துளி தீ நீயாவாய் 19(9)

ஆக உறவுகள் புடை சூழ உடை நகை பொருள் என எதை வாங்க தயாப்பா அழைத்துச் செல்லும் போதும் வாயில்லா பிராணி போல் உடன் போய் வந்தவள், வீட்டில் தனிமை வாய்க்கும் போது  தண்ணீர் கூட குடிக்காமல் பட்டினி கிடந்தாள்.

இதை கவனித்த தயாளன், மன வேதனையில்தான் பிள்ளை சாப்பிடாமல் கிடக்கிறது என புரிந்து கொண்டவர், “நிச்சயத்துக்குப் பின் மாப்பிள்ளையும் பொண்ணும் ஒரே வீட்ல இருந்தா நல்லா இருக்காது” எனச் சொல்லி ஊரிலிருந்த இன்னொரு நெருங்கிய உறவினர் வீட்டுக்கு பவியை இடம் பெயர்த்துவிட்டார்.

அடுத்தவங்க முன்னால அவதான் எதையும் காட்டிக்கிறது இல்லையே, அதனால சாப்ட்டுடுவா எப்படியும் ரெண்டு வாரம் அவள சமாளிச்சுட்டா அடுத்து ப்ரவி கூடதான இருப்பா, அவன் பார்த்துப்பான் என நம்பினார்.

உண்மையில் அதுதான் நடந்தது. அடுத்த வீட்ல போய் இருந்துகிட்டு சாப்டமாட்டேன் எனக்கு தயாப்பா மேல கோபம்னா சொல்ல முடியும்? ஆக பவி சாப்பிட்டாள், இதுவும் அவள் வகையில் தயாப்பாவின் கடனடைத்தலில் சேர்ந்தது. ஆனால் இந்த இயலாமை, தயாப்பாவின் மீது காட்ட முடியாத இந்த கோபம் எல்லாம் முழு மொத்தமாய் அவள் மனதுக்கு நெருக்கமான ப்ரவியின் மீது துளி குறைவில்லாமல் நிரம்பிக் கொண்டிருந்தது.

அந்த நிச்சய நேரத்தில் இருந்த அதிர்ச்சி மற்றும் மனவலியில் ப்ரவியை அவள் பெரிதாக யோசித்திருக்கவில்லையே தவிர அன்று வீடு வந்து சேரும் போதே இவன் எப்படி திருமணத்திற்கு சரி என சொல்லலாம்? என்ற பதறல் மற்றும் தவிப்பு அவளுக்கு துவங்கி இருந்ததுதான், அதில் அடுத்தடுத்து தயாப்பா வேறு அதே திருமணத்தை காரணமாக்கி அவர் இழுத்த இழுப்புக்கு அதான் இந்த நகை புடவை சாப்பாடுன்னு ஆட்டி வைக்க, எல்லாவற்றையும் காட்ட அவளுக்கு கிடைத்த ஆள் அவன்தான்.

இதில் இவளை அடுத்த வீட்டில் வேறு விட்டிருக்க, ப்ரவிக்கு அவளை சந்திக்கும் வாய்ப்பு ரொம்ப ரொம்பவும் அரிது என்றானது. பவிக்கோ அந்த வீட்டில் தயாப்பா என்ன சொல்லி விட்டிருந்தாரோ அவளுக்கு தூங்கும் போது கூட தனிமை இல்லை, இவள் வயதொத்த அந்த வீட்டு மகள் இவளோடேயே இருந்தாள். ஆக ஃபோனில் ப்ரவியிடம் பேசும் (காயும்?!) வாய்ப்பு கூட அமையவில்லை. ப்ரவிக்கும் பவி அடுத்தவீட்டில் இருக்கும் போது மொபைலில் பேசுவது ஊர் அமைப்புக்கு சரியாய் வராது என்பது தெரியும். ஆக இவனும் அழைக்கவில்லை.

இதில்தான் திருமணமும் நடந்தேற, அன்று முதலிரவு பவியின் அறையிலேயே!

தனது அறைக்குள் நுழைந்த இவள் அப்படியே ஸ்தம்பித்துப் போய் நின்றுவிட்டாள். அறையின் நட்ட நடுவில் அவளது புதுக்கட்டிலை போட்டு மேற்கூரையிலிருந்து கட்டில் முழுவதும் சூழ்ந்திருக்கும் அதன் திரைசீலை கொஞ்சமும் வெளியே தெரியாத அளவு அத்தனை அத்தனை பூச்சரங்கள் தொங்கவிடப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.

இந்த இரவின் நோக்கமே இதுதான் என்பது போல் இது முகத்தில் அறைந்து தெரிவித்த செய்தியில் குமுறிவிட்டது இவளுக்கு மொத்தமாய்.

அவன் வாங்கித் தந்த கட்டில் அல்லவா? ஆக என்ன எண்ணத்தில் இதை வாங்கினான்?  என இப்போது அது அலங்கரிக்கப்பட்டிருக்கும் வகை மற்றும் நோக்கத்தை கண் கொண்டபடி அவள் பார்க்கையில்,

அப்போதே இவள் மீது இப்படி ஒரு எண்ணத்தில் இருந்தானா? எனத் துவங்கி, ஏற்கனவே அவன் இவளை திருமணம் செய்ய எப்படி சம்மதிக்கலாம் என்று இருந்த தவிப்புக்கும், அவன் மீதிருந்த அதீத கோபத்திற்கும், அதோடு காதல் என்ற ஒன்றை இன்னும் அனுபவித்திராத மனமல்லவா அவளது,  அவள் அவனை நம்பி கடந்த காலத்தில் பழகிய அத்தனை தருணங்களிலும் அவனது நோக்கத்தை  இப்போது கண்டபடி கற்பனை செய்து வைத்தது.

அவனோடு அமர குள வயலுக்கு குளிக்கப் போன அனுபவம் எல்லாம் இவளுக்கு உண்டு. வயல் பம்ப் செட்டை போட்டுவிட்டு அவன் தோப்புக்குள் சுற்றப் போய்விடுவான். குளித்து முடித்து இவள் கூப்பிடும் போது வந்து கூட்டி வருவான். அப்போது கொஞ்சமும் நெருடாத விஷயம் இப்போது உண்மையில் அவன் அவளை விட்டுப் போனானா இல்லை அவளுக்குத் தெரியாமல் அங்கேயே இருந்தானா என்றெல்லாம் கேள்வியாய் விரிய தாறுமாறாய் மிரண்டு போனாள் பவித்ரா. அதோடு கொந்தளித்தும்தான். இவள் அவனை எத்தனையாய் எல்லாவற்றிலும் நம்பி இருக்கிறாள், அவன் எத்தனையாய் ஏமாற்றி இருக்கிறான்?!!

அடுத்த பக்கம்