துளித் தீ நீயாவாய் 5 (7)

அதே நேரம் வீட்டிற்கு உள்ளே வந்தார் அந்த முதியவர். செவ்வந்திப் பெரியம்மா

உறவில் தயாளன் ப்ரவி கருணுக்கு சற்று தூரத்து முறையில் பெரியம்மா, அந்த வகையில் இவளுக்கு அத்தை.

“என்னதிது தலைக்கு மேல வளந்து நிக்கிற ஆம்பிள மேல பொட்டபிள்ள கை நீட்டுறது” என்றபடிதான் என்ட்ரி கொடுத்தார்.

பவி ப்ரவியை குத்தியதைப் பார்த்துவிட்டார் போலும்.

அவருக்கு எப்போதுமே பவியை கொஞ்சமாவது குறை சொல்லியாக வேண்டும்.

பெண்பிள்ளை என்றால் எப்படியும் ஆண் பிள்ளைக்கு அரை அளவுதான் சமம் என்பது போல ஒரு மனம் அவருக்கு. அதோடு இந்த வீட்டுக்கு ரத்த சம்பந்தம் இல்லாத ஒருத்திய இப்படி தலைல தூக்கி வச்சு ஆடணுமா? என்பதும் அவர் குணம்.

மேலும் அவர் இந்த வீட்டுக்கு வந்தாலே எதாவது ஆதயம் தேடி வந்திருக்கிறார் என்று பொருள்.

கருண் ப்ரவி பவி மூன்று பேருக்குமே அவரோடு ஒத்துப் போகாது. கருண் பொதுவாக வார்த்தைக்கு வார்த்தை கலாய்த்துவிட்டுவிடும் ரகம்.

ப்ரவி அவர் வயதின் நிமித்தம் பெரும்பாலான விஷயங்களை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவான், ஆனால் எதாவது அளவு கடந்தால் முகத்துக்கு நேராக அழுத்தம் திருத்தமாக அடுத்த முறை அப்படி பேசவே முடியாதவாறு சொல்லிவிடுவான்.

பவி இரண்டுக்கும் இடையில் கையாளுவாள். இப்போதும் அவருக்கு தான் என்ன பதில் சொன்னாலும் அவர் அதை நல்லவிதமாய் எடுத்துக் கொள்ளப் போவதில்லை என தெரிந்தவளாய்,

“வாங்க அத்த, சுகமா இருக்கீங்களா?” என்ற முறையான நல விசாரிப்பை செய்துவிட்டு, கூடவே

“அது பேர் கை நீட்றது இல்ல, குத்து விடுறது அத்த” என்றபடி உள்ளே போய்விட்டாள்.

தயாளன் மட்டும்தான் என்ன இருந்தாலும் உறவினர் என அமர்ந்து பேசுவார். அந்த செவ்வந்தியம்மா கேட்கும் ஆதாயங்களில் பெரிதாய் இவர்களுக்கு பாதிப்பு இல்லாத காரியங்களை செய்தும் கொடுப்பார்.

ஆனால் தயாளன் முன்பு அவருக்கு பிடிக்காத வகையில் யாரும் வார்த்தையை சிந்திவிட முடியாது. அதுவும் பவியைப் பற்றி எல்லாம் ஒரு வார்த்தை பேசிவிட முடியாது.

அதனால் “பார்த்தியாப்பா தயாளா? இப்படியா மரியாதையே இல்லாம பேசுவா ஒருத்தி?” என குறைபாட துவங்கி, “நம்ம பவி சின்னப் பிள்ளைலா அதான் எல்லாத்திலும் விளையாட்டு என்னய்யா” என சமாளிப்பு வாக்கியம் போட்டு,

“ஆனாலும் உபச்சாரம் செய்றதுலல்லாம் அப்படியே உன் வளர்ப்பு தெரியுது” என ஐஸும் வைத்தார் அந்த செவ்வந்தியம்மா.

அடுத்து ஓரிரு உபச்சார பேச்சுகளுக்கு பின், “உன்ட்ட ஒரு நல்ல விஷயம் பேசணும்னு வந்தேன்” என்று துவங்க,

“வந்த கால்லயே நிக்கியே ப்ரவி, போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு கிளம்பப் பாரு” என ப்ரவியை அனுப்பிவிட்டார் தயாளன்.

அந்த நல்ல பேச்சென்பது கல்யாணப் பேச்சாய்தான் இருக்கும் என்பது அவரது யூகம். வீட்டில் வயதுப் பெண் இருக்கும் போது வரன் வரத்தான் செய்யும். பிடிக்கவே இல்லையென்றாலும் தன்மையாய் மறுக்க வேண்டும் எடுத்தெறிந்து பேசிவிடக் கூடாதே என யோசிப்பார் அவர்.

இளவட்டங்கள் எப்படி பதில் சொல்லி வைக்குமோ என்றுதான் ப்ரவியை அவர் உள்ளே அனுப்பி வைத்தது. அவர் சொல்லவும் மரியாதை நிமித்தம் அதுவரை அமர்ந்திருந்த ப்ரவியும் நல்லதாய் போயிற்று என மாடியிலிருக்கும் தன் அறைக்கு கிளம்பினான்.

வரவேற்பறையிலிருந்து உள்ளே சென்றால் அடுத்த அறையில்தான் மாடிக்கு செல்லும் படிகள் இருக்கும் அவ் வீட்டில். அங்கு இவன் படியேறத் தொடங்கிய நேரம் பவி வீட்டின் பின் பக்கத்தில் இருக்கும் சமையலறையிலிருந்து வந்து கொண்டிருந்தாள்.

வீட்டில் வேலை செய்யும் மாரி அக்கா செய்து தந்த தேனீரும் சேவு தட்டுகளையும் ஒரு ட்ரேயில் வைத்து எடுத்து வந்தவள் “ப்ரவி ப்ரவி போய்டாத, இந்தா உனக்கு உன் ஃபேவ் ஏலக்கா டீ” என ஒரு குவளையை எடுத்து நீட்டினாள்.

“நீ சாப்டலையா பவிமா?” எனக் கேட்டபடியே அதை வாங்கி ரசித்து இவன் அருந்த ஆரம்பிக்க, அவன் இரண்டு வாய் குடிக்கும் வரை அமைதியாய் நின்று பார்த்திருந்துவிட்டு,

“குடிச்சுட்டு உனக்கு எதுவும் ஆகலைனா சொல்லு, அப்றமாதான் நான் குடிக்கணும், நான் போட்டது ஏலக்கா பவ்டரா இல்ல சீயக்கா பவ்டரான்னு எனக்கு சரியா தெரியல” என்றாளே பார்க்கலாம் அவள்.

அடுத்து ஒரு ஆர்வமாய் இவன் முகத்தையும் பார்த்தாள். புரையாவது ஏறணும்ல அவனுக்கு.

அடுத்த பக்கம்