துளி தீ நீயாவாய் 23 (3)

பவி கொஞ்ச நாளைக்கு ஃபோன்ல கூட பேச முடியாதுன்னு சொல்லி இருக்காளே! ஏன்? உடம்புக்கு ரொம்ப முடியலையோ?! என்பது அவள் நிலை.

அமரகுளத்துக்கு பெரிதாக பாதுகாப்பு எதுவும் போட முடியாது என்பதால் பவி அங்கு சென்றிருப்பதை எளிதில் விசாரித்து அறிந்து கொள்ள இயலாத வண்ணம் ஏற்பாடுகள் செய்திருந்தான் ப்ரவி. அதில் ஒன்றுதான் அவளை வேணியிடம் பேச வேண்டாம் எனச் சொன்னதும். வேணி மொபைல் எதிராளியாலும் வேவு பார்க்கப்படும் என்பது இவனது நம்பிக்கை.

இதெல்லாம் சேர்ந்து இப்படி ஒரு பின்விளைவை ஏற்படுத்தியது இவன் எதிர்பாராதது.

உடனடியாய் பால்கனி மதுவை மருத்துவமனை அழைத்துச் செல்ல அனுமதி கொடுக்கச் சொன்னவன், ஒரு பாட்ரோலிங் போலீஸ் வாகனத்தையும் பால்கனியின் காரை பின் தொடர ஏற்பாடு செய்துவிட்டு,

அடுத்ததாய் வேணிக்கு அழைத்து பவி நலமாக இருப்பதையும், விரைவில் வந்துவிடுவாள் என்பதையும் அழுத்தம் திருத்தமாகச் சொல்லி, நீதான் மது நம்புற போல சொல்லணும், அதைவிட்டு மது சொல்றான்னு நீ குழம்பினா எப்படி? என எடுத்துச் சொல்லி பேசிவிட்டு, அதன் பின்னே பவியை அழைத்தான்.

அதற்குள் அனுமதி கிடைக்கவும் மதுவுடன் கிளம்பி இருந்த பால்கனியோ தன் காரிலிருந்த மதுவின் மீது ஒரு கண்ணும், சாலையின் மீது ஒரு கண்ணுமாய் காரைச் செலுத்திக் கொண்டிருந்தான்.

இவனுக்கு அடுத்த இருக்கையிலேயேதான் மது அமர்ந்திருந்தாள். ஒரு மாதிரி சரிந்து அமர்ந்திருந்திருந்தவள் தலையை தொய்வாய் தொங்கவிட்டிருந்த விதமே இவனுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது என்பதுதான் நிஜம். அதோடு அவள் கண்களை மூடவும் இல்லாமல் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள்.

5 நாளாக இவன் சாப்பாடு தினமும் கொண்டு வந்து கொடுத்தும் உண்ணாமல் இருந்திருக்கிறாள் என்றால் இந்த வைராக்கியத்தை வேறு எப்படியும் எடுக்கத் தெரியவில்லை இவனுக்கு. இதற்கு முன்னும் இப்படியேயான ஒரு மரணத்தைப் பார்த்திருக்கிறான் இவன். இவனது நண்பன் விமல் ஞாபகம் நெஞ்சில் சூறாவளியாய் சுழற்றியடிக்கிறது.

மதுவைப் பார்க்கப் பார்க்க மீண்டும் விமலின் இறுதி நொடியில் போய் இவன் நிறுத்தப்பட்டிருப்பதாகவே பிரமை உண்டாகிறது. கொடும் இயலாமையும் செய்கையற்ற பரிதவிப்புமாய் இவன். அந்த அளவுக்கு இது ஒன்னுமே இல்ல, ஜஸ்ட் சாப்ட்டா மது நார்மலுக்கு வந்துடுவா’ என என்னதான் மனதை தேற்றிக் கொண்டாலும், திரும்பவுமாக இவனுக்கு இருக்கும் ஒரே உறவையும் இழக்கப் போவதாக பிசைகிறது இவனுக்குள்.

“பேசு மது, பயம் காட்டாத” இவனின் அதட்டலான கெஞ்சலுக்கு சற்றாய் கண்ணைத் திருப்பி இவனைப் பார்த்தாள் மது.

அடுத்த பக்கம்