துளித் தீ நீயாவாய் 21(8)

மதுவுக்கோ தன் அம்மாவை யாரும் அம்மாவின் சம்மதமின்றி அழைத்துப் போனதாகத் தோன்றவில்லை. தனியா வந்து இவட்ட பேசுறப்ப கூட அம்மா சின்னதா ஒரு குறிப்பு கூட கொடுக்கலையே என்னை கடத்துறாங்கன்னு. ஆக எல்லாமே அம்மா செய்யும் நாடகமோ என்றிருக்கிறது. அம்மாவுக்கு எதுவும் ஆபத்து இருக்காது என்பது இவளுக்கு முழு உறுதி.

ஆக அம்மா பற்றி மனதில் உறுத்தல்களும் நெருடல்களும் இருந்தாலும் சிறு புன்னகையோடு இவள் வலம் வந்தாள். அந்த அளவுக்கு இதமாகவே இவள் நாளை மாற்றிக் கொண்டிருந்தான் இவளது அண்ணன்.

“உனக்கு எதைச் செய்து கொடுக்கவும் இப்ப எனக்கு ரைட் இருக்கு. இனி நீ எதைப் பத்தியும் கவலைப்படாம தைரியமா இருக்கணும் என்ன” என்றுவிட்டு போனான் ஒரு முறை.

“எப்டியாவது பவி அண்ணிட்ட கேட்டு சீக்கிரமா ஒரு டைம் உன்ன  நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய் காட்டுறேன் என்ன?” என்றான் அடுத்த சற்று நேரத்திலெல்லாம்.

நன்றாகவே சென்று கொண்டிருந்தது நேரம்.

இரவு உணவுக்குப் பின், பள்ளி மைதானத்தில் வெட்ட வெளியில் திரை அமைத்து, அதில் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்க, மெல்லிய தென்றலுக்கும், வானத்தில் கசியும் சின்ன நிலவொளிக்கும் தேகத்தைக் கொடுத்தபடி, திரையில் ஒன்றிப் போய் மக்கள் கூட்டம் பெஞ்சில் சில வரிசையும், விரும்பிப் போய் தரையில் சில வரிசையுமாய் அமர்ந்திருக்க,

அனைவருக்கும் பின்னால் கடைசியாக வரிசையில் பெஞ்ச் ஒன்றில் அமர்ந்திருந்த பவியின் அருகில் வந்து அவன் அமரும் வரையுமே பவி  ப்ரவி வந்ததைக் கவனிக்கவில்லை. “ஏய் குத்துவிளக்கு உனக்கு ஒரு மூவிய ஓடவிட்டுட்டு மொத்த வீட்டையும் தூக்கிட்டுப்போய்டலாம் போலயே” என இவன் அவள் காதில் கிசிகிசுத்தபடியேதான் உட்கார,

ஒரு கணம் தூக்கி வாரிப் போட்டு அதன் பின்தான் வந்திருப்பது அவன் என்ற புரிதலில் மொத்தமாய் மலர்ந்தாள் பெண்.

“ஹேய் போலீஸ்கார், என்னதிது அதிசயம்? இங்க என்ன பண்ற நீ?” குரல்தான் இவர்கள் இருவருக்கும் மட்டுமாய் கேட்கும் அளவு என்றாலும் பூரணமாய் பூத்திருந்தது பூரிப்பு அதில்.

“ம், தெரியல, என் பொண்டாட்டிய சைட் அடிக்கேன்”

“அச்சோ! பிள்ளைங்க இருக்கப்ப என்ன பேசுற நீ?”

“இருக்க பசியில நான் கத்தி பேசினா கூட யாருக்கும் காது கேட்காது, இதுல இந்த கிசுகிசு சத்தம்தான் புரிஞ்சிடப் போகுதா?”

“என்னப்பா இது? பசியிலயா இங்க வந்தீங்க? எதாவது சாப்ட்டுருக்கலாம்ல, சரி கிளம்புங்க, வீட்டுக்கு போகலாம்”

“ம்ஹூம், நான் வரல, நீயும் போகக் கூடாது, இப்படி ரிலாக்ஸா உன் பக்கத்தில் உட்காந்தே ரொம்ப நாளாச்சு”

“ஆஹா இன்னைக்கு சார் சின்ன பிள்ள மூட்ல இருக்கார் போலயே, சரி ஒரு ரெண்டு நிமிஷத்தில் வர்றேன்” என பவி இப்போது எழுந்து கொள்ள,

அவர்களுக்கு முந்திய வரிசையில் இருந்த மதுவுக்கு, இருவரும் பேசிக் கொண்டதில் என்னப்பா, பசியிலயா, கிளம்புங்க என்ற வார்த்தைகள் மட்டும் அரையும் குறையுமாக காதில் விழுந்தது.

இதில் ப்ரவி பசியில் இருக்கிறான் எனப் புரிய, இன்றைய உணவை பால்கனிதானே ஏற்பாடு செய்திருந்தான், அது SP சார் நிமித்தமான சந்தோஷத்துக்குத்தானே இத்தனை ஆர்ப்பாட்டம் என மது நினைத்திருந்தாள், ஆக இப்போது “SP சார் வந்துருக்காங்க, பசியில இருக்காங்க போல, சார சாப்ட கூப்டுங்க” என பால்கனிக்கு வாட்சப் செய்தி அனுப்பினாள்.

“நான் ஹோட்டல்க்கு கிளம்பிட்டேன், சார் வர்றார்னு தெரியாதுல்ல, இப்ப அவரப் பார்க்கவும்தான் வாங்க வந்திருக்கேன்” என வருகிறது பால்கனியின் பதில்.

இங்கோ மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாதென எழுந்து போன பவி கூட்டத்தை விட்டு விலகி நின்று யாரிடமோ ஃபோனில் பேசியவள் மீண்டுமாய் ப்ரவி அருகில் போய் அமர்ந்து கொண்டாள்.

அடுத்த சற்று நேரத்திலெல்லாம் ஒரு கார் ஓரளவுக்கு இவர்கள் அருகேயே வந்து நிற்க, அதிலிருந்து சாப்பாட்டு பையும் கையுமாக இறங்கி வந்தது கருண்.

ஆம் இவர்களைப் பார்க்க அவன் வந்து கொண்டிருக்கிறான் என்பதால்தான் வரும் வழியில் அவனை சாப்பாடுமே கொண்டு வரச் சொல்லி இருந்தாள் பவித்ரா.

அவன் காரைக் காணவுமே பவியும் ப்ரவியுமே அவனிடம் எழுந்து போக,

“இந்த அளவு பத்தினி விரதன் ஆகுவன்னு நான் எதிர்பார்க்கல மாக்கான், அவ பரிமாறாட்டி சாப்ட மாட்டியா நீ?” என ப்ரவியையும்,

“ஏய் கொத்து பரோட்டா அவன் ஆசை ஆசையா வர்றானேன்னு ஆசைப்பட்டு சமச்சு கிமச்சு போட்டுடாத, இப்படி பரிமார்றதோட நிறுத்திக்கோ, என்ன பத்தினி விரதனாக்குற பொறுப்பும் கடமையும் இன்னும் அவனுக்கிருக்குன்றத மறந்துடாத” என பவியையும் எதிர்கொண்ட அவனை

வேற என்ன செய்வா பவி? இடம் பொருள் பார்க்காமல் அவனுக்கு ஒரு அடியை வைத்து, “ஓஹோ அப்ப உனக்கு கல்யாணம் செய்து வைக்கத்தான் அவனாடா? என எகிற, அப்படியே அவன் கையிலிருந்த பைகளை வாங்கிக் கொள்ள,

“மக்கு ப்ளாஸ்த்ரி, கல்யாணம் உன்னைத்தானே செய்து வைக்க சொல்லி இருக்கேன், இது வேற டிபார்ட்மென்ட், கட்டினவளால கண் கலங்காம நம்மள காப்பாத்திக்கிறது எப்படி அப்படின்றத எனக்கு இவன்தானே காலம் பூரா சொல்லித் தரணும்” என ஒரு எக்குதப்பு விளக்கத்தை கொடுக்க,

இதற்கு மட்டும் என்ன செய்வாள் பவி? அவளிடம் கருண் கொடுத்திருந்த ஒரு பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அதனால் அவனுக்கு ஒரு அடி.

அடுத்த பக்கம்