துளித் தீ நீயாவாய் 5(9)

இவன் விஷயம் என வரும் போது இவனுக்கு பெரிதாக சட்டை செய்து கொள்ளக் கூட தோன்றவில்லை. இவன் இப்போதைக்கு திருமணத்தை பற்றி யோசிப்பதாக கூட இல்லை. அதை மீறி இவன் அண்ணன் இவனிடம் புள்ளி கமா கூட பேசவும் மாட்டார்.

ஆக அந்தப் பெரியம்மா எதையும் பேசிக் கொண்டு போகட்டும் என இவன் டீயை குடித்தபடியே சமையலறையைப் பார்த்து போய்விட்டான். இங்கு நின்று இதை கேட்க வேற செய்யணுமா என்ன?

குவளையை அங்கு வைத்துவிட்டு இவன் திரும்பி படியேற வரும் போது

“என் தம்பி சின்னவன் மணி இருக்கான்ல அவன் மக இளையவள பார்த்திருக்கல்ல, ஆள் நல்லா இருப்பா,

இப்ப ரவியனுக்கு அவள நிச்சயம் செய்துட்டன்னாகூட பவி கல்யாணத்துக்கு அப்றம் இந்த கல்யாணத்த வச்சுக்க என் தம்பிய சரின்னு சொல்ல வைக்கிறது என் பொறுப்பு,

நல்ல பொண்ணு, விட்றாதே, உன் வீட்ட புரிஞ்சு நடந்துப்பா, உங்க மூனு அண்ணந்தம்பிகளையும் பிரியாம பார்த்துப்பா, வீட்டுக்கு வர்ற முதல் பொண்ணு கைலதான அதெல்லாம் இருக்குது” என பெரியம்மா அங்கு அடுக்கிக் கொண்டே போவது காதில் விழ,

கருண் இங்கிருந்தால் “பொண்ணு என்ன ஃபெவிகாலா?” என கேட்டுக் கொண்டிருப்பான் என்ற நினைவு தந்த சிரிப்போடு இவன் படியேறத் துவங்க

”இல்ல பெரியம்மா, வீட்ல பவிய வச்சுகிட்டு எதுக்கு நாங்க வெளிய போய் பெண் தேட, மணி மாமா மகளுக்கு நல்ல இடம் வந்தா நானே சொல்றேன்” என இப்போது சற்றும் இவன் எதிர்பாரா ஒரு பதிலைச் சொன்னது இவன் அண்ணா.

படியேறிக் கொண்டிருந்த இவனுக்கு ஒரு கணம் கால் ஸ்லிப் ஆகி நின்றது.

ஒரு கணம் அப்படியே நின்று போயிற்று எல்லாம் இவனுக்குள். அவன் அண்ணனின் பேச்சின் அர்த்தம் என்ன? இவனுக்கு மணப் பெண்ணாக பவியை சொல்கிறார் அப்படித்தானே? தாண்டிப்போன ஒரு சங்கீத சத்தம் போல் தொலைந்து போய் மீண்டு வருகிறது இவன் மனம்.

வெகு சின்ன வயதில் எப்போதோ இவர்கள் வயலுக்குப் போயிருந்த போது அங்கு வேலை செய்யும் ஒருவர் விளையாட்டாய் பவியிடம் “நீ யார கட்டிப்ப? உங்க ரவியவா? இல்ல கருணனையா?” என கேட்க,

“கட்டிக்கிறதுனா என்னது?” என திருப்பிக் கேட்ட பவி,

“அதுவா ரெண்டு பேருமா ஒரே வீட்ல இருக்றது” என விளக்கம் கிடைக்கவும்

“ப்ரவி கூடதான்”  என ஒரு பதில் கொடுக்க,

“ஏன்?” என்ற அடுத்த கேள்விக்கு

“ஏன்னா அவன்தான் என்ட்ட சண்டையே போட மாட்டான்” எனவும் சொல்லி வைக்க,

அந்தப்பேச்சு எப்படி தயாளனை அடைந்தது எனத் தெரியாது, அந்த வேலையாள் மீது கடும் கோபப்பட்டார் அவர். அதன் பின் யாருமே அப்படி ஒரு பேச்சை விளையாட்டுக்கு கூட இவர்கள் முன்பு எடுத்தது இல்லை.

இதில் அவரிடம் இருந்து இப்படி ஒரு வார்த்தைகளா?

அங்கே அந்த பெரியம்மாவின் நிலையும் அதுதான் போலும் ”அ..அது என்னயா நீ? பிள்ளைங்கள சேர்த்து வச்சு ஒரு வார்த்த பேச விட மாட்ட? அது நாம வேற நல்ல இடமா பவிக்கு” என அவர் திக்க,

“வளர்ற வயசுல கண்ட குப்பை எதுக்கு மனசுல, அதான் அப்படில்லாம் பேச விடுறது இல்ல பெரியம்மா, ஆனா கல்யாணம்னு வர்றப்ப, ப்ரவியவோ கருணையோவிட நல்லா தெரிஞ்ச நல்ல இடம் எங்க பவிக்கு வேற எங்க இருக்கும்?

வெளிய உள்ளவன் நல்லவனா குடிகாரனான்னு கூட எங்களுக்கு என்ன தெரிஞ்சிட முடியும்? ஒரு குருட்டு நம்பிக்கையில கட்டி குடுத்துட்டு நான் இங்க திக்கு திக்குன்னு உட்காந்திருக்கணும்.

அதுக்குதான ஒரு வருஷமாவது தெரிஞ்ச குடும்பத்ல பொண்ண கொடுக்கணும்னு நீ கூட சொன்ன பெரியம்மா? இதுனா விவரம் தெரிஞ்ச காலத்துல இருந்து ஒருத்தர ஒருத்தர் தெரிஞ்ச உறவாச்சே,

என் தம்பிக்கும் சரி எங்க பவிக்கும் சரி எங்க குணம் இருக்கும் எங்க கோபம் வரும்னு தெளிவா ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியும், ஒருத்தர்ட்ட ஒருத்தர் கோபமேபட்டாலும் கத்துனாலும் கூட வெளிய இருந்து புதுசா வந்தவங்க பேசுன அளவுக்கு கடுக்காது, பழகின உறவாச்சே, அடுத்த நிமிஷம் சேர்ந்துப்பாங்க.

அதோட முதல்ல வர்ற பொண்ணுதான் வீட்ட ஒட்டி வைப்பான்னு சொல்றியே பெரியம்மா, இன்னொரு பொண்ணு வந்து இனிமேதான் அத கத்துக்கணும், ஆனா எங்க பவிதான் இப்பவே வீட்ட வீடா ஒட்டி வச்சுருக்க ஆளே,

பாசம் சந்தோஷம் சிரிப்புன்னு இன்னைக்கு வரை எங்க பிள்ளைங்களுக்குள்ள ஒரு குறையும் இல்ல, இன்னைக்கு போல என்னைக்கும் எதையும் மாத்திகாமலே சந்தோஷமா இருப்பாங்களே, அவங்கள ஏன் பிரிக்கணும்?” என தயாளன் சற்றான பிடிவாதம் தெறிக்கும் குரலில் சொல்லியபடி அதோடு பேச்சு முடிந்தது போல் முற்று வைக்க,

இங்கு ப்ரவிக்கு தான் என்னதாய் உணர்கிறேன் என்று தெரியாத ஒரு நிலை.

அவள் சந்தோஷமாய் இருந்தால் மட்டும்தான் இவனால் நிம்மதியாய் இருக்க முடியும் என்ற அளவுக்கு பவி இவனுக்கு எப்போதுமே மிக முக்கியமான உறவுதான். ஆனாலும் இப்படி இவனுக்கேயானவளாக அவளை அவன் எப்போதும் எண்ணியதே கிடையாது.

ஆனால் இந்த நொடி அப்படி யோசிக்க அது ஒன்றும் இயலாத காரியம் போலும் ஏனோ இல்லை.

அவனது அண்ணன் சொன்ன காரண காரியங்கள் அப்படி உணர வைக்கிறதோ?

அடுத்த பக்கம்