துளி தீ நீயாவாய் 19(6)

அதில் அதீத கோபம், ஆற்ற முடியா ஏமாற்றம் எல்லாம் அவர் அறிவை அள்ளி மறைக்க “அப்ப கருண கட்டிக்கணும்னு ஆசைப்பட்டியா நீ?” என கேட்டிருந்தார் அவர்.

கருணின் திருமணப் பேச்சை எடுத்ததிலிருந்து அவள் மகிழ்ச்சியாக இல்லை, நேற்றும் அவள் தூக்கில் தொங்கப் போவதாக சொன்னதாக இந்த செவ்வந்தியம்மாள் சொல்லிச்சுதானே, அதோடு கருணை கட்டிக் கொண்டு அழுதாள் என  இப்போது ஒரு நொடி எல்லாம் தாறுமாறாக தோன்ற, சுற்றி இருந்தவர்களின் கூப்பாடு இப்படி அவரை நினைக்கச் செய்திருக்க, இவ்வாறு வந்திருந்தது அவரது வார்த்தைகள்.

இதற்குள் வெகுவாகவே அவருக்கு அருகில் வந்திருந்த பவிக்கு இது தெள்ளத் தெளிவாக காதில் விழ இப்போது “தயாப்பா” என உறுமிக் கொண்டிருந்தாள் அவள். “அவன நான் என்னதா நினைக்கிறேன்னு எல்லாரவிட உங்களுக்குத்தான் நல்லாவே தெரியும்” எனும் போது கோபம் மற்றும் இயலாமையில் அவளை மீறி அழுகை பற்றிக் கொண்டு வந்தது அவளுக்கு.

அதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையிலா இருக்கிறார் தயாளன்? “அப்படியே ஆசைப்பட்டிருந்தாலும் ஒத்த வார்த்த என் காதுல போட்டிருந்தீன்னாலும், ஊரே மெச்ச ஓஹோன்னு நடத்தி முடிச்சுருப்பனே கல்யாணத்த, இப்படி ஊர் சிரிக்க வச்சுட்டியே! என் வீட்டு பிள்ளையா இருந்தா இப்படி செய்திருப்பியா? ஆசை ஆசையா வளத்தாலும் அனாதப் பிள்ளைக்கு குடும்பம்னா என்னதுன்னே தெரியாதுன்னு காமிச்சுட்டியே!” என்றும் பவி பேசிக் கொண்டிருக்கும் போதே வெடித்திருந்தார். அவர் காதுக்குள் போயிருந்தவைகள் எல்லாம் வாயில் வந்திருந்தன.

“அண்ணா என்ன பேசுற யாரப் பேசுறன்னு யோசிச்சுதான் பேசுறியா?” இந்த கர்ஜனை ப்ரவியுடையது என்றால்,

கருணோ தயாளனின் கையப் பற்றி இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டான். “ஏ மாக்கான் நீ பவிய கூப்டுட்டு கிளம்பு, எதுனாலும் வீட்ல போய் பேசிக்கலாம், இவருக்கு யாரும் மருந்து மாத்ர எதுவும் கலந்து கொடுத்துட்டாங்களோ என்னவோ?” என ப்ரவிக்கு கட்டளையாய் துவங்கி தயாளனைப் பற்றி சொல்லி முடித்தான்.

ப்ரவி போய் கையப் பற்றும் போது பவி கல்லென உறைந்து போய் நின்றிருந்தாள். இதுவரை இந்த நொடிவரை அவளுக்கு இதுதான் அவளது குடும்பம், தயாப்பா அவளது அப்பா என முழுமுற்றாய் உரிமையாய் உயிராய் நம்பிக் கொண்டுதான் வாழ்ந்து வந்திருக்கிறாள். அதுதான் அவளது ஆதாரம் மற்றும் ஆணி வேர். அதில் இரண்டாம் சிந்தனையே அவளுக்கு வந்தது இல்லை. அவளைப் போய் நீ என் வீட்டுப் பெண்ணில்லை என்றுவிட்டாரே இவளது தயாப்பா. ஆசிரம குழந்தைகளை கூட அனாதை என்று குறிப்பிடாதவர் இவளைப் பார்த்து இத்தனை பேர் முன்னிலையில் அப்படி ஒரு வார்த்தை சொல்கிறார் என்றால் உண்மையிலேயே அவர் மனதிலிருந்த இடத்தை இழந்து இவள் அனாதையாகிவிட்டதாகத்தான் இருக்கிறது அவளுக்கு.

சுற்றிலும் நடந்த எந்த கூச்சலும் இப்போது அவள் காதுக்கு கேட்கவில்லை. ஊமைப் படம் போல்தான் எதுவும் மனதில் பதியாமல் கருப்பு வெள்ளையாய் கந்தகமாய் இவள் உலகம். அழக் கூட வராமல், கதறக் கூட தெரியாமல் அடி வாங்கிப் போய் அசையாமல் அவள்.

அவள் நிலை என்னதென்று புரிய ப்ரவிக்கு யாரும் எதுவும் சொல்ல வேண்டுமா என்ன? “விடு பவிமா, அவர் எதோ கோபத்துல உளர்றார், நீ வா” என்றபடி இவன் அவள் கை பற்றவும், அவள் மறுப்பாக வெடுக்கென உருவினாள். அவள் நிலையில் அது ஒரு அனிச்சை செயல். அவ்வளவுதான்.

இதற்குள் தயாளனுக்குள் வேறு ஒன்று நடந்திருந்தது. கருணை தான் விரும்பவில்லை என பவி சொன்னது கவனத்தில் ஏறி இருந்தது இப்போதுதான். அப்படியென்றால் இவர் மகா தப்பாக பேசிவிட்டார் என்றும் இருக்கிறது. அதற்கு தன் மீதே வெகு ஆத்திரமாக வருகிறது. ஆனாலும் இவள் அந்த மாளவியை இப்படி விழா வீட்டில் ஓடிப் போக வைத்திருக்கிறாளே என்ற ஆதங்கமும் இன்னும் குறையவில்லை. உண்மையில் என்ன நடந்ததென அவருக்குத் தெரியாதே! ஏதோ காதலுக்கு உதவுவதாக பவிதான் மாளவியை அனுப்பிவிட்டாள் என நினைத்துக் கொண்டார் மனிதர்.

ஆக அவள் வீட்டிற்கு அழைத்த ப்ரவியிடம் மறுப்பாக கையை உருவவும் “சின்னவன் கல்யாணத்த நிறுத்திதான் மானத்த வாங்கிட்டான்னா, பத்தா பாக்கிக்கு இப்ப வீட்டுக்கு வராம தெருவில நின்னு மீதி இருக்க உயிரையும் எடுக்க போறாளாமா?” என எகிறினார்,

உண்மையில் அவள் வரமாட்டேன் என்றுவிடக் கூடாதே என்ற தவிப்பின் வெளிப்பாடுதான் இது. ஆனால் இருந்த கோபத்தில் இப்படி வந்தது.

“அவளுக்கு வேணா நாம அவ குடும்பமா இல்லாம இருக்கலாம், ஆனா ஊரு இது தயாளன் வீட்டு பொண்ணுன்னுதான சொல்லும், அவள தெருவில விட்டுட்டுப் போனா என்னைத்தானே துப்பும், உண்மையில வளர்த்த பாசத்துக்கு கொஞ்சமே கொஞ்சம் நன்றிக்கடன்னு எதாச்சும் இருந்தாலும் உன்ன கட்டிப்பாளான்னு கேளு” என்றார் ப்ரவியைப் பார்த்து.

அனாதை என்ற வார்த்தையை அவளைப் பார்த்து சொல்லிவிட்டோமே என நொடிக்கு நூறாயிரம் கன அடி கணக்கில் மனிதர் தலையில் உறைக்கும் போதுதான் இப்படி வந்துவிழுந்தன வார்த்தைகள்.

உறவை வளர்க்க ஆயிரம் நாட்கள் தேவைப்படுமாயிருக்கும், ஆனால் அதை உடைக்க ஒற்றை வார்த்தை போதுமே!, அந்த வார்த்தையை அல்லவா சொல்லி வைத்திருக்கிறார். அவளால் இனி எப்போதுமே இவரிடம் உறவை உரிமையை உணர முடியாது என்ற கொடூரப் புரிதல், அவள் யாருமற்றவளாக தன்னை உணர்ந்துவிடக் கூடாதே என்ற தாய் வகை தகிப்பு, கூடவே அதற்கு கொஞ்சமும் குறையாத குடும்ப மானத்த சபையில வச்சு வாங்கிட்டாளே என்ற எரிச்சல் இதெல்லாமாக சேர்ந்து இப்படி வடிவெடுத்திருந்தது.

எத்தனையாய் அழுது கொண்டிருந்தவளையும் ப்ரவி சமாதானப் படுத்திவிடுவான் என நேற்றுதானே பார்த்து வைத்திருக்கிறார், அது இப்போது நினைவில் வந்தது இந்த உடனடி திருமண முடிவிற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். பவிக்கு ப்ரவியை பிடிக்கும் எனதான் அவர் மனதில் இருந்ததே தவிர, எந்த சூழலிலும் அவனை மணமகனாக அவள் புரிந்ததே இல்லை என்பதை இப்போது வரையுமே அவர் உணரவில்லை என்பதால் விஷயத்தை இந்த திக்கிலேயே முண்டினார்.

அடுத்த பக்கம்