துளித் தீ நீயாவாய் 5 (4)

“ப்ச் சொல்லித் தொல, விழிச்சுட்டேன், என்ன டவ்ட்? ஆமா உனக்குதான் எக்ஸாம் முடிஞ்சுட்டே இப்ப என்ன டவ்ட்? அரியர் எதுவும் வச்சுட்டியா லூசு? எது பிச்சுகிட்டு Satcomமா இல்ல WSNனா?”

“வாயக் கழுவுடா தடிமாடு, வந்தேன்னா கோடாரியாலே போடுவேன்”

“அப்ப அது இல்லியா, பிறகு எதுக்கு என்ன கூப்டுற? அதான் உனக்கு ஒரு அடிமை சிக்கி இருக்கே அத தலைய உருட்ட வேண்டியதுதான?”

“எரும பன்னி நாயே பேச விடுறியாடா என்ன?”

“சரி சரி சொல்லு”

“அது… அது வந்து”

“என்னாச்சு கொத்து பரோட்டா? எதுனாலும் கும்மு கும்முன்னு கும்முவ? இப்ப என்ன?”

“ப்ச் போடா, அது ஒரு… அது வரலைனா என்ன செய்யன்னு இருக்குடா?” ப்ரவி மேல் காதல் வரலைனா என எப்படி சொல்வாள் இவள்?

“கிழிஞ்சுது எது அது?” தலைவால் அவனுக்கு புரியுமா என்ன? கேட்பான்தானே!

“ப்ச் அதுன்னா அதுதான் நீ பதில மட்டும் சொல்லு எரும”

“எருமையின் அருமையான பதில் என்னன்னா வரலைனா நாம போய் அத பிடிச்சுக்க வேண்டியதான், ஜிம்பிள் மை டியர்” கருணின் அம்சமான பதில் இப்படி வர,

“அது வரதும் பிடிக்கலைனா?” ப்ரவியை காதலிக்க வேண்டும் என்றும் இவளால் நினைத்துப் பார்க்க முடியவில்லையே, அதையும்தான் எப்படிச் சொல்வாள்?!

“மம்மீ பேய் கூப்ட்டு என்ன பேட்டி எடுக்குது ரெண்டர மணிக்கு” பீதியானான் பையன்.

“டேய் உளறாம ஒழுங்கா பேசு, வந்தேன்னா வாயிலயே போடுவேன்” திட்டினாள் இவள்.

“யாருங்க அது உளர்றது? நாங்களாங்க?” கேட்டுப் பார்த்தான் அவன்.

“டேய்ய்!!! சீரியஸா பேசிட்டு இருக்கேன், சின்சியரா பதில் சொல்லு, அது வரதும் பிடிக்கலைனா நான் என்ன செய்ய?” விளக்கமற்ற விளக்கத்தில் இவள் கேட்க,

“அது எப்படி பிடிக்காம இருக்கும்? நைட் ரெண்டு மணிக்கு 600 கிலோமீட்டருக்கு அந்தப் பக்கம் இருக்கவன எழுப்பி வரலைனா என்ன செய்யன்னு தலைய பிச்சுகிறப்பவே வர்றது பிடிக்கலைனு சொல்றது ப்யூர் மன பிராந்தினு ஆகுதே” தனக்கே புரியாத விஷயத்தின் லா பாய்ண்டை பிடித்தான் பையன்.

கூடவே “தெய்வமே நான் என்ன பேசிகிட்டு இருக்கேன்னு எனக்குத்தான் தெரில, உனக்காவது தெரியுமா?” என வானத்தைப் பார்த்து புலம்பியும் கொண்டான்,

“இல்லடா நான் நிஜமா சொல்றேன் அது வர்றது எனக்கு பிடிக்கல” நட்டமாய் நகராமல் இவள் நின்ற பிடியிலேயே நிற்க

“அப்ப ஒன்னு சொல்றேன் கேளு, இன்னும் ஒரு ரெண்டு வாரத்துக்கு இதைப் பத்தி எதையும் யோசிச்சுக்காத, அப்படியே விட்டுடு, அடுத்தும் யோசிக்கிறப்ப வரட்டுமா வேண்டாமான்னு குழப்பம் இருந்தா என்ன கூப்டு வழி சொல்றேன்”  என குத்துமதிப்பாய் மத்தியஸ்தம் பேசிய கருண்

“ஷப்பா ரெண்டு வாரத்துக்கு நான் தப்பிச்சேன்” என ஆசுவாசப் பட்டுக்கொள்ள,

“அதெல்லாம் முடியாது, ஏன் அந்த வழிய இப்பவே சொல்லிடேன், தலையே வெடிச்சுடும் போல இருக்கு” இவள் விடுவனா என்கிறாள்.

“தாயே பவிமாதா பால்ல உறை ஊத்தினா மறு நாள்தான் தயிர் கிடைக்கும், உறை ஊத்தின உடனே கேட்டா பாலும் கிடைக்காது தயிரும் வராது. அது போலதான் இதுவும் wait and see” என எக்குதப்பில்லாத எக்சாம்பிள் ஒன்றை பிடித்தான் பையன். ,

“அப்படின்ற?” இது அவள்

“அப்படியேதான்” இது அவன்

“ரொம்ப தேங்க்ஸ்டா கரண்டி, எல்லாம் சரியாகிட்டுன்னு இல்ல, ஆனா ரொம்ப பிரவாயில்லை இப்ப” ஒரு வழியாய் கொஞ்சம் சமனப்பட்டாள் பவி.

இப்ப என்ன மேரேஜ் ஆகி அஞ்சு நாள்தான் ஆகுது, ஒரு ரெண்டு வாரம் போகட்டுமே ப்ரவிக்கும் என் மனசுக்கும் நல்லதா எதாவது அப்ப புரிஞ்சிடுமா இருக்கும் என விஷயத்தை ஆறப் போட வைத்தது அவளை கருணின் விளக்கம்.

இவள் பதிலில் “குட், அப்படியே குப்புற படுத்து தூங்குவியாம் மனுஷனயும் தூங்க விடுவியாம்” என்று கருண் எஸ்கேப்பாக,

கூடவே “எங்க அந்த போலீஸ்காரன், உன்ட்ட என்ன மாட்டிவிட்டுட்டு அங்கிட்டு ஜகஜாலியா தூங்கிட்டு இருப்பானே!” என ப்ரவியைப் பற்றியும் விசாரித்துக் கொள்ள,

“ஆமா” என்பதையே ஒரு ஹி ஹி என்ற தொனியில் சொன்ன பவி கூடவே “உன்ட்ட ஒன்னு சொல்லணுமே, தூங்குறப்ப ப்ரவி செம்ம க்யூட்ல” என ஹி ஹியாகவே முடிக்க,

இது கருணை சீண்ட மட்டுமே சொன்னதென்பதால் அம்பு இலக்கு மாறாமல் கருணை கரெக்டாய் பதம் பார்க்க,

“ஏய் கொத்துபரோட்டா கைல கிடச்சியோ” என முதலில் எகிறியவன்,

“தூங்குறப்ப அவன் க்யூட், எனக்கு மட்டும் ரெண்ட்ற மணிக்கு டவ்ட்டா? இரு இரு இதுக்காகவே நானும் இப்பவே கல்யாணம் செய்து ரெண்டு மணி நேரத்துக்கு ஒருக்கா உனக்கு ஃபோன் செய்து என் ஆளப் பத்தி சொல்லி சொல்லி கடுப்பேத்தலையோ…” என சூளுரைத்தவன்,

“இந்தா இப்பவே ஒழுங்கு மரியாதையா எனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பி” என இவளுக்கு கட்டளையும் கொடுக்க,

“கருண்?” என்றாள் இவள். அந்தக் கருணைப் போல நெகிழும் வலியுமாய் ஒரு கருணை எப்போதாவது இவள் சொல்லி இருப்பாளா என்றே தெரியவில்லை.

அடுத்த பக்கம்