலறியது. ஒரு நிமிஷம்ண்ணா, திரும்ப கூப்டுறேன்” என அங்கு இணைப்பை துண்டித்துவிட்டு இதை இவன் ஏற்க, “சார் அந்த கார் ஹாஸ்பிட்டல் எங்கயும் போகாம உங்க வீட்டு ரோட்ல திரும்பிட்டு சார்!, நாங்க ஃபாலோ பண்ணி வந்துட்டு இருக்கோம்” என வந்து விழுகிறது செய்தி.  காதில் விழும் இதை இவன் வாங்கிக் கொண்டிருக்கும் போதே, இவன் வீட்டு வாசலில் கார் வந்து க்ரீச்சிட்டு நிற்கும் சத்தமும் வந்து சேர ஒரு சதவீதம் கூட இதை எதிர்பாராத ப்ரவி திக்ப்ரமித்துப் போனான்.

வெற்று மார்பும் பெர்முடாஸுமாய் அமர்ந்திருந்தவன், கையில் கிடைத்த டி ஷர்டை எடுத்து மாட்டியபடி வரவேற்பறைக்கு இவன் வரும் போது “நான்தானங்க உள்ள போகக் கூடாது, நான் இங்கயே நின்னுகிடுறேன், அது சின்னப் பொண்ணு அவள மட்டும் உள்ளவிடுங்க, ரெண்டே நிமிஷம்” என வீட்டு காவலரிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தான் பால்கனி.

இந்த சூழ்நிலையிலும் அதைக் கேட்கவும் “அடிங்ங்க” எனச் சொல்லிக் கொண்ட ப்ரவியின் முகத்தில் சிரிப்பு இருந்தது.

அதே நேரம் “என்னைய நல்லா செக் செய்துகோங்க, கைல தூசி துரும்பு கூட கிடையாது” சொன்னபடி தன்னை அங்கும் இங்குமாய் திருப்பி பரிசோதிக்க பால்கனி கோர,

“செக் பண்ணிட்டு அவங்க ரெண்டு பேரையும் உள்ள வரச் சொல்லுங்க விகாஷ்” என காவலரைப் பார்த்துச் சொன்னான் ப்ரவி. அப்போதுதான் இவன் வாசலில் வந்து நிற்பதை கவனித்தான் போலும் பால்கனி, திடுக்கிட்டுப் போய் ஒரு கணம் இவனை நிமிர்ந்து பார்த்துக் கொண்டவன் அடுத்து நிமிரவே இல்லை.

மதுவுக்கு இது எல்லாமே எதிர்பாரா ஒன்று. எங்கு வருகிறோம் என்றும் அவளுக்குப் புரியவில்லை. அதோடு வீட்டுக்குள் இவள் மட்டும் போக வேண்டுமா? என்னதிது? என அவள் குழம்பிப் போய் திகைத்த நொடி, ப்ரவி வந்து அழைக்க,

உண்மையில் சட்டென அவள் மகிழ்ந்து போனாள் என்றுதான் சொல்ல வேண்டும். ப்ரவியின் குரலில் இருந்த இலகுத் தன்மை, அதோடு ஒரு அடர் மெல்லிய மகிழ்ச்சியோ? அது ‘நிச்சயமா பவி மேம்க்கு ஒன்னும் இல்ல! அவங்களுக்கு எதாவது ஒன்னுன்னா சார் இப்படில்லாம் இருக்க மாட்டாங்க’ என்ற சிந்தனையைப் பிறப்பிக்க,

இனிப்புக் கரைசல்கள் சில அவளது எரிந்து கொண்டிருந்த இளம் மனதில் பாய்ந்து கிளம்ப. பரபரவென காரிலிருந்து இறங்கியவள் ப்ரவி சொன்ன செக் செய்யும் காரியத்திற்காக பால்கனிக்கு பின்னாக போய் வரிசையில் நிற்பது போல் நின்று கொண்டாள்.

“நீங்க போங்க சார்” என இப்போது காவலர் இப்போது பால்கனியை நகரச் சொல்ல,

“இன்நேரத்துல நான்?” என தயங்கியபடி ஒரு கணம் மதுவை திரும்பிப் பார்த்தவன், “நீ மட்டும் போய் அண்ணியப் பார்த்துட்டு வந்துடேன் மதும்மா, நாம அவங்கள டிஸ்டர்ப் செய்த போல இருக்கக் கூடாதுல்ல” என தன்னிலை விளக்க,

“ஐய என்ன ஒரு லாஜிக் இது, நான் போய் எழுப்பினா பிரவாயில்லையாம் நீங்க வந்துதான் எழுப்பக் கூடாதாம், இதெல்லாம் இங்க வர முன்ன யோசிச்சாவாது அர்த்தம் இருக்கு” என இதற்கு பதில் கொடுத்த மது,

“ஆனாலும் உங்களுக்கு மாமனார் வீட்டப் பார்த்தாலே பதறிச்சுன்னா, அப்றம் எப்படி பொண்ணு கேட்டு கல்யாணம் செய்ய” என இவன் காதுக்குள் நக்கலடித்துவிட்டு காவலரிடம் போய் தன்னை பரிசோதிக்கும் படி நிற்க,

அடுத்த பக்கம்