துளித் தீ நீயாவாய் 5 (8)

ஆனால் அங்கு ப்ரவியோ எந்த ரியாக்க்ஷனும் காண்பிக்கவே இல்லை. இன்னுமாய் ரசித்து டீ குடித்தான்.

அதில் இவள் முகம் கொஞ்சமாய் உர்ருக்கு போக “பயம் காட்டினா பயப்படணும் போலீஸ்கார்” என்றாள் சற்று சிடுசிடுப்பாய்.

அதற்கு “டீ போடுன்னு சொன்னா டீ பவ்டர தூக்கி கீழ போடுற ஜீவனெல்லாம் ஏலக்கா டீ போட்டுதாம், அத நாங்க நம்பணுமாம்” என அவன் அசட்டையாய் சொல்லியபடி தன் வேலையைத் தொடர,

“போ ப்ரவி” என கால் உதையா வண்ணம் சிணுங்கிக் கொண்டவள் அவனுக்கு பழிப்பம் காட்டிக் கொண்டே அடுத்து வரவேற்பறையைப் பார்த்து போகத் துவங்க,

“ஏய் வாலு அங்க ஏதோ ரகசிய ஆலோசனையாம், என்னை அங்க இருந்து கிளப்பிவிட்டுட்டு பெருசு, அண்ணாவா கூப்ட்ற வரைக்கும் அங்க போகாத நீ” என தடுத்தான் இவன்.

“அடப்பாவமே திரும்பவுமா? இந்த டைம் என்னத ஆட்டையப் போட போகுதோ? நான்தான் சின்சியர் சிட்டிசன் ஒட்டு கேட்க கூடாது, ஒரு போலீஸுக்கு கூடவா ஒட்டு கேட்க உரிமை இல்ல, உனக்கு ட்ரெய்னிங் சரி இல்ல” என்றபடி அவள் திரும்பவும் சமையலறை நோக்கி திரும்பியவள்,

“மாரியக்காவ உனக்காக கொஞ்சம் ரைஸ் வைக்க சொல்லி இருக்கேன், உனக்கு பிடிச்ச கத்தரிக்கா காரக் குழம்பு, பீன்ஸ் பொரியல். லன்ச் ப்ளைட்ல கிடச்ச காஞ்சது எதையாவதுதான சாப்டு ஒப்பேத்தியிருப்ப, அதனால கிளம்புறதுக்கு முன்ன இத சாப்டுடு” என்றபடியே உள்ளே போக,

சிரித்தபடியே ப்ரவி அங்கே நின்றது, டீயை இங்கேயே வைத்து குடித்து முடித்துவிட்டால் குவளையை அப்படியே போய் சமையல்கட்டில் வைத்துவிட்டு போய்விடலாமே, இல்லையென்றால் இதற்காக யாராவது ஒருவர் மாடி ஏறி வர வேண்டுமே என்பதற்காக மட்டுமே!

அப்போதுதான் காதில் விழுந்தது அந்தக் கேள்வி.

“ஏய்யா தயாளா, நம்ம பவிக்கு வரன் எதுவும் பார்க்கியா இல்லையா?” என துவங்கினார் அந்த செவ்வந்தி பெரியம்மா.

இங்கு ப்ரவிக்கு சுர் என முதலில் பொத்துக் கொண்டு வந்தது கோபம்தான். செவ்வந்தி போன்ற ஆட்களாலெல்லாம் பவியின் நன்மையை யோசிக்கவே முடியாதே, அப்படி இருக்க என்ன ப்ளான் பண்ணுது இந்த பெரியம்மா என இவனுக்கு இருக்கும்தானே!

தயாளன் அதை முகத்தை முறித்து சொல்லாவிட்டாலும் “படிச்சுகிட்டு இருக்க பிள்ளைக்கு இப்ப எதுக்கு பெரியம்மா? அவ படிப்பு முடிய இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு” என நாசுக்காய் மறுக்க,

தன் அண்ணனே இப்பேச்சை தடுத்துவிடுவார் என கொஞ்சமாய் இவனுக்கு தணிந்தது. கொஞ்சமாய்த்தான்.

ஆனால் அந்த பெரியம்மாவோ “ரெண்டு வருஷம்தான இருக்குன்ற? இன்னைக்கு வரன் பார்த்தா இன்னைக்கேவா கல்யாணம் முடிஞ்சுடப் போகுது?” என பேச்சை இழுத்தது.

அண்ணனை மீறி குறுக்கே போய் பேசுவது அத்தனை நன்றாக இருக்காது என்பதற்காக மட்டுமே இவன் இங்கு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றிருக்க,

“நீ அவள தங்க தட்டுல வச்சு தாங்குற வகைக்கு அலசி பிறக்கி ஒரு வரனை முடிவு செய்யவே ஒரு வருஷமாவது ஆக்கிடுவல்ல?

அப்றம் அந்தப் பையன் கூட நிச்சயம் செய்துட்டு, இதுதான் நீ போற இடம்னு நம்ம பவிக்கு காமிச்சுட்டன்னா, எப்படிபட்ட வீட்டுக்கு போகப் போறோம்னு தெரிஞ்சு அதுக்கேத்தாப்ல நம்ம பவி கத்து பிறக்கி தயாராகிக்கும்ல ஒரு வருஷத்துக்குள்ள?

அப்றம் படிப்பு முடியவும் கல்யாணம் வச்சுகிட வேண்டியதான?” என நீட்டி முழக்கியது அந்த செவ்வந்தி பெரியம்மா.

இதை கேட்டிருந்த ப்ரவிக்கு எரிச்சல் ஏகமாய் ஏறி வந்தாலும் சோழியன் குடுமி சும்மா ஆடாதே, சுத்தி வளச்சி இந்த அத்தையம்மா எதுக்கு இப்படி கோடு போட்டு ரோடும் போடுது? என்ற கேள்வி வர, அசையாமல் நின்றிருந்தான்.

இதில் இவன் அண்ணன் தயாளன் வேறு “ம் நீ சொல்றதும் ஒரு வகைக்கு நல்லதுதான் பெரியம்மா” என ஒத்துப்பாட,

இதை சற்றும் எதிர்பார்த்திராத ப்ரவி கடுமையாய் கடுப்பாகிப் போனாலும் பவிக்கு பிடிக்காத எதுவும் இவனது அண்ணனிடம் இருந்து வராது என்பது 200% நிச்சயமாய் இவனுக்கு தெரியும் என்பதால் இவன் பொறுமை காக்க,

அங்கு அந்த பெரியம்மாவோ “அப்ப அவளுக்கு வரன் பார்க்கேன்ற, நல்ல விஷயம். காலகாலத்துல பொண்ண கரையேத்துனாதான நமக்கும் நிம்மதின்றேன், உன் வீட்ல பொண்ணெடுக்க அவன் அவன் வந்து வரிசையில நிக்க மாட்டானா? சீக்கிரம் ஒன்ன முடி” என்று பேச்சை ஒருவிதமாய் திருப்பி,

“அப்படியே நம்ம ரவியனும்தான் வேலைக்கு போய்ட்டாம்ல, அவனுக்கும் வரன் பார்த்துடலாமே” என இவனது திருமணத்தை வேறு இழுத்தது அந்தப் பெரியம்மா. ப்ரவி என்பதை சொல்ல வராமல் இங்கு எல்லாரும் இவனை ரவியன் என்பது வழக்கம்.

இப்போது பவி திருமணத்தில் அந்த பெரியம்மா தலை இடவில்லை என்ற ஒரு இலகுநிலையும், ஆக இவனை குறிவைக்கதான் இத்தனை தலை சுத்தி மூக்கை தொடலுமா? என்ற புரிதலும் வந்தது இவனுக்கு.

பவியின் திருமணத்திற்கு முன் ப்ரவி திருமணப் பேச்செல்லாம் தயாளனிடம் சாத்தியமே இல்லை என்பதால் இப்படி சுத்தி வளைத்தது போலும் பெரியம்மா.

அடுத்த பக்கம்