துளித் தீ நீயாவாய் 22 (3)

“லூசு, இது உனக்கு புது ட்ரெசா, நீ பார்க்க இன்னைக்குத்தான் போடுறேன் அவ்ளவுதான், நானே திகில்ல இருக்கேன், எப்படிடா நீ எனக்கு ப்ரபோஸ் செய்யலாம்னு நாலு இழுப்பு இழுத்துட்டான்னா என்ன செய்றதுன்னு?” என அவன் பதில் கொடுக்க,

“ஹை ஜாலி, ப்ரவி ப்ரவி ப்ளீஸ் ப்ரவி ஒரு உலக்க உடனடியா ஏற்பாடு செய்து தாயேன். இவன் பேசப் போற இடத்துல கைக்கு எட்றாப்ல வைக்கணுமே!” பவி இப்போது இப்படி உற்சாகப்பட,

“உலக்கைய தூக்க வெயிட்டா இருக்கும்ல, பாவம் லினிக்கு கஷ்டமாகிடும், நாம நல்லதா ஒரு பெருக்குமார போட்டு வைக்கலாம்” இப்படி ப்ரவி சொல்ல,

“அடபாவிகளா, இதுக்குத்தான் என்ன இழுத்துவிடுறீங்களா? நான் கூட நிஜமாவே கல்யாணம் பேசத்தான் ஏற்பாடு செய்றீங்கன்னு நம்பி ஏமாந்துட்டேன்” கருண் நோக,

இதற்குள் வாசலில் எதோ சத்தம் கேட்பது போல் தோன்ற,

“அச்சோ வந்துட்டா போலயே ராட்சசி” என இங்கு கருண் திகில்பட,

“வாவ் இந்த பயம்தான்டா கல்யாணத்துக்கு அஸ்திவாரமே, இந்த கல்யாணம் மட்டும் நடந்தா நீ அமோகமா இருப்படா” என பவி ஆர்ப்பரிக்க,

வீட்டு வாசலில் நிஜமாகவே இப்போது வந்து நிற்கிறது மெல்லினாவின் கார்.

அடுத்து மெல்லினாவை இவர்கள் வரவேற்று, பரஸ்பர நல விசாரிப்புகளுக்குப் பின் ப்ரவி அலுவலகம் கிளம்பிவிட, கருண் மெல்லினாவோடு சாப்பாட்டு அறையில் அமர்ந்து உணவு உண்ட பவி, இயல்பாய் அங்கிருந்து கிளம்பி வரவேற்பறைக்கு வந்துவிட, அடுத்து கருணும் லினியுமாக பேசிக் கொண்டவர்கள் என்ன பேசினார்களோ,

வெகு சில நிமிடங்களிலேயே கருண் மட்டுமாக இவள் முன்னால் வந்து நின்றான். நிறைவு நிரம்பவும் பூத்துக் கிடந்த அவன் முகமே செய்தியை இவளுக்கு அறிவிக்க,

“என்னடா?” ரொம்ப வேகமா கவுந்துட்ட போல?” என இவள் ஒரு மார்க்கமாய் விசாரிக்க,

“அதான் நான் சொன்னனே, வீட்ல இப்படி பேச்சு வருதுன்னு சொல்லவும் ராட்சசி ஓங்கி ஒன்னு கன்னத்திலே வச்சுட்டா” என எதோ அவார்ட் வாங்கியதைப் போலச் சொன்னவன்,

“இவ்வளவு நாள் நான், என் காதல்னு எதுவும் கண்ல தெரியல என்ன உனக்கு? என்ட்டயே வந்து எனக்கு கல்யாணம்னு சொல்லி கொன்னுட்டு போனதும் இல்லாம, இப்பவும் உன் வீட்ல உள்ளவங்க சொன்னாங்கன்னுதான் என்ட்ட கேட்க தோணி இருக்கு என்ன?” என்றபடி லினி அழுகையில் வெடித்ததையும், முதல் கணம் இதை எதிர்பாராதவன் திக்குமுக்காடிப் போனாலும்,

அடுத்த நொடியே திருமணமே முடிவாகி இருந்த போதும், துவக்கத்திலிருந்தே மாளவிக்கு இவன் மீது விருப்பம் என்று ஏதுமில்லை என இவனால் புரிந்து கொள்ள முடிந்ததற்கும், அதனால் அவளோடு மன ஈடுபாடு என ஒன்று பெரிதாக தோன்ற முடியாமல் போனதற்கும், ஏன் அதன் பின்னும் தன் வீட்டு சூழலுக்கு இவன் திருமணம் என்பது தேவையானதாக இவனுக்கே பட்டாலும், வந்த எந்த மணப்பெண் விஷயங்களும் இவனுக்கு வண்ணமின்றியே தோன்றியதற்கும், கண்ணிய திரையிட்டு மறைக்கப்பட்டிருந்தாலும், இவனை அடர்த்தியாய்  சூழ்ந்தே கிடக்கும் லினியின் காதல்தான் காரணம் என்பது புரிய,

அதைத் தாண்ட முனைந்த இவன் உறவுகள் எதிலும் இவனுக்கு வெறுமைதவிர எதுவுமில்லை, இவனே அறியவில்லை எனினும் லினியின் இந்த காதலுக்குள் மாத்திரமே இவன் நிறைவாய் இருக்கிறான் என்பதுமே அவனுக்கு உறைக்க,

லினி அழுகிறாளே என்ற இரக்கத்தில் என்றில்லாமல், என்னவளை நான்தானே தேற்ற வேண்டும் என்ற அக்கறையும் உரிமையுமாக, அவளை மெல்லமாய் அணைத்துக் கொண்டதையும், நினைத்தபடி

“உன்ட்டயாவது சொல்லி எங்க கல்யாணப் பேச்செடுக்க சொல்ல முடியுமான்னு கேட்கதான் அவ இங்க வந்ததே போல, இப்ப உன்னப் பார்க்க ஷையா இருக்குன்னு அங்கயே உட்காந்துகிட்டு இருக்கா” என அடுத்த உண்மையைச் சொல்ல,

“ஹ ஹா இத ஓரளவு நேத்தே கெஸ் பண்ணிட்டனே நான்” எனச் சிரித்த பவித்ரா,

“லினி இந்த விஷயம் எனக்கு ஏற்கனவே தெரியும், நீ ஒன்னும் ஃபீல் பண்ணாம இங்க வா” என சாப்பாட்டு அறை நோக்கி குரல் கொடுக்க,

“எப்படி கொத்துபரோட்டா இதெல்லாம்” என கருண் புளங்காகிதமாய் விசாரிக்க

“வீட்ல என்ன நடந்தாலும் நீ லினியத்தான் முதல்ல கூப்ட்டுச் சொல்ற, அவ்வளவு க்ளோஸ் ஃப்ரெண்ட், ஆனா உன் என்கேஜ்மென்டுக்கு  அவ வரல, கல்யாணத்துக்கும் வர போல சிச்சுவேஷன் இல்லன்னு அவ சொல்லி இருக்கான்னு அப்ப சொல்லிகிட்டு இருந்த, ஆனா அதே டேட்ல நடந்த எங்க மேரேஜுக்கு அவ வந்தா, இப்பவும் என்னைப் பார்க்க மட்டும் வர்றேன்னதுமே எனக்கு பல்ப் எரிஞ்சிட்டு,

அதோட இவ்வளவு நாளா நீ லினி பத்தி சொல்ற பலதையும் கேட்டிருக்கனே எல்லாம் சேர்ந்து யோசிக்கிறப்ப, நல்லாவே புரிஞ்சிட்டு இது இப்படித்தான் ஆகும்னு, அதான் உன்னை கொஞ்சம் ரெடி பண்ணி, இந்த மாப்ள பார்க்கும் படலத்தை அரேஞ்ச் செய்தேன்” என உற்சாகமாய் அறிவித்த பவி,

அப்போதுதான் எதோ உணர்ந்தவளாகத் திரும்பிப் பார்க்க, இவர்களது வீட்டு வரவேற்பறை வாசலில் நின்று கொண்டிருந்தார் இவர்களது தயாப்பா!!

சர்வமும் ஒடுங்க ஆடிப் போனாள் பவி எனதான் சொல்ல வேண்டும்.

சும்மாவே இவள் மீது அத்தனை கோபத்தில் இருப்பவர். அதிலும் முறை, நடத்தை என்பதையெல்லாம் வெகுவாக பார்ப்பவர். பெண் வீட்டில் போய் பெண்ணின் பெற்றோரிடம் திருமணம் பேசாமல், பெண்ணை இப்படி வீட்டுக்கு வரவழைத்து அதுவும் பவியின் பாஷையில் சொல்வதானால் மாப்பிள்ளை பார்க்க வரவழைத்து, பெண்ணிடம் சம்பந்தம் பேசுவது என்பதையெல்லாம் எப்படி ஜீரணித்துக் கொள்வார்.

அடுத்த பக்கம்