துளி தீ நீயாவாய் 19(4)

தன்னிடமிருந்த கடிதத்தை எடுத்து மாளவியிடம் காட்டினாள். அதை வாசிக்கவும் வெகுவாக அதிர்ந்து போய் பார்த்த மாளவியிடம்,

“இது யாரும் எதுவும் உங்கள ப்ளாக்மெயில் செய்ற வேலையா? அப்படின்னா சொல்லுங்க, எங்க ப்ரவி போலீஸ்தான், எல்லாத்தையும் அவன் பார்த்துப்பான், சின்னதா கூட வெளிய விஷயம் வராது” என தவிப்பில் சுண்டிப் போன முகத்தோடு பவி விசாரிக்க,

“ஐயோ இல்ல, அசோக் ரொம்ப நல்ல டைப்” என வீரீடாத குறையாக பதில் கொடுத்தாள் மாளவி.

பவிக்கு இதில் மொத்தமும் விழுந்து போனது “அப்ப யாரு நல்லா இல்லாத டைப்?” என கேட்கும் போதெல்லாம் இவள் குரலில் கட்டுப்படுத்தப்பட்ட அழுத்தம் வந்திருந்தது.

“கடந்த காலத்தில் உங்களுக்கு காதல்னு ஒன்னு இருந்தாலே உங்கள மோசம்னு எல்லாம் சொல்லிட்டு போய்ட மாட்டேன், காதல்ன்னு ஒன்னு வந்த பிறகு நம்ம நியாய உணர்வுக்கு, மனசாட்சிக்கு அந்த உறவு ஒத்து வரலைனா அதை விட்டு வெளிய வர்றது கண்டிப்பா தப்பு இல்ல, ஆனா பணத்துக்காக மட்டுமே அதைவிட்டு வெளியே வந்தா அதை சரின்னு சொல்ல முடியலையே” என இவள் கேட்க,

அடுத்த நொடிகளிலெல்லாம் வாய் பொத்தி கதறிக் கொண்டிருந்தாள் மாளவி. மாளவிக்கு இந்த கடிதம் எழுதிய அசோக் மீதுதான் காதலாம். இவளது அம்மாவுமே சம்மதித்திருந்தாராம். இவளுக்கு வேலை கிடைக்கவும் திருமணம் என பேச்சாம். இப்படி திடுதிப்பென கருணுக்கு இவளை கேட்கவும் இவளது அம்மாவுக்கு மனம் அலை பாய்ந்துவிட்டது. பெரிய இடத்து சம்பந்தம், எத்தனை வசதி எத்தனை கௌரவம், அதோடு எல்லோரும் மிகவும் நல்ல குணமும் உள்ளவர்களே! எதற்காக இந்த இடத்தை வேண்டாம் என்க வேண்டும் என்பது அவருக்கு. நிறைய அழுது எமோஷனல் ப்ளாக்மெயில் செய்து இவளையும் தன் விருப்பத்திற்கு மண்டை ஆட்ட வைத்திருக்கிறார். அதனால்தான் அவசர கல்யாணமும் கூட.

இதை மாளவி சொல்லிக் கொண்டிருக்க,

“எதுனாலும் யோசிச்சு செய்ங்க, உங்க அம்மா, இந்த கூட்டம்னு மிரளாதீங்க, இப்ப கூட எங்க தயாப்பாட்ட இதைச் சொன்னா எப்படியும் யாருக்கும் பாதகம் வராம விஷயத்தை ஹேண்டில் பண்ணிடுவாங்க” என பவி ஆலோசனை தெரிவித்த நேரம்,

அது வரைக்குமாய் திட்டம் எதுவுமின்றி நடக்கும் நிமிடங்களை மட்டுமாய் எதிர்கொண்டு பேசிக் கொண்டிருந்த மாளவி அதற்குள் சுற்று முற்றும் அரக்க பறக்க பார்த்தவள் “இப்ப கூட நான் அசோக் கூட போகலைனா, அடுத்து நான் அசோக்க  பார்க்கவே வழி இல்லாம ஆனாலும் ஆகிடும்” என சொல்லிக் கொண்டே பின் வாசல் வழியாய் அந்த காரை நோக்கி ஓடத் துவங்கினாள்.

இதை சற்றும் எதிர்பாரா பவி ஸ்தம்பித்துப் போனாள். இப்போது இவள் என்ன செய்ய வேண்டும்? பிடித்து இழுத்து வந்து மாளவியை விழாவில் நிறுத்தவா முடியும்? நினைக்க நினைக்க இன்னும் மிரட்சியாகிறது பவித்ராவுக்கு.

நிச்சய வீட்டில் எதுவும் விபரீதமாக நடந்துவிடக் கூடாதெனதானே இவள் முதலில் இந்த கடிதப் பேச்சை துவக்கியதே! அது இவள் பேசியதாலேயே நடந்தேறுகிறது என்றால் எப்படி இருக்கிறது? யாரிடம் போய் என்னவென்று சொல்வாள்? இவள் வீட்டிற்கே பெருத்த அவமானமாக இருக்குமோ? ஐயோ தயாப்பா எப்படி தாங்குவார்? கருணுக்குமே எப்படி இருக்கும்? என எல்லாம் இவளை கொன்றெடுக்கிறது. ஆனால் எல்லாம் சில நொடிகள்.

அதற்குள் சுதாரித்துவிட்டாள் பவி.  பணத்திற்காகவோ அல்லது அவளது அம்மாவிற்காகவோ இந்த நொடி வரை அசோக் காத்திருக்கிறான் என தெரிந்தும் கருணை திருமணம் செய்யத்தான் சம்மதித்திருந்திருக்கிறாள் மாளவி, இதோ இப்போது இவர்கள் வீட்டிற்கு விஷயம் தெரிந்துவிட்டது என புரியவும் அசோக்காவது வேண்டும் என யாரைப் பற்றியும் யோசியாமல் ஓடிவிட்டாள்.

இவள் கருணிற்கு மனைவியாகி இருந்தால் அவன் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? அதே ம் அப்றம் மனைவியாகவே மாளவி அவனிடம் நடித்துக் கொண்டிருப்பாள். நினைக்கவே கொடுமையாக இருக்கிறது. எத்தனை துடிப்பானவன் கருண்? அவனுக்கு அவனைப் போல உயிர்ப்புள்ள மனைவி அவன் மீது உயிரானவளாய் அல்லவா ஒருத்தி வர வேண்டும்?

மாளவி இப்படி ஓடாமல் தயாப்பாவிடம் விஷயத்தை சொல்லி இருந்தாலும் மாளவியின் அம்மா என்ன மாதிரி விஷயத்தை திருப்புவார் என்று சொல்வதற்கில்லை! அம்மா பேச்சுக்கு ஆமா சாமி போடும் மாளவியும் அதற்கு ஒப்பு தாளம் போடமாட்டாள் என்றும் இல்லை.

ஆக நடந்து கொண்டிருப்பது நல்ல விஷயம்தான்.

இப்படி யோசிக்கவும் வெகுவான நிதானத்துக்கு வந்துவிட்ட பவி அடுத்து என்ன செய்ய எனத் தெரியாமல், இந்த விஷயம் பற்றி ஓரளவாவது தெரிந்தவன் கருண்தானே அவனை மொபைலில் அழைத்தாள்.

அங்கு மேடையில் பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டு பெரியவர்கள் ஏதோ முறைமைகளை நடத்திக் கொண்டிருக்க, கருண் மேடை அருகில் அவன் வயதொத்த குடும்ப கூட்டம் சூழ அமர்ந்திருந்தான். அப்போதுதான் வருகிறது இந்த அழைப்பு. கருண் மேடையில் இருக்கும் போது அவனது மொபைலை அவன் கையாள முடியாதென அதை அவனது ஒரு அண்ணன் கையில் வைத்திருந்தான்.

பவி எண்ணிலிருந்து அழைப்பு எனவும், அது மணப் பெண்ணின் அறையிலிருந்தே வரும் அழைப்பல்லவா? “டேய் இதுக்குள்ள உன் ஆளுக்கு உன்ட்ட பேசணுமாமே, அப்படி என்னடா பேசிக்கிறீங்க?” என்ற கிண்டலுடன் அந்த கேடுகெட்ட அண்ணன் மொபைலை ஸ்பீக்கரில் போட்டு இணைப்பை ஏற்க,

பவியோ கருணிடம் எப்போதுமே விளையாட்டுத்தனமாக பேசுபவள், அதுவும் சற்று முன் வரை அவனை வம்பிழுத்துக் கொண்டும் இருந்திருக்கிறாள், இப்போதும் விஷயத்தை ஐயோ அம்மா என அவனிடம் ஆரம்பிக்காமல் இலகுவாக பேச வேண்டும் என எண்ணிக் கொண்டு,

“டேய் கரண்டி நீ தப்பிச்சுட்டடா, பேசியே அந்த மாளவிய நான் ஓட வச்சுட்டேன், எதோ அசோக்காம் அவன் கூட போய்ட்டா. ப்ரியாணி மிஸ் ஆனதுல எனக்கு ஒன்னும் வருத்தம் இல்ல, பாரு நான் நிஜமாவே உன் மேல பாசமாதான் இருக்கேன்” என மொபைல் ஸ்பீக்கரில் இருக்கிறது என்பதை அறியாமல் சொல்லி வைத்தாள். உண்மையில் உள்ளுக்குள் அவளுக்கு கருணை நினைக்கையில் அழுகை குமுறிக் கொண்டு வந்ததுதான். ஆனால் அதை அவனிடம் காட்டுவதால் அவனுக்கு என்ன கிடைத்துவிடும்? இதுவாவது நடந்த விஷயம் அவனுக்கு பெரிதான இழப்பு ஒன்றும் இல்லை என துளியாவது தோன்ற வைத்துவிடாதா என்ற ஒரு எதிர்பார்ப்பில் அவள் இப்படி பேச,

இங்கு கூட்டத்தில் கேட்டவர்களுக்கு எப்படி இருக்கும்? காதில் விழுந்த ஒவ்வொரு ஆணும் திகைக்க, அப்போதுதான் அந்தப்பக்கம் வந்திருந்த செவ்வந்தியம்மாவின் காதில் இது விழுந்ததுதான் உச்சம்.

அடுத்த பக்கம்