துளி தீ நீயாவாய் 23 (2)

அலுவலக நிலவரம் இப்படி என்றால், பல வருடங்களாக ஹாஸ்டல், தனிமை என வாழ்ந்து வந்தவனுக்கு கடந்த சில வாரங்கள்தான் சொர்க்க காலம். அதில் வீட்டுக்கு வந்தால் இவனை வால் பிடித்துக் கொண்டே சுற்றும் இவனவளை இதற்குள் அழைத்துச் சென்றுவிட, முன்பெப்போதையும் விட தனிமை கொடும் வறட்சியாகப் படுகிறது.

இரவு படுக்க மட்டுமே தன் வீட்டுக்கு வருகிறான் இப்போதெல்லாம். வந்து படுக்கையில் அமர்ந்து கொண்டு தன்னவளை மொபைலில் அழைத்தான்.

“போடி விட்டுட்டுப் போய்ட்டல்ல” பவி எடுத்ததும் இதுதான் இவனது முதல் வாக்கியம்.

பொதுவாக ப்ரவி ஒரு அழுத்தமான நபர். எத்தனை அன்யோன்ய தருணங்களிலும் அவன்தான் இவளைவிட சற்றுப் பெரியவன் என்ற உணர்வை இவளுக்குள் விதைப்பவன். இந்த சிணுங்கல் செல்லம், கொஞ்சல் எல்லாம் முழுக்க முழுக்க இவள் மட்டுமே செய்யும் செயல்.

இதில் சட்டென அவன் இப்படிச் சொன்னதும், அதிலிருந்த சிணுங்கல் வாசத்தில் பவி டக் அவ்ட்.

கிளர்ந்துகொண்டு எழுந்த காதல் அவசரமாய் அதன் உச்சத்தை கடந்தாலும், தாய்மைச் சிறகு ஒன்று தனித்திருப்பவன் பால் பறந்தாலும், “நாட்டு மக்களே, இதெல்லாம் நம்புற போலயா இருக்கு” என வாயாடினாள்.

“காலைல இருந்து ஒரு கால் கூட செய்யல சாரே நீங்க” சொல்லிக் காண்பித்தாள். இருக்கும் சூழலுக்கு பவியாக இவனை அழைக்கக் கூடாது எனச் சொல்லி இருந்தான். இவனுக்கு தோதான நேரத்தில் இவன்தான் அழைத்துப் பேசுவான்.

“நைட்தான் என் நியாபகமே வந்திருக்கு… அதுல” என அவள் எதோ இடைவெளியின்றி சொல்லிக் கொண்டே போனாள்தான், அதற்குள் இங்கு இவனது அஃபீஷியல் மொபைல் சிணுங்க, அதில் மதுவின் பள்ளியின் காவலுக்கு இவன் நியமித்திருக்கும் அதிகாரியின் எண் மின்னியது.

“ஃப்யூ மினிட்ஸ்ல திரும்ப கூப்டுறேன் பவிமா” என இணைப்பை இவன் துண்டிக்கப் போக,

“பார்த்தியா இப்ப கூட டூயட் பாடாம டூ மினிட்ஸ்னு விட்டுட்டுப் போறது நீதான்” என வாரிவிட்டே அவள் பேச்சை முடித்தாள்.

அடுத்து இவன் ஏற்ற இணைப்பில் “சார் அந்த பொண்ணு மது இருக்குதில்லையா, அந்தப் பொண்ணுக்கு ஏதோ உடம்பு முடியல போல, லோக்கல் கார்டியன்ற முறையில் அந்த பொண்ண கூட்டிட்டு ஹாஸ்பிட்டல் போக அந்த பால்கனி பெர்மிஷன் கேட்கிறாப்ல” என்றார் அந்த அதிகாரி.

விஷயத்தின் விளக்கத்தைக் கேட்க, இப்போது ப்ரவி அழைத்தது வேணியை. “மது அம்மா போனது அவளுக்கு வித்யாசமா டிஸ்டர்ப் ஆகுது போல சார், அவங்க அம்மா தானா ப்ளான் செய்துதான் போய்ருப்பாங்கன்னு அவளுக்கு ஒரு நம்பிக்கை, இதில் பவி மேம் வேற அன்னைக்கு விழுந்துட்டாங்களா, அவங்களுக்கு எதோ அடிபட்டுட்டுன்னு இவ நினைக்கிறா. அது எதுவும் இவங்க அம்மாவே ஆள் வச்சு செய்துட்டாங்களோன்னு எல்லாம் கன்னா பின்னானு பயப்படுறா. என்னாலதான் மேம்க்கு இப்படி ஆகிட்டுன்னு ஒரே அழுகை, சாப்டாமலே இருந்திருப்பா போல, பகல்ல அவ க்ளாஸ் போய்டுவால்ல எனக்குமே அது தெரியல, இப்ப மயங்கி விழுந்துட்டா, அவ விழுந்தத இன்சார்ஜுக்கு இருந்த டீச்சர் பால்கனிக்கு சொல்லிருப்பாங்களா இருக்கும், அதான் ஹாஸ்பிட்டல் போலாம்னு பெர்மிஷன் கேட்டுகிட்டு இருக்காங்கன்னு நினைக்கிறேன்” என அவளறிந்ததைச் சொன்னாள்.

“பவி மேம் நல்லா இருக்காங்கதான சார்?” எனும் போது வேணிக்கே குரல் அலை பாய்ந்தது.

பவியை அன்று மருத்துவமனை கொண்டு போனது மட்டும்தான் வெளியே தெரியும். அடுத்து அங்கு பவியை அப்ஷர்வேஷனில் வைத்திருந்ததால் வேணியிடம் உட்பட யாரிடமும் எதையும் சொல்லவில்லை ப்ரவி. மருத்துவமனையிலிருந்த ஒரு அறையில் வேணியை தங்கச் சொல்லிவிட்டு அவளுக்கு பாதுகாப்பு வேண்டுமே, ஆக அறை வாசலில் காவலுக்கும் ஆள் போட்டிருந்தான்.

அதனால் மறுநாள் ஞாயிறு அதிகாலை ஐந்தரை மணி சர்ச் சர்வீசுக்கு பவியும் ப்ரவியும் கிளம்பிப் போனதை வேணி பார்த்திருக்கவில்லை. பொழுது புலர்ந்த பின் கிளம்பி வந்த கருணுடன் இரண்டு காவலர் புடை சூழ வீடு வந்து சேர்ந்தாள் இவள். பவிக்கு உடம்புக்கு ஒன்றுமில்லை அவள் நன்றாக இருக்கிறாள், வீட்டுக்கு சென்றுவிட்டாள் என இவள் கேட்டதற்கு கருண் தெரிவித்திருந்தான்.

இவள் வீடு வந்து சேர்ந்த போது பவி அவள் அறைக்குள் சற்று ஓய்வாக இருந்தாள். அறைக் கதவு மூடி இருந்தால் அந்தப் பக்கம் போகும் வழக்கமே இவளுக்குக் கிடையாது. அதில் கருண் வேறு வீட்டில் இருக்கவும் அதிலும் அவன் சமையல்கட்டு முதல் வீட்டின் மாடியறை வரை அங்குமிங்குமாய் பரபரவென அலைந்து கொண்டு இருக்கவும், ப்ரவி சார் வேறு அவனோடு சேர்ந்து சமையலறை வரை உருட்டவும்,

இவளுக்கு எங்கு போய் ஒதுங்கிக் கொள்ள எனப் புரியாத ஒரு தர்மச்சங்கடம். ஆனால் சகோதரர்களிடம் ஒரு புது சந்தோஷம் காணக்கிடைப்பதால் பவி நன்றாக இருக்கிறாள் என்பதில் மட்டும் இவளுக்கு சந்தேகம் வரவே இல்லை.

இதில் இவள் திருக திருக விழித்த அழகில் “நான் இன்னைக்கு கொஞ்ச நேரம் ஸ்கூலுக்கு போய் மது கூட இருந்துட்டு வரட்டுமா?” என கேட்டுவிட்ட நிலையில்,

சற்று யோசித்த ப்ரவி அடுத்து சம்மதம் தந்திருக்க, விட்டால் போதும் என பள்ளிக்கு வந்திருந்தாள் இவள். ஆக கருண் கல்யாணப் பேச்சு விஷயம் கூட வேணிக்குத் தெரியாது. பவியின் குழந்தைப் பேறு பற்றியெல்லாம் யாருக்குமே தெரியாதே!

அதில் அன்றே எதிர்பாராமல் தயாளன் வந்து சேர, அவரால் மாடியேற முடியாது, கீழ் தள அறை அதாவது வேணி பயன்படுத்தும் அறை அவருக்கு வேண்டும், மாடியில் தங்க வேணி கடுமையாக பயப்படுவாள் என்ற காரணங்களால், அன்றும் அடுத்த நாளும் அவள் மதுவுடனேயே தங்கட்டும் என ப்ரவி குடும்பம் முடிவு செய்திருந்தது. அடுத்து தயாளன் பவித்ராவை அழைத்துக் கொண்டு அமரகுளம் போய்விட, வேணி இன்னும் பவியை பார்த்திருக்கவே இல்லை. கிளம்பும் போது வேணியிடம் அலை பேசியில் பேசிவிட்டுச் சென்றதோடு சரி.

இதில் மது பவிக்கு என்னவோ ஆயிற்று என்று பயந்து அழ, அவளுக்கு ஆரம்பத்தில் வேணி கெத்தாக ஆறுதல் சொன்னாலும், வர வர இவளுக்கே குழப்பமாகத் துவங்கியது.

அடுத்த பக்கம்