துளி தீ நீயாவாய் 19(7)

ப்ரவிக்கு உண்மையில் கடுமையாய் எரிச்சலாய் இருந்தது. இப்படியா இவர்கள் திருமண பேச்சை எடுக்க எண்ணி இருந்தான் அவன்? ஆனால் இப்போது அவன் சற்றாய் எதிரிடையாய் எதைச் சொன்னாலும் பவி இருக்கும் மனநிலைக்கு இவனுக்குமே அவளை பிடிக்கவில்லையோ என்று கூட தோன்றிவிடும்.

அதோடு இவனது அண்ணன் இத்தனை பேசிய பின், அதுவும் பொது இடத்தில் நின்று ஊர் பார்க்க வார்த்தைகளை கொட்டியபின், பவியை இதற்குப் பின்னும் அமரகுளத்தில் அவரிடம் தனியாக விட்டுப் போக இவனுக்கே தாங்கவில்லை. இன்னும் என்னென்ன வார்த்தைகள் சிதறுமோ, உரிமையில்லாத இடம் என ஒட்டாது எத்தனை தவிப்பாள்?

இப்போதானால் இவனுடையவள் என்ற வகையில் முழு உரிமையாய் உணர்வாள்தானே! எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக மணமுடித்து கூட்டிப் போய்விட வேண்டும் என்று தோன்றிவிட்டது அவனுக்கு.

ஆக மறுப்பாக எதுவும் சொல்லாமல் ‘நன்றிக்காகல்லாம் கல்யாணம் செய்ய வேண்டாம், அவளுக்கு இந்த கல்யாணம் பிடிச்சுதுன்னா மட்டும் செய்யட்டும், ஆனா இதெல்லாம் வீட்ல போய் பேசிக்கலாம்” என இவன் சொன்னான்.

இப்போதும் மொத்த உறவினர்களும் அமைதியாய் இருந்து இவர்களை மட்டும் பேசவிட்டு பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று இல்லையே! அவர்களும் ஆளாளுக்கு தங்கள் கருத்துக்களை கத்திக் கொண்டிருந்தனரே! ஆக இருந்த கூச்சலான இரைச்சலில் பவி ப்ரவியின் இதை கவனிக்கவே இல்லை. அவளது மொத்த கவனமும் கருண் பிடித்து இழுக்காத குறையாக கூட்டிச் செல்லும் தன் தயாப்பாவின் மீது மட்டுமே சுற்றிப் போய் கிடந்தது.

அவரும் ப்ரவி பேசுகிறான் என்பதைக் கூட கவனிக்காமல், அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே “இவனையாவது கட்டிப்பியா? இல்ல தயாளன் தன் கொழுந்தியாள வீட்ட விட்டு விரட்டிட்டான்னு பேர்தான் வாங்கித்தரப் போறியா?” என பவியிடமே கேட்டுக் கொண்டிருந்தார். இது ப்ரவியின் காதில் சரியாய் விழவில்லை.

பவியிடமோ ஆம் என்றோ இல்லை என்றோ எதுவும் இல்லை. அடிபட்ட பாவத்தில் இன்னுமே இருந்தவள் ப்ரவியை நோக்கி ஒரு முறை விழியை நிமிர்த்தி பார்த்துவிட்டு மீண்டும் எங்கோ வெறித்தாள் முழு மௌனமாக. அவளைப் பொறுத்தவரை அவளது தயாப்பா அவளை அனாதை என்றுவிட்டார். அங்கேயே நின்றிருந்தது மொத்த வாழ்க்கையும். அதைத் தாண்டி அவள் வரவே இல்லை. இதில் ப்ரவியைப் போய் கல்யாணமாம் என்ற விஷயம் மிகச் சின்னதாய் மட்டுமே கவனத்தில் வர, அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் துன்பத்துக்குள் மீண்டுமாய் மூழ்கிக் கொண்டாள்.

இதுக்கெல்லாம் நீ சம்மதிப்பியா என்ன? என்பதுதான் பவியின் பார்வையின் பொருள். உனக்கு சம்மதமா என கேட்கிறாள் எனதானே ப்ரவிக்கு அது புரியும்?

இத்தனை பேரை வைத்துக் கொண்டு இப்படி ஒரு நிலையில் நீ எனது உயிர் என்றா இவன் சொல்லிவிட முடியும்?

“வீட்டுக்கு வா பவிமா, அங்க வச்சு பேசிக்கலாம்” எனதான் சொல்ல முடிகிறது இவனால்.

பவியைப் பொறுத்தவரை தயாளன் வார்த்தைகளையே இன்னும் அவள் தாண்டி இருக்கவில்லை. இதில் ப்ரவி மறுக்கவில்லை என்றாலே அது திருமணத்திற்கான சம்மதம் என்றாகும் சபையில் என்பதாகவெல்லாம் மண்டை ஓடையே தாண்டமாட்டேன் என்கிறது.

இதற்குள் பவிக்கு சாதகமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு தாறுமாறாக பேசிக் கொண்டிருந்தாரே அவர் இடையில் வந்து, “சரி தயாளா, அதுதான் பவிய பெரியவனுக்கு செய்றதுன்னு முடிவு செய்துட்டியே, அப்ப நிச்சயம் இன்னைக்கு நின்னுச்சுன்னு ஏன் இருக்கணும்? இங்கயே போட்ட மேடையில இருந்து, வந்த ஜனம், விருந்துன்னு எல்லாம் இருக்கே, நிச்சயத்த முடிச்சு கூட்டிட்டுப் போய்டேன், உங்களுக்கே மனசுக்கு கொஞ்சம் தெம்பா இருக்கும்ல” என்க,

ப்ரவி மட்டுமா இந்த திருமண பேச்சை மறுக்கவில்லை பவியுமேதான் மறுக்கவில்லை, ஆக இப்படி ஒரு பேச்சை எடுத்திருந்தார் அவர்.

“நிச்சயம்னு ஒன்னு செய்தாதான் ஆச்சா? அதெல்லாம் ஆன மாதிரிதான். வர்ற 14ந்தேதி கல்யாணம், பத்திரிக்கையோட வந்து எல்லோரையும் கூப்டுறேன், வந்து எல்லோருமா கல்யாணத்த நடத்தி கொடுத்துடுங்க” என கருண் திருமணத்திற்காக குறித்திருந்த நாளில் இவர்களது மணம் நடைபெறும் என முடித்துவிட்டார் தயாளன்.

ப்ரவிக்கும் இதில் இன்னுமாய் ஆதங்கம், பவி எதையும் சொல்லும் முன்னும் இதென்ன எடுத்தேன் கவுத்தேன் என்ற வகை முடிவு? அதோடு சபையில் வீட்டுக்கு மூத்தவர் பொறுப்பில் இருப்பவர் இப்படி அறிவிப்பது சின்ன விஷயமாக எடுத்துக் கொள்ளப்படமாட்டாது, சூழ்நிலை கை மீறி போய் கொண்டிருக்கிறது என்பதும் புரிகிறது.

எது என்னதாய் இருந்தாலும் தன் அண்ணனை இத்தனை பேர் முன் விட்டுக் கொடுப்பது தவறு, அவரை எதிர்த்துப் பேசுவதே அவரை இந்த இடத்தில் வெகுவாக நிந்தைக்குட்படுத்தும் என்றுதான் இதுவரையும் ப்ரவியும் கருணும் அவரை இங்கிருந்து கூட்டிப் போவதிலேயே குறியாய் இருப்பது, ஆனால் இதற்கு மேல் பொறுப்பது பவி வரையில் குற்றமாகிவிடும் எனவும்

கருண் கையில் பிடிபட்டிருக்கும் தன் அண்ணனிடம் ஓரிரு எட்டில் சென்ற ப்ரவி, அவர் கைபற்றி நின்று அவர் காதில் குனிந்து அவருக்கு மட்டும் கேட்கும் அளவில் “ஏன்ணா? ஏன் இப்படி செய்ற? நம்ம பவின்ணா அது, எந்த கோபத்தில அவள இப்படி படுத்ற நீ? எதுனாலும் வீட்ல போய் நாம பேசிகிட்டா போதாதா?” என்க, “அவ சம்மதம் சொன்ன அடுத்த நொடி கூட இந்த கல்யாணம் நடக்கட்டும், ஆனா அதுக்கு டைம் கொடு” என சூழ்நிலையை சுட்ட,

இங்கோ தயாளன் திருமணத் தேதியையே அறிவித்த பின் இதற்கு மேலும் சும்மா இருந்தால் பிறகு சொந்தம் என்று ஆட்கள் இருந்து என்னதிற்கு?!

அடுத்த பக்கம்