துளித் தீ நீயாவாய் 22 (4)

முழுக் கோபத்தையும் இவள் மீது காட்டினால் கூட பிரவாயில்லை, இதில் லினி கருண் கல்யாணத்தை வேறு எதாவது சொல்லிவிட்டார் என்றால் என்னாவது? ஏற்கனவே ஒருமுறை இவளால் கருண் வதைபட்டது போதாதா?

முழு மொத்தமும் நடுங்க, இடி ஒன்றை இடம் வலம் என்றில்லாமல் இவள் தலை மீதே வாங்கியது போல் பவி துடித்துப் போய் நிற்க,

அப்போதுதான் அவரைப் பார்த்த கருணுமே அரண்டு போய்தான், அதே நேரம் அனைத்தையும் சமாளிக்கு விதமாய் “அண்ணா” என எதையோ சொல்ல வர,

அங்கு தயாளனோ “ஏல உன் வீட்டுக்கு வந்தா இந்த அப்பன வான்னு கூப்டமாட்டியோ?” என பாசமும் யாசகமும் நெகிழ்ச்சியுமாய் உரிமையோடு பவியைப் பார்த்துக் கேட்டார்.

பவி குழந்தையுண்டாகி இருக்கும் விஷயத்தை மற்றவருக்குத் தெரிவிக்கத் தேவையில்லை என்றாலும் தயாளனுக்குச் சொல்வதுதான் சரி என்ற நினைவில் காலையில்தான் ப்ரவி அவரிடம் அழைத்துச் சொல்லி இருந்தான். ப்ரவி அழைக்கும் போதே வெளியே கிளம்பும் வண்ணம் காரில் இருந்த தயாளன், விஷயம் கேள்விப்படவும் சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனவர், இதற்கு மேலும் பவியைக் காணாமல், அவளிடம் பேசாமல் தன்னால் முடியாது என நேரே இங்கே வந்திருந்தார்.

அவரைத்தான் காவலுக்கு இருப்பவருக்கு தெரியுமே, ஆக உரிமையாய் வீட்டுக்குள் வந்துவிட்டவர், வரவேற்பறையை அடையும் போது, லினியின் வருகைக்காக, அதுவும் அவளோடு கருண் திருமணம் குறித்து பேசுவதற்காக காத்திருப்பதும், அது பவி ப்ரவி ஏற்பாடு மற்றும் விருப்பம் என்பதும் புரிய,

அவர் இருந்த மனநிலைக்கு இதையெல்லாம் முறை, குற்றம் என்றெல்லாம் பிடித்து ஆடத் தோன்றவில்லை. தாய்மை அடைந்திருக்கும் பவி சந்தோஷமாக இருக்கிறாள். அதுதான் அவருக்கு மகா முக்கியம்.

பவி மீது இருக்கும் அதீத பாசம்,  அதோடு ஒரு தலைமுறையாய் வீட்டுக்கு வராத வரமல்லவா வந்திருக்கிறது, உச்சபட்ச மகிழ்சியில் அவருக்கு இப்படித்தான் போகிறது சிந்தனா சக்தி.

குழந்தை பற்றிய செய்தியை கேள்விப்படும் முன்னே இவர் முடிவு செய்திருந்தார் தான், கருண் திருமணத்தை பவிதான் முன் நின்று செய்ய வேண்டும் என, இவர் வாயாலேயே பிள்ளையை அனாதை என்றுவிட்டாரே, இந்த வீட்ல சகல உரிமையும் உனக்குள்ளதுதான்னு காமிக்க இந்த கல்யாணத்தை அவ கைல விட்டுடணும் என இவர் பல முறை நினைத்துக் கொண்டதுதான்.

இப்போது அது இன்னுமே அதி அவசியமாய் தோன்ற, இந்நேரம் வீட்டுக்குள் நுழைந்தால் காரியம் எல்லாம் குழப்பமாகிவிடும் என அங்கிருந்தே மாடிக்குப் போக படியுண்டே அதில் ஏறி மேலே போய்விட்டார்.

அடுத்து லினி வந்து இவ்வளவு நேரம் ஆன பின்பு, இவர்கள் பேசி முடித்திருப்பார்கள் என்ற ஒரு முடிவுக்கு வந்து, அதோடு வெளியே ஒரு கார் கிளம்பிப் போனதை லினி கிளம்பிவிட்டாள் போலும் எனப் புரிந்து, இதற்கு மேலும் எவ்வளவு நேரம்தான் காத்துக்கிடக்க, பவியை காண ஒரு பேராவல், கருணுக்கும் அமைந்து வருகிறதென்றால் அவனைப் பார்க்கவுமே ஒரு ஆசை, அவனும் பெங்களூர் போக வேண்டும் என இப்போதே கிளம்பிவிட்டால், பார்க்க முடியாமல் போய்விடக் கூடாதென இவர் இறங்கி வந்து நிற்க,

அங்குதான் இந்தக் காட்சி.

இதெல்லாம் எதுவுமே பவிக்குத் தெரியாதெனினும் தயாப்பாவின் குரலிலும் முகத்திலும் கனிந்து கிடக்கும் இந்த அன்பை, மன்னிப்பை யாசிக்கும் யாசகத்தை, அவரது இந்த ஏல வை இவளுக்குத் தெரியுமே!

என்னதான் அவர் மீது கோபம், ஆதங்கம் அவரால் அடிபட்ட வலி, ஏன் நம்பிக்கை துரோகம் செய்யப்பட்ட நிலை கூட அவளுக்கு இருந்தாலும், அத்தனைக்கும் அடிப்படை அவர் இவளை வெறுக்கிறார் என்ற புரிதல்தானே! விலக்கி நிறுத்துகிறார் என்ற வெடித்த மனம்தானே!

இதில் அவர் வீடு தேடி வந்து இப்படி யாசிக்க,

என்ன செய்கிறோம் என்று யோசிக்கும் முன்னும், பவி அவரின் கைகளுக்குள் போய் புதைந்திருந்தாள்.

தொடரும்..

துளி தீ நீயாவாய் 23

பவிக்காக சிலர் ரொம்ப ஃபீல் பண்ணிட்டீங்க… அதான் பவி நல்லாதான் இருக்கான்னு காமிக்க இந்த குட்டி எப்பி, அடுத்து வேணியும் திருடனும் பால்கனியுமாத்தான் உங்கள சந்திக்க வரணும்னு நினச்சுருக்கேன்… கதையோட முக்கிய சஸ்பென்ஸெல்லாம் உடைச்சு சொல்ற ஒரு எப்பியோட சீக்கிரம் வர ட்ரைப் பண்றேன். நன்றி