துளித் தீ நீயாவாய் 5(3)

சட்டென இவள் மனதில் உதிக்கிறது ஒரு மின்னல், இவளை அவன் எப்போதும் அப்படித்தானே பொத்தி பொத்தி வைத்துக் கொள்வான், அந்த குணத்தால்தான் அன்று அவள் நின்ற சூழ்நிலையில் சட்டென கல்யாணம் செய்துக்கிறேன்னுட்டானோ?!

அப்றம் இவள் கேட்டதுக்கு இது இரக்கத்தில் செய்த கல்யாணம்னு அவனால சொல்ல முடியாம லவ் பண்றேன்னுட்டானோ?

இவள் மனம் தறிகெட்டு ஓடினாலும் தடம் பார்த்து ஓட,

இன்று வயலில் வைத்து கேட்டானே குறும்பும் ஆசையுமாக “ஏன் பவிமா உன் ப்ரவிய ஏன் விட்டுகொடுக்க மாட்ட?” என, அந்த நேரத்து அவன் முகபாவம் இவள் கண்ணில் வருகிறது.

அதெல்லாம் இரக்கமா இல்லை நடிப்பா? ரெண்டுமே இல்லையே, நிஜ ஆசையாச்சே என இவளுக்கு பிடிபடவும் செய்கிறது.

கல்யாணம் என முடிவானதுக்குப் பிறகான அவனது ஒவ்வொரு செயலும் இப்போது மனதுக்குள் படக்காட்சியாய் வந்து சுருள, ‘அதெல்லாமே அவனுக்கு என் மேல காதல்னுதான காமிக்குது’ என ஒரு அமில வகை நினைவை அவை ஊற்றித் தர,

“பொண்ணு பார்க்க வர்ற வரைக்கும் அவர யாருன்னே எனக்கு தெரியாது, ஆனா அங்கயே அப்பவே எல்லோருமா பேசி ஒரு ரெண்டு மணி நேரத்துக்குள்ள நிச்சயம் பண்ணிட்டாங்க, அடுத்து அவர தவிர மனசுல எதுவுமே பெருசா இல்லைன்றாப்ல இருக்கு,

இவங்கதான் நம்ம லைஃப் பாட்னர்னு ஒரு புரிதல் வருது பார்த்தியா அதுக்கு அவ்ளவு வேல்யூ போல, அடுத்த நிமிஷம் நம்ம மனசெல்லாம் அவங்க பின்னால போய்டுது” இவளது ஃப்ரென்ட் ராகிணி சொன்னதும் மனதில் வருகிறது.

அப்படித்தான் இவ கூட கல்யாணம்னு முடிவானதும் ப்ரவியும் இவள லவ் பண்ண ஆரம்பிச்சுருப்பானோ?

இருக்கும். ப்ரவி பொய் சொல்ற ஆள் கிடையாது.

பிள்ளை பேற்றின் வலி போல பெரு வலியாய் அதுவரைக்கும் அவளை அழுத்தி அழுத்தி பிசைந்தெடுத்த உயிர் வலி அன்நிமிடம் அற்றுப் போக, வந்து விழுந்த பெருமூச்சில்

‘எப்படியும் இவ நினச்சு நினச்சு குமுறுனது போல ப்ரவி இவள கல்யாணத்துக்கு முன்ன லவ் பண்ணி இருக்கலையே! இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த அந்த பால் வண்ண உறவை, அசைக்க முடியா ஆழ நட்பை, இவள் நம்பிக்கையை அவன் களங்கப்படுத்தி இருக்கவில்லையே’ என்ற நிம்மதி சுவாசம் இருந்தது என்றாலும்,

 

பிரசவ வலி முடியவும்தான், பிரசவ நேரத்தில் அறுபட்ட கிழிபட்ட மற்ற அனைத்து தசை நரம்புகளின் வலிகளெல்லாம் வகை வகையாய் அதன் குண இயல்போடும் குரூரத்தோடும் உணரப்படும் என்பது போல

இந்த திருமணத்தால் வந்த மற்ற வகை பாரங்கள் பத்தி பத்தியாய் கேள்விகளோடு முன்பைக்காட்டிலும் வித விதமாய் விதண்டமாய் வாதமாய் வலி நோவாய் வந்து உட்காருகின்றன,

இப்ப இவ என்ன செய்யணும்? இது முதல் கேள்வி.

இவளுக்கும் ப்ரவி மேல காதல் வந்துடுமா? இது அடுத்து வந்த கொடூரக் கேள்வி. நினைக்கவே அடி வயிற்றை பிரட்டுதே! தாறுமாறா தக்ளி வேற சுத்துது அங்கயும் இங்கயுமா!

அதுதான் அப்படி என்றால் ‘இப்பவரை அப்படி வராத காதல் இனியும் வராம போய்ட்டா?’ என்ற கேள்வியும் அதே கொடூரமும் வதையுமாய். விலா எலும்புகளை பிடித்தொடிக்கும் பெரும் பீதியாய்.

இவ ப்ரவிய விலக்கி வச்சா ப்ரவி என்ன ஆவான்?

இவ ப்ரவிய விலக்குறதால இவள ப்ரவிக்கு பிடிக்காம போய்ட்டுன்னா என்ன ஆகும்?

திகில் திகிலாய் சரம் சரமாய் வந்த விபரீத வினாக்களுக்கு விடைகள் மட்டும் எதுவும் இல்லாததால், அடி பாதம் தொட எதுவுமற்ற இடுக்க குழிக்குள் இன்னும் இன்னுமாய் விழுந்து கொண்டிருப்பதாக ஒரு நிலையில் இவள்.

இத்தனையும் தலைக்குள் சுமந்து கொண்டு சற்று நேரம் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை இவளால்.

ப்ரவியை திரும்பிப் பார்த்தால் அவன் தூங்கிப் போய்விட்டான் போலும். சற்று நேரம் சமாளித்துப் பார்த்தவள் தாங்க முடியாமல் கருண் எண்ணை அழைத்தாள்.

ஒரு முழு சுற்று அழைப்பு முடியப் போகும் தருவாயில்

“சொல்லு மக்கா” என தூக்க குரலோடு இணைப்பை ஏற்றான் அவன்.

“டேய் எரும இது ப்ரவி இல்ல நான்” எத்தனை இருக்கட்டுமே இந்த கருண் எருமைட்ட மட்டும் இவளுக்கு சோகமாவே சொல்ல வராது.

“ம்”

“தூங்கிட்டியாடா நீ?”

“ஏய் லூசு நட்ட நடு ராத்ரில கூப்ட்டு கேட்குற கேள்வியா இது?”

“அது வந்து ஒரு… ஒரு ட்வ்ட்டா”

“அடப் பாவி நான் தூங்குறனா இல்லையான்னுலாமா உனக்கு டவ்ட் வருது”

“டேய் கரண்டி, வந்தேன்னா நாலு அப்பு அப்பிடுவேன், ஒழுங்கா போய் மூஞ்ச கழுவிட்டு வந்து பேசு”

“ராட்சசி ரெண்ட்ர மணி இங்க”

“நாங்க மட்டும் காலைல பத்து மணினா சொன்னோம், எங்களுக்கும்தான் ரெண்டரை மணி நாங்க கூப்டல? ஒழுங்கா எந்திரிச்சுடு, பிச்சுடுவேன் பிச்சு”

அடுத்த பக்கம்