துளி தீ நீயாவாய் 19 (3)

மாளவிய பழி வாங்கணும்னே எவனாவது இப்படி வந்து லெட்டர வச்சுட்டு போகலைனும்தான் என்ன நிச்சயம் என்றும் இருக்கிறது இவளுக்கு.

இவர்கள் வீட்டில் பல பல வருடங்களுக்கு பின் வரும் முதல் திருமணம் அல்லவா, நிச்சயவிழாவிற்கே ஏகப்பட்ட எண்ணிக்கையில் பேருந்துகள் அமர்த்தி இருக்க, திருவிழா கூட்டம் போல் வீட்டிற்குள்ளும் வெளியிலுமாய் உறவும் நட்பும் கச கச என ஏராளமானோர் குழுமி இருந்தனர்.

யாரும் மனம் கோணாதபடி ஆனால் முறையாய் பேருந்தில் ஏற உதவிக் கொண்டிருந்தான் ப்ரவி. கூட்ட நெரிசலுக்குள் பரபரவென அவன். ஆக அவனைத் தேடிப் போன இவளுக்கு தூரத்திலிருந்து அவன் நிலையைக் காணவும் அவனிடம் இந்த விஷயத்தை இப்போது பேசத் தேவையான தனிமை வாய்க்காது என்பது புரிந்து போயிற்று.

இவளுக்கிருந்த அடுத்த வழி, விஷயத்தை கருணிடம் சொல்வதுதான். அவனும் தாயாதிக்காரர்கள் எனப்படும் ஒன்னுவிட்ட அண்ணா தம்பி என ஒரு படையே சூழத்தான் கிளம்பிக் கொண்டிருந்தான். அந்த அறை வாசல் வரை போனவள் நிலமையைப் பார்க்கவும் திரும்பி வந்துவிட்டாள்.

ஆனால் இவள் வந்து போனதை கவனித்த கருண் ஏதோ முக்கிய விஷயம் இவன் சம்பந்தப்பட்டது என்பது வரை யூகித்துவிட்டான். வயதுப் பசங்களாக மட்டும் இருக்கும் அறைக்கு அவள் இந்த நேரம் வந்து பார்த்துவிட்டு செல்கிறாளெனவும் இப்படித் தோன்றிவிட்டது இவனுக்கு.

ஆக குளியலறைக்குள் சென்று நின்று கொண்டு இவளை மொபைலில் அழைத்தான்.

“கொத்துபரோட்டா என்ன விஷயம்? மாலு பத்தி எதுவுமா?” என நேரடியாக விஷயத்திற்கும் வந்தான். மாளவி சம்பந்தப்பட்டதை தவிர வேறு எதுவும் இந்நேரத்தில் அவசர விஷயமாக இருக்காதே என்பது இவனுக்கு.

பவிக்கு வெகு தயக்கமாக இருந்தாலும் அவள் விஷயத்தை இவனிடம் சொன்னாள்தான். “இவ்ளவுதான, விடு! மாலுவ நேர்ல பார்க்கப்ப கேட்டுகலாம், ஒரு மொட்ட லெட்டர வச்சில்லாம் எதையும் பெருசா யோசிக்க கூடாது” என்றான் அவன்.

“ம்” என்றாள் இவள். பவிக்குமே ஏறத்தாழ அதே எண்ணம்தான் எனினும் இவள் அறை வரை வந்து புடவைக்குள் கடிதம் வைப்பதென்றால் முழுமையாய் அசட்டை செய்யவும் நெருடுகிறது.

“ஹேய் என்ன நீ ஊமக்குழல் வாசிக்க? ஆயிரத்தில் ஒரு வாய்ப்பா இது உண்மையா இருந்துட்டா என்ன செய்யன்னு யோசிக்கிறியா? இங்க பார் மாலுட்ட நான் மேரேஜ் செய்றதா வாக்கு கொடுத்த நிலையில இருக்கேன் அப்படித்தான? அப்படின்றப்ப எனக்கு அவள சந்தேகப்படுற போல எதையும் யோசிக்க பிடிக்கல, மத்தபடி இதை உண்மைன்னு அவளே சொல்லிட்டா இப்படி ஒரு மேரேஜ் நின்னு போனதுக்காக நாம சந்தோஷம்தானே படணும்” என்றான் தெளிவாக.

இதில் கொஞ்சம் ஒருவாறு இலகுவாகிவிட்டாள் இவள். அவன் சொல்வது சரிதானே!

இதோடு இவர்கள் பேச்சை முடித்திருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். அப்படி இல்லாமல் கருண் வாட்சப்பில் வம்பை வளர்த்தான்.

“அடப்பாவமே எங்க இவன் கல்யாணத்துல மாட்டாம தப்பிச்சுருவானோன்னா அவ்வளவு ஃபீல் பண்ணிட்ட?” என்றான். கடித விஷயத்தை சொல்ல அவள் அத்தனை தயங்கியதையும் வருந்தியதையும் இப்படி கலாய்த்தான்.

பிறகு பவி என்ன செய்வாள், “பின்ன ப்ரியாணில்ல மிஸ்ஸாகிடும்” இது அவளது பதில். நிச்சயவிழா நின்று போனால் பிரியாணி கிடைக்காதுதானே என்பது அர்த்தம்.

“ஆனாலும் கொத்துபரோட்டா உனக்கு என் மேல இம்புட்டு பாசம்னு இதுநாள் வரைக்கும் தெரிஞ்சுக்காமலே இருந்துட்டேன்” தொடர்ந்தான்.

“ப்ரியாணி முன்னால பாசத்துக்கு இடம் கொடுக்க முடியாது” இப்படியாய் தொடர்ந்து கொண்டிருந்தது இவர்களது வாரல்கள்.

இதில் மாளவி வீட்டை அடைந்தால் வீட்டின் முன்புறம் இருந்த காலி மைதானத்தில் பந்தலிட்டு மேடை வைத்து அங்கேயே விழா ஏற்பாடாகி இருக்க, மாப்பிள்ளை வீட்டார் யாருக்கும் பெண் வீட்டிற்குள் செல்லும் நிலையே வரவில்லை.

விழா துவங்கி முறைமைகள் நடந்தேற, நிச்சய புடவையை வாங்கிக் கொள்ள மேடைக்கு வந்த போதுதான் மாளவி இவர்கள் கண்ணில் கிடைத்தாள். அவளுக்கு புடவை கட்ட என ஒரு கூட்டமே அவள் பின் கிளம்ப, பவிதான் அதை செய்ய வேண்டும் என இவளையும் கூட்டிக் கொண்டு போயினர்.

மாளவி அவளுக்கான அறைக்குள் நுழையும் போதுதான் பவியின் கண்ணில் படுகிறது அந்த அறையில்தான் பின் வாசல் இருக்கிறது, சற்று தூரத்தில் அங்கு ஒரு சாம்பல் நிற காரும் நின்று கொண்டிருக்கிறதென. வெளிறிப் போன முகத்தோடு மாளவியின் பார்வை வேறு அங்கேயே போய் வந்து கொண்டிருக்கிறது.

இப்போது வெகுவாக பதறிப் போனாள் பவித்ரா. ஆக இந்தக் கடிதம் உண்மைதானா? ஐயோ கருண் மனதில் வேறு ஆசைய வளத்து வச்சுருக்காளே! தெய்வமே இந்த நிலையில் மாளவி ஓடிவிடுவாளோ? ஆனால் அந்த கடிதக்காரன் காத்துக்கொண்டு இருக்கிறான் என்றாலும் இவள் கருணுடனான திருமணத்துக்குத்தானே தயாராகிக் கொண்டிருக்கிறாள்? ஒருவேளை முன்பே முறிந்து போன காதலோ? அந்த அவன் மிரட்டுகிறானோ? விழா சபையில் மாளவியின் முன்னாள் காதலை பற்றி சொல்லி அவன் இழிவு செய்தால்? இப்படி எதெல்லாமோ இவளுக்குள் தவிக்க,

“அவங்களா முதல்ல புடவைய கட்டிகட்டும் அப்றம் மத்த மேக்கப் நாமல்லாம் சேர்ந்து செய்யலாம்” என அவசரமாய் மற்ற அனைவரையும் அறைக்கு வெளியே அனுப்பிய பவி,

“இதோ ஒரே ஒரு நிமிஷம்” என்றபடி தன்னையும் உள்ளே வைத்து கதவை பூட்டிக் கொண்டாள். அதாவது அறையில் இப்போது பவியும் மாளவியும் மட்டும்தான்.

அடுத்த பக்கம்