துளி தீ நீயாவாய் 23

இந்த ஆடு புலி ஆட்டம் ஆடத் துவங்கியதிலிருந்து ப்ரவியின் திட்டம் முதன் முதலாக சறுக்கி இருப்பது இப்போதுதான். இதை எப்படி சமாளிக்க என சற்று திணறிப் போய்தான் இருந்தான் அவன்.

திருமணத்தில் எதிர்பார்க்கச் செய்து வந்தாலும், எதிர்பார்க்கவே இல்லாத நிலையில் வந்தாலும் குழந்தை என்பது இறைவனின் கொடையல்லவா?! அதுவும் தம்பதியருக்கு மட்டுமின்றி குடும்பத்துக்கே முதல்குழந்தை எனும் போது வழக்கமான கட்டுகளைக் கூட தாண்டிக் கொள்ளும் விஷேஷித்த வரத்தையும் அது பெற்றே வருகிறதுதானே!

அதனால்தான் தயாளனால் கருணின் திருமண விஷயத்தை இரண்டாம் சிந்தனை இன்றி ஏற்க முடிகிறது. இப்படி பெண்ணை வீட்டுக்குக் கூட்டி வந்து திருமணம் பேசும் காரியத்தையெல்லாம் முன்பு தயாளன் எப்படி எடுத்துக் கொள்வாரோ, அதுவும் கருண் திருமண வகையில் பவி ஏற்கனவே ஒரு முறை சறுக்கி இருக்கிறாள் என்ற எண்ணம் மனதில் இருக்கும் போது, இது எல்லாம் அவருக்கு எப்படித் தோன்றி இருக்குமோ? ஆனால் இப்போதோ  அவரது ஒரே உணர்ச்சி பெருமகிழ்ச்சி என்பது மட்டுமே!

அதே போலத்தான் பவிக்கும். என்னதான் தயாப்பாவை இவர்கள்தான் ஏற்று, பார்த்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் மனதளவில் முடிவு செய்திருந்தாலும், இப்படி அவரைக் காணவும் அவர் முன்பு பேசிய வார்த்தைகள் எதையும் நினைக்காமல் ஓடிப் போய் அவரோடு ஒட்டிக் கொண்டிருக்க முடியுமா என்பது கேள்விக் குறியே! ஆனால் இன்றைய அவள் மனோநிலை அதை சாத்தியமாக்கியது.

இதில் தயாளான் இதோடு நின்றுவிடும் நிலையிலெல்லாம் இல்லை. இருந்த உட்ச பட்ச மகிழ்ச்சியில் அன்றே லினியின் வீட்டுக்கு அழைத்து பேசிவிட்டார். காதல், விருப்பம் என்றெல்லாம் எதையும் சொல்லாமல் பெண்ணை பிடித்திருக்கிறது, “நீங்க வரன் பார்க்கிற எண்ணத்திலதானே இருப்பீங்க. ரெண்டு பேருக்கும் ஒருத்தர ஒருத்தர் நல்லா தெரியும்,ஒரே இடத்தில வேலை செய்றாங்க, இந்த கல்யாணம் அமைஞ்சா நல்லா இருக்கும்னு நினைக்கோம்” என முறையாய் பெண் கேட்க,

ஏற்கனவே கருணை நன்றாக அறிந்த குடும்பம்தான் லினியுடையது எனும்போது, அதுவும் லினியும் தனக்கு இந்த திருமண்த்தில் விருப்பம் என தன் அம்மாவிடம் கோடு காட்ட, “லினி அடுத்து லீவு கிடச்சு வர ரெண்டு மாசம் போல ஆகும், ஒரு முறைக்கு இன்னைக்கு அவ இங்க இருக்கப்பவே எங்க வீட்டுக்கு வந்து பார்த்துட்டு போய்டுறீங்களா?” என்ற அளவுக்கு மறுநாளே லினி வீட்டில் காய் நகர, அன்றே  முறையாய்  ஒரு பெண் பார்க்கும் படலம் நடந்தேறியது. இதற்கு ப்ரவி செல்ல வாய்க்கவில்லை. பவியையும் கருணையும்தான் அழைத்துப் போயிருந்தார் தயாளன். இதில் பவிக்கு ப்ரவி ஏற்பாடு செய்த பாதுகாப்புகளை கவனித்த தயாளன், அடுத்து வீட்டுக்கு வரவும் ப்ரவியை பிடி பிடி என பிடித்துவிட்டார்.

“வாயும் வயுறுமா இருக்க பிள்ளைய என்னடா எப்பவும் துப்பாக்கி பக்கத்துலயே வச்சிருக்க? அப்படி பயந்து பயந்து வச்சுக்கிற அளவுக்கு உனக்கு என்ன வேலை? இதுக்கு மேலெல்லாம் அவள இப்படி இங்க விட முடியாது. அவ இப்பவே என் கூட அமரகுளம் வர்றா. நீ எப்ப இந்த கேஸ முடிப்பியோ அடுத்து அவ இங்க வந்தா போதும். நம்மூருக்கு கார்ல வந்து போக இங்க இருந்து ரெண்டரை மணி நேரம்தான ஆகுது. பேசாம நீ  அங்க இருந்தே வந்து போயேன்!

நம்ம ஊருக்குள்ள அடுத்த ஊரு நாய் நுழைஞ்சா கூட ஆளாளுக்கு தெரியும். அதுல அடுத்தவன் எவனும் உள்ள வந்துட முடியுமாங்கும்?! உன் போலீசே இல்லன்னாலும் என் பிள்ள அங்க பாதுகாப்பா இருப்பா. நீயும் நிம்மதியா உன் தொழில கவனிக்க முடியும்” என்ற ரீதியில் அவர் மொட்டையாய் பிடிவாதம் பிடிக்க,

இவனும் மென்மையாய் எவ்வளவோ சொல்லிப் பார்த்தவன், அதற்கு மேலும் பவியை அவரோடு அனுப்ப மாட்டேன் என்று சொன்னால், அவர் முன்பு பேசியதை மனதில் வைத்துக் கொண்டு இவன் பவியை அவரோடு சேர விடமாட்டேன் என்கிறான் என தயாளனுக்கு தோன்றும் என்ற நிலை வரவும், சேர்ந்து வருகின்ற உறவை இவனே தடுத்தது போல் ஆகிவிடக் கூடாதென, வேறு வழி இன்றி பவியை தயாளனோடு அனுப்ப ஒத்துக் கொள்ள வேண்டியதாயிற்று.

“ரொம்ப ஃபீல் பண்ணாத ப்ரவி, லினி வீட்ல இருந்து அங்க நம்ம அமரகுள வீட்ட பார்க்க வரேன்னு சொல்லி இருக்காங்க, அவங்க வந்துட்டு போனதும், நான் தயாப்பாட்ட எப்படியாவது பேசி இங்க வந்துடுறேன் என்ன?” என பவியும் சமாதானம் சொல்லி இவனை தேற்றிவிட்டு கிளம்பிப் போயிருந்தாள்.

இப்படி பவி அமரகுளம் போய்விட்டால் வேணி எங்கு போவாள்? அவளை வேறு வழியே இன்றி மதுவோடு பள்ளியில் தங்க வைக்கும் நிலை உண்டானது இவனுக்கு. இதைத்தான் சறுக்கல் என்கிறது அவனது அறிவு.

பால்கனி இனி என்னதெல்லாம் செய்வானோ?!

வேணியை அமரகுளம் அனுப்பிவிடலாம் என்றால், இவன் தான் பணி புரியும் இடத்திலுள்ள தன் வீட்டிற்கு பாதுகாப்பு கொடுப்பது என்பது இயல்பானது, ஆனால் தன் பிறந்த ஊருக்கெல்லாம் பாதுகாப்பு கொடுக்க நினைத்தால் மேலிருந்து பல கேள்விகள் எழும்பும், அதில் எதிராளிக்கே கூட இவன் திட்டம் போய்ச் சேரவும் வாய்ப்பு அதிகம். அப்படியானால் இன்னும் ஆபத்து அதிகரிக்குமே தவிர குறையாது.

ஆக இதில் வேணியின் மனம் காயப்படும் வகையாய் எதுவும் நடந்துவிடக் கூடாது என்ற பெருத்த அக்கறையை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு, அவளுக்கு தன் சக்திக்குட்பட்ட அனைத்து பாதுகாப்பையும் செய்து கொடுத்துவிட்டு, கண்கொத்திப் பாம்பாய் கண்காணித்தபடி காவல்காரனாய் காத்திருக்க வேண்டிய நிலை இவனுக்கு.

அடுத்த பக்கம்