துளி தீ நீயாவாய் 19 (5)

“அடப்பாதகத்தி, இதுக்குத்தான் இத்தன நாளா திட்டம் போட்டு காத்துகிட்டு இருந்தியா?” என அவர் கத்தத் துவங்க, இது காதில் விழவும்தான் பவிக்கு இங்கு என்ன நடக்கிறது என்பதே ஓரளவு புரிய, அவள் அறையை விட்டு சபையைப் பார்த்து ஓடி வந்தாள் எனில்,

அதற்குள் இங்கோ செவ்வந்தியம்மா  “அனாதைனு துரத்திவிடாம தூக்கி வளத்த வீட்ட நடு சபைல அவமானபடுத்திட்டியே! நேத்து நீ எங்க கருண் பையன நட்ட நடு வீட்ல கட்டிகிட்டு நிக்கப்பவே இதை எங்க தயாளன் ஐயாட்ட சொன்னனே நான்? கேட்டானா அவன்? அங்க பருப்பு வேகலைனதும் இப்படி வந்து கேவலப்படுத்திட்டியே! குடும்பத்தோட பிறந்து வளந்திருந்தால குடும்பத்தோட அருமை தெரியும்? குடும்பத்த முழுங்கிட்டு வளந்தவளுக்கு என்ன தெரியும்? எங்க வீட்டு பிள்ளையா இருந்தா இப்படி எங்க வீட்டு தலைல கொள்ளிய அள்ளி போடுமா அது? அடுத்தவன்ற போய்தான அநியாயமா இப்படி அசிங்கப்படுத்ற” என ஒப்பாரி அளவில் ஆடிவிட்டார் ஆடி.

அவருக்குள் கனன்று கொண்டிருந்த எரிச்சலை களமிறக்க இதைவிட பெரிய வாய்ப்பு எப்போது கிடைக்குமாம்?

“ஏ பெரியம்மா வயசாயிட்டுன்னு பார்க்காம வாய பேத்துடப் போறேன்” கருண் வேறு இப்படி கர்ஜிக்க,  மேடையிலிருந்த தயாளன் இப்போது இங்கு இறங்கி ஓடிவர, அடுத்து  ஆளாளுக்கு வாய்க்கு வந்ததை எல்லாம் பேச, ஒரே கூச்சலும் குழப்பமுமாயும் மாறிப் போனது இடம். யார் என்ன பேசுகிறார் என்றே புரியாத அளவில் ஆளாளுக்கு கத்திக் கொண்டிருந்தனர்.

சற்று தொலைவில் நின்று விழா நிகழ்வுகளை ரசித்தபடியும், அடுத்து நடக்க வேண்டிய உணவு இத்யாதிகளின் ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டபடியுமாய் இருந்த ப்ரவிக்கு இப்போதுதான் இங்கு ஏதோ பிரச்சனையாகிறது எனப் புரிய, அவசர அவசரமாய் ஓடி வந்தான்.

இதற்கிடையில்  “ஐயோ ஒன்னும் தெரியாத என் பிள்ளைய ஒன்னும் இல்லாதவன் கூட அனுப்பிட்டாளா இந்த ஒண்ட வந்தவ?” என மாளவியின் அம்மா வேறு இதுதான் சாக்கென ஆர்பாட்டம் செய்ய,

“என்ன அடி கிடி வேணும்கிதா? இவ போன்னு சொன்னா போறதுக்கு உன் பிள்ளைக்கு ஆள் எங்க இருந்து முளச்சான்? உன் பிள்ள செஞ்ச அசிங்கத்துக்கு எங்க வீட்டு பிள்ளைய குறை சொல்றியா?” என பவிக்காகவும் யாரோ பேச,

“சரி விடு தயாளா, இப்ப என்ன எப்படியும் உன் வீட்டுக்குள்ளயேதான நம்ம பவிக்கு முடிக்கணும்னு நினச்ச? அவளே கருண ஆசைப்படுறான்றப்ப, நிச்சயம் ஏன் நின்னதா இருக்கணும்? இங்கயே கருணுக்கும் அவளுக்கும் கை மாறிடலாம், குறிச்ச தேதியிலயே கல்யாணத்த வச்சுக்கலாம்” என அந்த ஆளே தட்டை திருப்ப,

நல்லது செய்றதா நினச்சுட்டார் போல,

அதற்கு செவ்வந்தியம்மாவோ “என்னது இம்புட்டுக்கு அப்றமும் அந்த அனாத நாய்க்கு கருண கட்டி வைக்கணுமா? இன்னுமா குடும்பத்த கேவலப்படுத்தவா? வளத்த பாசத்துக்கு தூரத்துல எதாவது வேலைய கீலைய வாங்கிக் கொடுத்து  கைய கழுவு தயாளா” என தீர்ப்பு சொல்ல,

அப்போதுதான் பவி அங்கு வந்து சேர்ந்தாள். ப்ரவியும் அந்நேரம்தான் அந்த இடத்தை அடைந்தான். இருந்த கூச்சலில் இவர்கள் இருவருக்குமே யார் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றே புரியவில்லை.

இங்கு தயாளனோ கொதித்துப் போய் நின்றிருந்தார். சும்மாவே அவருக்கு அவர் வீட்டைப் பற்றி எதிரிடையாக யார் எது பேசிவிட்டாலுமே கொதிக்கும், இதில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுக்கோ அவர் எரிமலையாகவே நின்றிருந்தார். அதுவும் பவி அவருக்கு இதயத்துக்கு மிக நெருக்கமானவள் அல்லவா? ஆளாளுக்கு அவளைப் பற்றிப் பேச அவரோ கொந்தளித்துக் கொண்டிருந்தார். ஆனால் பவி பக்கம் தவறே இல்லை என காட்டிவிட்டல்லவா இவர் எல்லோர் பல்லையும் பிடுங்க முடியும்?

ஆக பவி வரவும் “ஏல என்ன நடந்துச்சுன்னு சொல்லுல?” என உறுமியவர் “அந்த மாளவிய நீயா கருண கட்டிக்காதன்னு  சொல்லி அனுப்பி வச்ச?” என முழு நம்பிக்கையுடன் தீயின் தீவிரமாக கேட்டார்.

“நான் சொல்லல, அவளா போய்ட்டா” என்ற வகை விளக்கமாகத்தான் இருக்கும் பவியின் பதில் என்பது அவரது 100% நம்பிக்கை.

ப்ரவியோ இப்போதுதான் விஷயம் அறிந்தவனாக “என்னண்ணா இது? இங்க வச்சு பேசிகிட்டு? முதல்ல வீட்டுக்கு கிளம்புவோம் நாம” என பேச்சையே முடிக்கப் பார்த்தான். மாளவி போய்விட்டாள் என்பது அதிர்ச்சிதான் அவனுக்கு. ஆனால் குடும்ப விஷயத்தை சபையில் வைத்து கிளறி எதற்கு என்பதும் இருக்கிறதுதானே!

பவிக்கோ இதுவரைக்கும் யார் அவளைப் பற்றி என்ன பேசினார்கள் என்றும் தெரியாது, இருந்த கூச்சலில் தயாப்பா என்ன கேட்கிறார் எனவும் புரியவில்லை. கூட்டத்தில் அவரை விட சற்று தொலைவில் வேறு இருந்தாள் அவள்.

அவளுக்கு முழு மொத்தமாய் இடிந்து போய் காணப்பட்ட தயாளனின் நிலைதான் பார்க்கவும் புரிகிறது, இந்த நிச்சயம் நின்றுவிட்டதற்காகத்தான் அவர் இப்படி தவிக்கிறார் போலும் எனத்தான் தெரிகிறது. அவள் மனம் அதில்தானே அடித்துக் கொண்டு கிடக்கிறது. ஆக அதையே நினைத்தவளாக “ஐயோ தயாப்பா இதுக்கு ஏன் இவ்வளவு ஃபீல் பண்றீங்க, அவ போனது நிஜமாவே கருணுக்கும் நம்ம எல்லோருக்கும் நல்லதுதான், இதோட போச்சுன்னு எடுத்துக்கோங்க” என சொல்லியபடி கூட்ட நெருசலில் இன்னுமாய் அவருக்கு அருகில் போக முயன்றாள்.

அவ்வளவுதான் தரையில் விழுந்த கண்ணாடிக்கலமாய் உடைந்து தெறித்தார் தயாளன். பவி நான் இந்த திருமணத்தை நிறுத்தவில்லை என்று சொல்லவில்லையே! இது நல்லது என்றல்லவா சொல்கிறாள். அதாவது அவள்தான் செய்தாள் என ஒத்துக் கொள்வதாக அவர் எண்ணிவிட்டார்.

அடுத்த பக்கம்