துளி தீ நீயாவாய் 19

அந்த நொடி வரை பவிக்கு இருந்தது யார் அது திருட்டுத்தனமா வீட்டுக்கு வந்தது என்ற ஒற்றை உணர்வு மட்டும்தான்.

ஆனால் அடுத்த நொடிதான் இவள் சற்று முன் உடை மாற்றிப் பார்த்த விஷயம் நியாபகம் வர, அதையா மறைந்திருந்து யாரும் பார்த்துவிட்டார்கள் என்ற ஒரு கேள்வி திகீரென இவளுக்குள் முளைக்க, அவ்வளவுதான் கிடுகிடுவென இவளுக்கு உடலெல்லாம் நடுங்கிக் கொண்டு வந்தது.

தனது அறை வாசலை நோக்கி பாய்ந்து ஓடத் துவங்கினாள் வெடித்து வரும் அழுகையோடும், “ஐயோ” என்ற அலறலோடும்.

இவள் அறைக்கு எதிர் அறையில்தான் இருந்திருந்தான் கருண். அவனுக்கு இவளது ஹேய் யார் நீயே காதில் விழுந்திருக்க, அப்போதே இவளது அறை நோக்கி வேக வேகமாக ஓடி வந்தவன், இவள் அறைக் கதவை திறந்து கொண்டு வெளியில் பாயும் போது சரியாய்

“என்னாச்சு பவி?” என்றபடி அங்கு வந்து சேர்ந்திருக்க, அவன் மார்பிற்குள் வந்திருந்தாள் பவித்ரா வந்த வேகத்தில்.

அழுகையில் வெடித்தபடி நடுங்கிப் போய் தன் மீது வந்து விழுந்தவளை இயல்பாய் ஒற்றைக்கையால் அணைத்திருந்தான் இவன். உடன் வளர்ந்த உறவென்று ஒன்று இருக்கிறதுதானே!

“ஹேய் அழாத நீ, இங்க என்ன பயம் உனக்கு? என்னாச்சு பவி? நாங்கல்லாம் இருக்கமே, அப்படி யார் என்ன செய்துட முடியும்?” அவள் குலுங்கியபடி வாய் பொத்தி  வெடிக்க, அவள்  நிலையை உணர்ந்தவன், தவிக்கத் தவிக்க இப்படித்தான் விசாரித்தான். நூறு சதவீதம் சகோதரம் அது.

இதற்கெல்லாம் இரண்டொரு நிமிடங்களுக்கு முன்தான் ப்ரவி வீடு வந்து சேர்ந்திருந்தான். தரைதள வரவேற்பறையில் நின்று பேசிக் கொண்டிருந்தான் அவன். இவளது அலறல் கேட்கவும் படியேறி மாடி நோக்கி பாய்ந்தவன்,

கருணிடம் அவள் பாதுகாப்பாகவே இருப்பதைக் காணவும் போலீஸ்காரனாச்சே வீட்டின் உள்ளும் புறமும் மாடியிலுமாக வந்தவனை ஓடி தேடினான்.

இது எல்லாமே பவியின் சத்தம் கேட்டு படியேறிய தயாளன் மற்றும் செவ்வந்தியம்மாவின் கண்களிலும் விழுகிறது.

“ம்க்கும் அடுத்தவள கட்டிக்கப் போறவன கூச்ச நாச்சமே இல்லாம கட்டிகிட்டு நிக்கா பாரு ஒருத்தி” என முனகிய செவ்வந்தியம்மா அதில் சுள்ளென திரும்பிய தயாளன் எதுவும் சொல்லிவிடும் முன்

“இல்ல சின்னவன்ட்டதான் இவளும் சேர்றா, பெரியவனும் அதுதான் சரின்றாப்ல வெளிய போய்ட்டான், சின்னஞ் சிறுசுங்க மனசுல என்ன இருக்குன்னு தெளிவா கேட்டுக்கிட்டியான்னு கேட்டேன் தயாளா, உன்ட்ட சொல்ல பயந்துகிட்டு, நாளைக்கு சபையில அதுங்கல்லாம் சேர்ந்து எதாவது செய்து வச்சுட்டுன்னா, நமக்குத்தான அசிங்கமா போய்டும்” என தன்மையான அக்கறை குரலில் ஒரு விளக்கமும் கொடுத்தது.

“என்ட்ட பேச பயப்படுற அளவுக்கு எங்க பிள்ளைங்க முட்டாளுங்களும் இல்ல, அவங்க விருப்பம் தெரியாம  நிச்சயத்துக்கு ஊர கூட்ற அளவு அறிவு கெட்டவனும் நான் இல்ல” இதற்கும் இப்படித்தான் குமுறினார் தயாளன்.

பின்ன கோபம் வராதா என்ன?

ஆனால் விழாவுக்கென வீட்டுக்கு ஆட்கள் வர துவங்கிவிட்ட நிலையில் அண்ணனின் இந்த கோபமும் செவ்வந்தியம்மாவின் வாய் போகும் விதமும் சேரும் போது விபரீதமாகிவிடக் கூடும் என உணர்ந்த கருண், இந்தப் பேச்சுக்கள் காதில் விழவும் “என் ரூம்ல போய் இரு பவி” என தன் அறைக்குள் அவளை நகர்த்திவிட்டு விடுவிடென செவ்வந்தியம்மா நோக்கி படி இறங்கியவன் “பெரியம்மா நாளைக்கு காலைல ஆறு மணிக்கெல்லாம் கிளம்பினாதான் நாம 10 மணிக்காவது பொண்ணு வீட்டுக்கு போய் சேருவோம், அதனால இப்பவே போய் தூங்கினாதான் காலைல கிளம்ப உனக்கு சரியா இருக்கும்” என அவரின் கையைப் பற்றி படி இறக்கி கீழே வாசல் வரையும் கூட்டி போய்விட்டான்.

கழுத்த பிடிச்சு தள்ளுவதை ரொம்ப சீன் க்ரியேட் செய்யாம செய்றதுதான். அப்படித்தான் உணர்ந்தது அந்த செவ்வந்தியம்மா, ஆனால் எதையும் சொல்ல முடியாமல் கிளம்பிப் போய்விட்டது.

அடுத்த பக்கம்