துளித் தீ நீயாவாய் 5(5)

கருணை சீண்ட அவள் நினைக்க ஒரே காரணம் அவனை இலகுவாக்கத்தான். என்னதான் அவன் வெகு இயல்பு போல் பேசினாலும் அவன் எத்தனை மன குமுறலில் இருக்கிறானோ என்பதுதான் இவளுக்கு.

ஆனால் அவனிடமிருந்து இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை இவள். அதில் அவளை மீறி வந்துவிட்டது அந்தக் கருண்.

அவனுக்கும் இவள் என்ன சொல்ல வருகிறாள் என புரியும்தானே!

ஏனோ இதையெல்லாம் கருணிடம் என்றுமே பேசிவிட முடியாது என்பது போல் கடந்த சில தினங்களாக இவளை அடைத்துக் கொண்டிருந்த பாறை இப்போது மெழுகாக தோன்றி பின் மெல்லிய படலம் போல் மருவி காணாமலும் போகின்றது.

“லூசு என்னப் பத்தி இவ்ளவுதானா புரிஞ்சு வச்சுருக்க? இப்ப நீ கூப்டலைனாலும் இன்னும் ரெண்டு மூனு நாள்ல நானே உன்ன கூப்ட்டு பொண்ணு பார்க்க சொல்லி இருப்பேன், நீயும் பெருசும்தான் இந்த தடவை முழுக்க முழுக்க நின்னு எல்லாம் செய்றீங்க” என ஆதங்கம் பின்னிய அன்பாக்க குரலில் சொன்னவன்,

“செய்வதான?” என்றான்.

கண்களில் ஏறிய நீர் குரலில் தழுவிக் கிடக்க “இதோ இப்பவே” என இவள் உணர்ச்சி பிடிக்குள் சிறைபட,

அவனோ “லூசு இத்தன மணிக்கு போய் பொண்ணு தேடுவியா? என் மாமனார் வீடு பாவம், மிரண்டுறப் போறாங்க, மெதுவா காலைல போய் தேடு போதும்” என இலகுவாக்கி,

“ஆனாலும் நீ ரொம்ப நல்ல நல்லவ பவி, ரெண்டு மணி நேரத்துக்கு ஒருக்கா எங்க ரொமான்ஸ் அப்டேட் சொல்லி கதற விடுவேன்னு தெரிஞ்சும் எனக்கு கல்யாணம் செய்து வைக்க போற பாரு, you are really great” என இவள் முகத்தில் புன்னகை வர வைத்தே முடித்தான்.

“ரொமான்ஸா அடி வாங்குறத அப்படி கூட சொல்லிவியாடா, சரி சரி அத அப்ப பார்ப்போம் இப்ப தூங்கு எரும” என இவளும் முடித்தாள்.

கருண் பெண் பார்க்கச் சொன்ன பெரும் நிம்மதியிலும், ப்ரவி ஒன்றும் இவளை முன்பே காதலித்திருக்கவில்லை, அவனோடான இவளது நட்பை, குழந்தைப் பருவத்திலிருந்து வளர்த்தெடுத்த வெண் பால் போன்ற பாதகமற்ற உறவை அவன் கொச்சை படுத்தி இருக்கவில்லை என்ற புரிதல் தந்த பெரும் விடுதலையிலும் இவளுக்கு இன்று தூக்கம் நன்றாகவே வந்தது.

அவளுக்கு அருகில் படுத்திருந்த ப்ரவியோ அதற்கு நேர் எதிராய் அவனுக்கு அவளோடான காதல் வந்த அவளது கல்லூரி காலங்களை, கொண்டு வந்து கொடுத்தானே அந்த பொம்மை அதை அவள் முதன் முதலில் கேட்ட அந்த பெங்களூர் பயணங்களை நினைத்தபடிதான் தூங்கப் போயிருந்தான்.

ஆம் நேர் எதிர் புரிதலில் இருவரும் நழுவிக் கொண்டிருந்தார்கள். எது எங்கு இவர்களை இணைக்குமோ?

ப்ரவி எண்ணிய அந்த பயணமும் சரி அவனது காதலும் சரி துவங்கியது இப்படித்தான். இவர்கள் திருமணம் கூட இதன் பின் விளைவுதானோ?

இரண்டு வருடங்களுக்கு முன்பு

ரெட்டைகளான ப்ரவிக்கும் கருணுக்கும் நாளை மறுநாள் பிறந்த தினம். கருண் அப்போது பெங்களூரில் MBA படித்துக் கொண்டிருந்தான். IPS தேர்வாகி ட்ரெய்னிங் பீரியடில் ஹைதராபாத்தில் இருந்தான் ப்ரவி.

கல்லூரியின் இரண்டாம் வருடத்தில் இருந்தாள் பவி. மதுரையில் ஹாஸ்டல் வாசம்.

பவி எப்படி அவளது அக்கா சுசித்ராவிற்கு அடுத்து பத்து வருடம் கழித்து பிறந்தவளோ அதே போல் கருணும் ப்ரவியும் இவளது அக்கா கணவர் தயாளனுக்கு பத்து வயது இளையவர்கள்.

குழந்தையாக அவள் அமரன்குளத்தில் இருந்த தன் அக்கா வீட்டில் குடியேறியதிலிருந்து எல்லோருக்கும் இளையவளான அவளுக்கு கடைக்குட்டி ஸ்தானம்.

ஆரம்பத்திலிருந்தே தயாளன் அவள் வாயில் தயாப்பாதான். அவளுக்கில்லாத சலுகையும் உரிமையும் அந்த வீட்டில் யாருக்கும் இல்லையென்றே சொல்லலாம்.

ப்ரவியும் சரி கருணும் சரி பிறந்த நாளை எல்லாம் பெரிதாய் கண்டு கொள்வது கிடையாது. ஆனால் பவிக்கு அப்படி அல்ல. வருடா வருடம் ப்ரவியையும் கருணையும் அந்த தினத்தில் கண்டிப்பாக சந்தித்து ஒரு கேக்காவது வெட்டியாக வேண்டும் அவளுக்கு.

இந்த முறை கேட்டதற்கு ட்ரெயினிங் முடியும் தருவாயில் இருந்த நிலையில் ப்ரவி வர முடியாது என்றுவிட்டான். கருணுக்கு பரீட்சைகள் நடந்து கொண்டிருந்ததாலும் ப்ரவி வேறு வர முடியா சூழல் என்பதாலும் தானும் வரவில்லை என்று மறுத்துவிட்டான்.

இவளுக்கு மட்டும் விடுமுறை என்பதால் அமரன்குளம் வந்துவிட்டாள். அதுதான் கருணுக்கும் ப்ரவிக்கும் மட்டுமல்ல இவளுக்கும் வீடு.

அடுத்த பக்கம்