துளி தீ நீயாவாய் 19(8)

அமரகுள பகுதியைப் பொறுத்தவரை நிச்சயதார்த்தம் என்பது மணப் பெண்ணிற்கு மணமகன் வீட்டினர் செய்யும் மரியாதை என்ற வகையில்தான் இருக்கும் முறைமைகளும் சமூகப் பார்வையும். மணமகன் வீட்டிலிருந்து பெண்ணுக்கு மணச் சீர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு திருமணத் தேதி முடிவு செய்து அறிவிப்பதுதான் மொத்த விழாவே.

இதில் தேதியை அறிவித்துவிட்டு பெண்ணுக்கு முறை செய்யவில்லை என்றால் என்ன அர்த்தம்? தயாளன் பவி மீது இருக்கும் கோபத்தில் அவளை இப்படி நடத்துகிறார் என்றுதான் தோன்றும் சுற்றி இருப்பவர்களுக்கு.

சித்தப்பா பெரியப்பா பிள்ளைகளுக்குள்ளேயே எந்த சண்டை சச்சரவு இருந்தாலும் குடும்பத்தில் ஒரு திருமணம் வருகிறதென்றால் மொத்த உறவினரும் அந்த விழாவை காரணம் காட்டி, பிரிந்திருக்கும் உறவினர் இருவரும் இணைந்தாக வேண்டும் என பஞ்சாயத்து பேசியாவது சேர்த்து வைத்துவிடுவார்கள், அப்படிப் பட்ட சமூக அமைப்புள்ள அங்கு தயாளன் பவிக்கு முறை செய்ய மாட்டேன் எனச் சொல்லவும் என்ன நிகழும்?

“அதான் கல்யாண தேதியே முடிவாயிடுச்சுல்ல, அப்றம் பொண்ண கூட்டிட்டு போய் முறை செய்ய வேண்டியதான? சும்மா என்னத்த பராக்கு பார்த்துட்டு நிக்கிய?” என ஒரு பெரிசு அங்கிருந்த இளவட்டங்களைப் பார்த்துக் கேட்க,

இதில் ஹப்பா எல்லா கச்சா மூச்சாவும் ஒருவழிய முடிஞ்சிதுடாப்பா என்ற நிலைக்கு வந்த அந்த இளம் பெண்கள், வந்து பவியின் கையைப் பற்றி மேடைக்கு இழுத்துச் செல்ல, மௌனமாய் அவர்களின் இழுப்புக்கு பின்னால் போனாள் அவள்.

இன்னும் தயாப்பா பேசியதிலேயே விழுந்து கிடக்கும் பவிக்கு, நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுக்கு அர்த்தம் புரியாது என்று இல்லை. ஆனால் அதை அத்தனை தீவிரமாய் எடுத்துக் கொள்ள அவள் மனதின் சிந்தனா சக்திக்கு ஜீவனில்லை என்றுதான் சொல்ல வேண்டும். செத்த பிறகு புதைச்சா என்ன எரிச்சா என்ன? என்ற நிலையில் இருந்தாள் அவள்.

வளர்த்ததுக்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டும் என்றுவிட்டாரே! ப்ரவியிடமோ கருணிடமோ எத்தனை கோபத்திலும் இதைச் சொல்லுவாராமா? ஆக அடி முடியாய் ஆரம்பத்திலிருந்தே இவளை வெளியாளாகத்தானே எண்ணி வளர்த்திருக்கிறார் அவர்?! இவள்தான் சொந்தம் குடும்பம் என முட்டாள்தனமாய் நம்பி இருந்திருக்கிறாள். அவர் பிச்சை போட்டிருக்கிறார் இவள் பேதமையாய் அதை பாசம் என புரிந்து வைத்திருந்திருக்கிறாள். உள்ளுயிர் போயிருந்தது அவளுக்கு.

அந்தப் பெண்கள் பவியை மேடையில் அமர்த்தி, மாலையிட்டுக் கொண்டிருக்கும் போதுதான், சட்டென கூச்சல் நின்று ஒருவாறு வந்துவிட்ட இயல்பு நிலையில் தன் அண்ணனிடம் பேசிக் கொண்டிருந்த ப்ரவியும் கருணும் என்னவென திரும்பிப் பார்த்தனர்.

அங்கு மேடையில் பவிக்கு கைகளிலும் கன்னத்தில் சந்தனம் பூசத் துவங்கினாள் முதல் பெண். அடுத்து ஒவ்வொரு பெண்ணாய் இதை மேடை ஏறி செய்வது வழக்கம். அதாவது நிச்சய விழா நடந்து கொண்டிருக்கிறது. பவி அமைதியாய் அதை ஏற்கிறாள் அப்படித்தான் ப்ரவிக்கும் கருணுக்கும் கூட இது புரிந்தது. நடந்து முடிந்துவிட்ட விஷயங்கள் அவளுக்கு வலிக்கிறதென்றாலும், இந்த திருமணத்தில் அவளுக்கு சம்மதம் இருக்கிறது என்ற செய்தியை இருவருக்கும் அது தெரிவித்தது.

இந்த திருமணம் இவர்களுக்குமே வெகு ஆசைதானே!

ஆக கருண் “நீ வாடா மாக்கான், உங்க மேரேஜுக்கு எப்படில்லாம் எஞ்சாய் பண்ணணும்னு எவ்வளவு ப்ளான் வச்சுருக்கேன் தெரியுமா நான்?” என்றபடி ப்ரவியை இப்போது மேடைக்கு இழுத்துப் போக, சூழ்நிலையின் இறுக்கத்தைக் குறைக்க அவனும் முயல்வான்தானே, இன்னும் சிலர் ப்ரவியை பவி அருகில் உட்கார வைக்க, அடுத்து முழுதாய் முறையாய் திவ்யமாய் நடந்தேறியது நிச்சயதார்த்தம்.

இதில் இவன் மேல் பவிக்கு எதிர்ப்பிருக்கும் என ப்ரவிக்கு எப்படிப் புரியும்?

அதற்குப் பின் வந்த காலங்களெல்லாம் ப்ரவியைப் பொறுத்தவரை ஜெட் வேக காலம். நெல்லையில் இவர்களுக்கான வீடு தயாராக வேண்டும், அவன் அலுவலக காரியங்களையும் கவனிக்க வேண்டும், திருமண ஏற்பாடுகளையும் செய்தாக வேண்டும் அதுவும் எல்லாம் இரண்டே வாரத்தில்.

கருணும் அவனுமாக பறந்து பறந்துதான் எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தனர். அவர்கள் மட்டுமல்ல தயாப்பாவும் பவியும் கூடத்தான். ஆம் தயாளன் அடுத்து பவித்ராவிடம் ஒரு வார்த்தை பேசவில்லை எனினும் தன்னால் என்னவெல்லாம் செய்து கொடுத்துவிட முடியுமோ எல்லாவற்றையும் இத்திருமணத்தில் செய்ய முயன்றார்.

தான் பவிக்கு எதையும் குறை வைக்கவில்லை என ஊருக்கு காட்டுகிறார் என இது பவிக்கு புரிய, பின்ன ஊருக்காகத்தான் இவளுக்கு கல்யாணம்னு சொன்னார்தானே, அவரோ கோபத்தில் தான் என்ன செய்து வைத்திருக்கிறோம் என்பதை இப்போது நிதானித்திருந்தவர் அந்த குற்ற மனப்பான்மையை இதில் காட்டிக் கொண்டிருந்தார். ஆனால் அதைப் போய் பவியிடமோ ஏன் கருண் ப்ரவியிடமோ கூட மனம் விட்டு பேசிவிட அவருக்கு இயலவில்லை. ஏனெனில் அவருக்கே தன்னை மன்னிக்க முடியவில்லை, இதில் அடுத்தவரிடம் அதை எப்படி எதிர்பார்ப்பார்? வார்த்தை என்பது எப்போதுமே அவருக்கு மிக முக்கிய விஷயம், அதைப் போய் தன்னையே உலகமாக நினைத்திருந்த பவியிடம் கொட்டிவிட்டோமே என மறுகிக் கொண்டிருந்தவர் அவள் முகத்தை பார்ப்பதைக் கூட தவிர்க்க, ஒரு வார்த்தை கூட அவளிடம் பேசாமல் எல்லாவற்றையும் அடுத்தவர் மூலமே அவளுக்கு சொல்லி அனுப்ப,

பவிக்கோ நிகழ்வின் அதிர்ச்சி குறையக் குறைய வாங்கியதை திருப்பிக் கொடுக்காமல் வைத்துக் கொண்டால்தானே அது பிச்சை, கொடுத்துவிட்டால் அது கடனடைத்தல்தானே, ஆக இந்த தயாப்பா என்ன செய்தாலும் அதை தாங்கிக் கொள்ள வேண்டும், அதுவும் கூட உணர்வு ரீதியில் கடனை திருப்பி கொடுத்தல்தானே, ஆனால் ஒரு துரும்பைக் கூட இனி இங்கிருந்து பயன்படுத்திவிடக் கூடாது என ஒரு தன்மான வகை வன்மம் வளர்ந்து கொண்டிருந்தது. அவள் ரணம் இதைச் செய்யும்தானே!

அடுத்த பக்கம்