துளித் தீ நீயாவாய் 5

இந்த களேபரத்துக்குப் பின் வேணியை மாடியில் சென்று படு எனச் சொல்ல பவிக்கே மனம் வராது, இதில் வேணி வேறு இப்படி அழுதால் பவியின் முடிவு இதாய்தான் இருக்கும் என 90% எதிர்பார்த்திருந்தான் ப்ரவி.

‘நீ இவ்வளவு பயப்படுறியே வா நானும் உன் கூட துணைக்கு தங்குறேன்’ என வேணியோடு பவி தங்கப் போய்விடுவாளோ என்ற ஒரு உறுத்தல் 10% இருந்தாலும், தன் அறையின் கதவை முழுதாய் திறந்து வைத்துவிட்டே தனது படுக்கையில் படுத்திருந்தான் ப்ரவி.

இதில் இவனுக்கு சற்றும் ஏமாற்றம் தராமல் இவனது அறைக்குள் வந்து நிற்கிறாள் இவனது மனைவி.

விசிலடிக்கச் சொல்லிய ஒரு உற்சாக சந்தோஷம் உள்ளுக்குள் ஓடி ஓடி ஆடினாலும், அவள் வரும் வாசலுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டான் அவன்.

உள்ள வர்றப்ப அவ எப்படி முழிப்பான்னு இவனுக்குத் தெரியுமே! அதுல இவன் சிரிச்சு கிரிச்சு வச்சுட்டா என்னாகிறது? இந்த சீன்ல சிரிக்கிறதும் சிங்கத்துக்கு சீப்பு போட்டு தலை சீவுறதும் ஒன்னுதானே!

அறைக்குள் நுழைந்ததும் பவி செய்த முதல் வேலை கதவை பூட்டியதுதான். குடும்ப சீக்ரெட் குட்டிப் பொண்ணு வேணிக்கு லீக் ஆகிடக் கூடாதே!

ஆனால் அடுத்து எப்படி திரும்பி எங்கு பார்த்து முகத்தை வைத்துக் கொள்வதென்றே அவளுக்குப் புரியவில்லை.

திருமணமாகி இரண்டு இரவுகள் ப்ரவியோடு தங்கி இருக்கிறாள்தான். அந்த அனுபவத்தில் இது ஒன்றும் அத்தனை சங்கடமாய் இல்லைதான், ஆனாலும் அவன்ட்ட சண்டை போட்டு தனி ரூம்க்கு போன வேகமென்ன? இப்ப அவன்ட்ட பெர்மிஷன் கூட கேட்காம வந்து நிக்ற இந்த வேலையென்ன?

வேணி மாடிக்கு செல்ல பயப்படுகிறாள் என்று ஒரு காரணம், வேணியை மாடிக்கு அனுப்ப இவளுக்குமே அந்த கிரிமினல் வகையில் ரொம்பவுமே பயமா இருக்கிறது என்ற இன்னொரு காரணம் எல்லாம் இருந்தாலும்,

ப்ரவிக்காக ரொம்ப நேரம் அந்த கிரிமினல் காத்திருந்திருப்பான் போலயே, வீட்ல இருந்த இவளையும் வேணியையும் எப்படியும் ஒன்னும் செய்யலையே, அப்படின்னா ப்ரவிய தனியாவிட்டா அந்த கிரிமினல் தூங்குற ப்ரவிய தேடி வந்து எதுவும் செய்துட்டா? என்ற திகில் முக்கிய காரணமாய் இருக்க,

ஆமா போலீஸ்காரருக்கு பாடிகார்டாதான் அவர் வீட்டு குத்துவிளக்கு களம் இறங்கி இருக்குது,

இருந்தாலும் அதையெல்லாம் ப்ரவிட்ட ஏன் காமிச்சுக்கணும்? வேணிக்காக மட்டும்தான் இங்க வந்துருக்கேன்னு நினச்சுகிட்டு இருக்கான்ல அப்படியே இருக்கட்டும், அதுதான் எனக்கு நல்லது இப்படி ஒரு மனோபாவத்துடன் வந்து நின்றாள் அவள்.

திருமண இரவு மற்றும் அடுத்த நாளின் அனுபவத்தில் ப்ரவி அவனாய் சோஃபாவுக்கு போய்விடுவான் என்ற நம்பிக்கையில் இவள் பார்த்தால், ஐயஹோ இங்க சோஃபாவும் இல்ல, ப்ரவியும் போகல.

அறையில் இவர்களுக்கான கட்டிலைத் தவிர ஒரு மேஜை நாற்காலியும் கிடக்க வேறு ஒன்றும் இல்லை.

தனிக் குடித்தனம் வைக்கவென வந்திருந்த அந்த சொந்த பந்த கூட்டத்தில் அவர்கள் சொன்னதெற்கெல்லாம் பலியாடு போல் இவள் தலை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்ததில், எந்த அறையில் யார் எதை அடுக்கினர் என இவள் கவனிக்கவே இல்லையே!

அமரன்குள வீட்டில் ப்ரவியை அவன் அறையில் பார்க்கும் போதெல்லாம் சோஃபாவில்தான் உட்கார்ந்தோ படுத்தோ புத்தகம் படித்தல், மொபைல் நோன்டல், பாட்டு கேட்டல் என எல்லாம் செய்து கொண்டிருப்பான்.

அதனால் இங்கும் சோஃபா கண்டிப்பாக இருக்கும் என்று இவள் இயல்பாய் எதிர்பார்த்திருக்க,

இப்ப என்ன செய்ய? தரைதான் வழியா? அவளை மீறி ப்ரவியின் புறம் சென்று வந்தது அவளது பார்வை. படுக்கையில் இவளுக்கு முதுகு காட்டி அவன்.

‘சரி இவளாதான வந்தா அப்ப இவளே தரையில் படுக்கட்டும்னு நினச்சுட்டான் போல ப்ரவி’ இந்தப் புரிதலில் இவளுக்கு மனம் எல்லா பொழுதையும் விட கனத்து எங்கோ ஆழத்தில் போய் விழுந்தது. சுருங்கி உள்ளே துவண்டு போனது.

‘அவனும் கூட என் மேல கோபமாயிருக்கான்’ நினைக்கும் போதே அழுகை வருகிறது.

‘போகப் போக எப்படியும் அவனுக்கும் என்னை பிடிக்காமத்தானே போய்டும்? நீ எனக்கு வேண்டாம்னு இப்படி பாஞ்சு பாஞ்சு சண்டை போட்டா வேற என்ன நடக்கும்?’ இந்தப் புரிதலில் திகீர் என்கிறது தீக்குச்சி ஒன்று பற்றியபடி சென்று விழுகிறது இவள் காயம் பட்டிருக்கும் எரி பொருள் மனதில்.

இதையெல்லாம் இவள் யோசிக்கவே இல்லையே, அடிமுடியாய் பிசைந்தெடுக்கிறது ஒரு பீதி வர்ண பிரளயம்.

நெஞ்சடைக்க, கட்டற்று கண்கள் ப்ரவியை தனக்குள் அள்ளிக் கொள்ளவென அவன் மீது சென்று விழ, அப்பொழுதுதான் புரிகிறது அவன் கட்டிலின் ஒரு ஓரமாய் நகர்ந்து படுத்திருந்தான்.

‘என்னது??!!! இவள அங்க வந்து படுக்கச் சொல்றானா???!!! இவளுக்கு இந்த கல்யாணத்திலேயே இஷ்டம் இல்லைனு சொல்லிகிட்டு இருக்கா இவன் என்ன எதிர்பார்க்கிறான்????!!’ சுளீரென மனதில் சுழற்றி அடிக்கிறது கொதி அமில மின்னல். அவளை மீறி உடல் அதாக நடுங்கிப் போக,

மரத்துப் போன மனதில் மெல்ல நியாபகம் வருகிறது “வீட்ல மூனு பெட்ஷீட்தான் இருக்கு, ஷாப்பிங் போனப்ப எண்ணிக்கை எப்படியோ மிஸ் ஆகிட்டு போல, அடுத்த தடவை கடைக்கு போறப்ப மறக்காம வாங்கிடு பவி” என கருண் சொல்லிவிட்டு கிளம்பியது.

அடுத்த பக்கம்