துளி தீ நீயாவாய் 19 (2)

தயாளனுக்கோ இந்த நிகழ்வு மனதில் குத்திக் கொண்டே இருந்தது. ‘எத்தன செய்துருக்கோம் இந்தம்மா வீட்டுக்கு, இருந்தும் நம்ம வீட்டுப் பிள்ளைகள பார்க்க வயித்தெரிச்சல் மட்டும்தான் வருது இதுக்கு’ என்ற வகை குத்தல் அது.

அங்கு பவியோ அவள் என்ன நினைத்து அழுகிறாள் என கருணிடம் கூட சொல்லவில்லை. சொல்ல முடியாமல் மொட்டையாய் அழுது கொண்டிருந்தாள். அவனிடம் போய் என்னவென்று சொல்வாள்?

ஆனால் பவியின் அறைக்குள் நுழையவுமே கட்டிலில் கிடந்த உடையக் காணவுமே ப்ரவிக்கு அவள் என்ன நினைத்து அழுது கொண்டிருப்பாள் என யூகிக்க முடிந்துவிட்டது.

“அதான் யாருக்கும் எதுவும் ஆகல, ஒரு சின்ன சீப்பு சோப்பு கூட காணாம போகலல்ல, அப்றமும் ஏன் லூசு இவ்ளவு ஃபீல் பண்ணி அழுதுகிட்டு இருக்க? வந்து ஆட்டய போடு, வேட்டைல ஆளுக்கு பாதின்னு நீதான் உன் சிந்தி கொந்தி எதையும் கூப்ட்டுருந்தியோ? ப்ளான் ஊத்திகிட்டுன்னு அழுறியோ?” என அம்சமாய் அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்த கருணை

“சீ போடா, நான் பேசிக்கிறேன்” என துரத்திவிட்ட ப்ரவி, அவளும் அவனுமான தனிமையில்

“ஏ லூசு வந்தவன் என்ன அந்தரத்தில் அரை மணி நேரமா தொங்கி நின்னா உள்ள என்ன நடக்குன்னு பார்த்திருக்க முடியும்? ஜன்னல் பக்கம் அவன் சுவத்துல தொங்கினா நம்ம ரோட்ல போற வார எல்லோருக்கும் கண்ல படும்ல, பார்த்துகிட்டு நம்ம ஆட்கள் சும்மாவா நிப்பாங்க? இந்நேரத்து போஸ்ட்ல கட்டி வச்சு உரிச்சிருக்க மாட்டாங்க அவன? எதுக்கோ அவசரமா இறங்கினவன் வந்த வேகத்தில் திரும்ப போயிருக்கணும், ரெண்டு மூனு செகண்டுக்கு மேல அவனுக்கு இங்க நேரமே கிடச்சிருக்காது” என ஆறுதல் சொல்ல

அந்த அன்னியனை இவள் பார்ப்பதற்கு முன்னர் சில பல நிமிடங்களாக குளியலறையில் ஈர முடியை உலற்ற இவள் முயன்று கொண்டிருந்தது ஞாபகம் வந்தது இவளுக்கு. அதற்கும் முன்னிருந்தே அந்த அவன் இவர்கள் வீட்டு தெருப்புற சுவரில் தொங்கி நின்றிருந்து இவளை பார்த்திருக்க முடியாதுதான் என்பது இப்போதுதான் மெல்ல உறைக்க, ஒருவாறு நிம்மதியாயிற்று இவளுக்கு.

இது போதாதென பவி அன்று இரவு அவளது அறைக்குள் படுக்க வரும் போது பார்க்கக் கிடைக்கிறது அந்த ஜன்னல் மீது அதன் அளவிலேயே மறைத்துப் பொருத்தப்பட்டிருந்த பலகை சிற்பம். கூடவே இது இவள் அறைதானா என எண்ண வைக்கும் ஒரு கனோஃபி வகை படுக்கையும் லாவண்டர் நிறத்தில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்தது. (அறையின் மேற்கூரையில் இருந்து படுக்கை முழுவதுமாய் மெல்லிய லேஸ் போன்ற துணி சூழ்ந்திருக்கும் வகையான படுக்கை)

அந்த ஜன்னலை நினைத்து எப்படியும் ஒரு அதீத கவனம், நிம்மதியின்மை, தவிப்பு என எதுவும் இவளுக்கு வந்து கொண்டே இருக்கும் என்ற புரிதலில் அதை மறைக்க மரவேலைப்பாடு வாங்கப் போன ப்ரவியின் கண்ணில் இந்த ஐரோப்பிய பாணி படுக்கை பட, அந்த நாளின் பரிசாக அதை வாங்கி வைத்திருந்தான்.

அதைக் காணவும் “டேய் கரண்டி எடுடா அந்த கட்டைய, ஒருத்தன் என் பிஜி படிக்கிற லட்சியத்தையே போட்டு தள்ளிட்டான்” என கூவியவள் “ஹி ஹி இதுல தூங்குறதவிட்டுட்டு நான் எங்க படிக்கப் போக?” என ஒரு விளக்கம் கொடுத்தபடி துள்ளி ஏறி அந்தப் படுக்கையில் விழ,

இதையெல்லாம் கண்டும் காணாமலுமாய் பார்த்துக் கொண்டிருந்த தயாளனின் மனதில் சந்தோஷ வர்ணம். எப்படி இந்த பவி பிள்ள மூஞ்ச தூக்கிட்டு இருந்தாலும் இந்த ப்ரவி பய அவள சிரிக்க வச்சுடுறான் என ஒரு நிறைவு. இந்த கட்டிலை வாங்கினதுக்கு அவன் அடுத்த மாசம் என்ன அடி வாங்கப் போறான்னு அவருக்கு தெரிஞ்சாதான?

இதில்தான் மறுநாள் விடிந்தது நிச்சயவிழாவிற்காக. இருள் பிரியும் அதிகாலையிலேயே முழுவதுமாய் கிளம்பி இருந்த பவி அவசர அவசரமாய் மாளவிக்கான புடவை இத்யாதிகளை எடுத்து தாம்பளத்தில் வைத்துக் கொண்டிருந்தாள். அப்போது கை தவறுதலாக புடவை கீழே விழ, அதில்தான் அது எட்டிப் பார்க்கிறது. புடவைக்குள் இருந்து ஒரு துண்டுக் காகிதம்.

‘மாலு உன்னை நான் தேடாத இடமில்லைன்றதுக்கு இந்த லெட்டரே சாட்சி, அமரகுளம் வரைக்கும் வந்துட்டேன், உன்னையத்தான் காணோம், இந்த லெட்டர் உன் கைல கிடைக்கவும் நீ நேர உங்க வீட்டு பின் வாசலுக்கு வா, அது பக்கத்தில் ஒரு காரோட காத்துகிட்டு இருப்பேன், இப்ப உள்ள என் சம்பளம் நம்ம ரெண்டு பேருக்கும் போதும், எப்ப நம்ம வருமானம் கூடுதோ அப்ப உன் அம்மாவையும் நாம கூட கூட்டிட்டு வந்துடலாம், உன் அம்மா வசதியான இடத்து சம்பந்தம் வருதுன்னதும் இப்ப நம்மட்ட இப்படி நடந்துகிட்டாங்கன்னாலும் நம்ம மேரேஜ்க்கு பிறகு எப்படியும் நம்மட்ட திரும்பவும் சேர்ந்துப்பாங்க. அவங்க நம்மட்ட இப்படி நடந்துகிட்டத நானும் மனசுல வச்சுக்க மாட்டேன், என்ன நம்பு’ என்று எழுதி இருந்தது அதில்.

ஆடிப் போனது இவளுக்கு. சிந்திக்கும் நிலைக்கு வரவே சற்று நேரம் பிடித்தது இவள் மனதுக்கு. இதை எவ்வளவு நம்ப, எப்படி எடுக்க என அடுத்து ஒரே குழப்பம். இதற்காக இந்த நேரத்தில் ஊரே கூடி வந்திருக்கும் இந்த விழாவை நிறுத்துவது சரியா தவறா? என்ற கடும் தவிப்பு.

ம், அப்றம்ன்றத தவிர எதுவும் பேசல என கருண் மாளவியைப் பற்றி சொல்லியது வேறு மனதில் வருகிறது. ஆனால் அதனாலே மட்டுமே இந்த கடிதம் உண்மை என்று ஆகிவிடுமா? புடவை நிறம் முதற்கொண்டு ஒவ்வொன்றையும் மாளவியிடம் கேட்டுதான் செய்து கொண்டிருக்கிறது. அவளுக்கு விருப்பம் இல்லாத திருமணம் என்று எப்படி இதை நம்ப?

அடுத்த பக்கம்