துளித் தீ நீயாவாய் 21(7)

ன்று இரவு மதுவின் பள்ளியில் நைட் ஸ்டடியில் தங்கி இருக்கும் அனைத்து மாணவியருக்கும் என்ன உணவு வேண்டும் என ஒவ்வொருவரிடமாக விசாரித்துத் தரச் சொல்லி, அத்தனையும் வாங்கி இறக்கி இருந்தான் பால்கனி. அதோடு இதுவும் அதுவுமாய் தடபுடல் விருந்தேதான் அது.

மேலும் இந்த  இரவுத் தங்கல் என்பது சனி ஞாயிறுகளில் கட்டாயம் கிடையாது, விரும்புவோர் மட்டும் கலந்து கொள்ளலாம் எனதான் ஏற்பாடு. பிள்ளைகளுக்கு வீடு, குடும்பம், பாசம் எல்லாம் வேண்டுமே! ஆனால் மதுவை மனதில் வைத்துதான் இந்த சனி, ஞாயிறு வகுப்புத் திட்டம். அன்று பொதுவாக பொழுதுபோக்குக்கென சில விளையாட்டுகளோ அல்லது எதுவோ ஏற்பாடு செய்யப்படும். இன்று அப்படி பொழுது போக்குக்கிற்கென காரணம் காட்டி இந்த வயது மாணவியர் பார்க்கும் வகையான ஒரு தரமான திரைப்படத்தை ஆசிரியர் குழுவிடம் அனுமதி வாங்கி திரையிட்டான்.

அதுவும் டீவியைக் கொண்டு வைத்து என சாதாரணமாகச் செய்யாமல் இரவு உணவுக்குப் பின். திறந்த மைதானத்தில் திரை அமைத்துத் திரைப்படம்.

என்னதான் அனைத்துக்கும் ஆட்கள் வைத்து செய்தாலும் ஓடி ஓடி அவன் ஒன்றொன்றையும் செய்த வகையில், இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த மதுவுக்கு அவன் உற்சவ மனநிலையில் உச்சத்தில் இருக்கிறானென நன்றாகப் புரிகிறதுதான்.

ஆனால் அப்படி எதையும் இவளிடம் அவன் பேசிக் கொள்ளவோ,  காட்டிக் கொள்ளவோ இல்லை.

தன் அம்மாவைக் காணவில்லை என இவள் தவித்துக் கொண்டிருக்கும்போது தான் சந்தோஷப்படுவது இவளுக்கு கஷ்டமாக இருக்கக் கூடும் என அவன் இப்படி நடந்து கொள்கிறான் என்பது இவளது புரிதல்.

ஆனாலும்  இவளுக்குக் கார்டியன் அவன் என்ற நிலை வந்துவிட்டதற்காகத்தான் இவனுக்கு இத்தனைக் குதுகலம் என இவளுக்குப் புரியும்போது இதில் வருத்தம் ஏன் வரப் போகிறது?

இவளது அம்மா கிளம்பிப் போய்விட்டாள் எனத் தெரியும்போதே குரல் எல்லாம் விழுந்துபோய்தான் வந்த அவன், SP சாரை சந்திக்க இவள் கிளம்பியபோதெல்லாம் முகமே கருத்துப் போய், தான் ஆடிப் போய் இருப்பதை இவளிடம் காட்டிவிடக் கூடாதென முழு மொத்தமாய் முயன்றும், அதை மீறி தெரியும் இறுக்கமுமாகத்தான் நின்று கொண்டிருந்தான்.

“போய்ட்டு வந்துட்டு ஒரு தடவையாவது பேசு என்ன?” என அவன் உணர்ச்சியைக் காட்டாமல் சொன்ன வகையில்தான் அவன் எந்த கோணத்தில் சிந்தித்துக் கொண்டிருக்கிறான் என்பதே இவளுக்குப் புரிய,

“ஏண்ணா இப்படி சொல்லிட்டீங்க? இனிம நாம பேச மாட்டமா? ஏன்?” என இவள் பதற,

“யார் என்ன செய்வோம்னு தெரியலியே” என எங்கோ வெறித்த பார்வையுடன் சொன்னவன், “SP சார் என்ன சொல்றாரோ” என்றும் சொல்லிக் கொண்டான்.

அப்போதுதான் SP சார் பேசக் கூடாது எனச் சொல்லிவிட்டால் சாரின் பதவி மட்டும் உறவினர் என்ற வகையில் பால்கனி மீற முடியாதே என்பது இவளுக்கு உறைக்கிறது. (அப்படில்லாம் சாதாரணமா நினச்சுடாதம்மா, உங்க சார் பிஸ்டல தூக்கிப் பிடிப்பார்! உங்கண்ணாத்த தெறிச்சு ஓடும், உனக்குத்தான் அது தெரியல)

தனியாக இருக்கிறாள் என்பதினால் இவளை அவரின் மேற்பார்வை உள்ள விடுதி போல எதற்காவது சார் அனுப்பிவிட்டால், அங்கு போய் அவரது வார்த்தைகளை மீறி நடக்க இவளுக்குமே மனம் வராது. இவள நம்பி பொறுப்பெடுக்கவங்களுக்கு இவ உண்மையா இருக்கணுமே!

இதையெல்லாம் நினைத்துதான் ப்ரவி லோக்கல் கார்டியன் பற்றி பேச்சை எடுக்கவும் இவள் பால்கனி பெயரை சொல்லி வைத்தது. பால்கனியை கார்டியனாக்காவிட்டாலும் கூட அவன் மனதளவில் இவளுக்கு சகோதர உறவில் இருப்பவன் என தெரியப்படுத்திவிடும் முயற்சி அது., ஆக பழகத் தடை சொல்ல மாட்டாரே என எதிர்பார்ப்பு.

ஆனால் SP சாரோ பால்கனியை கார்டியனாக்க, அதை இவள்தானே மொபைலில் பால்கனியிடன் சொன்னாள். விஷயம் காதில் விழவும் “வாட்???” என்பதுதான் அவனது முதல் ரியாக்க்ஷன்.

“நிஜமாவா சொல்ற? சாரே சொன்னாரா?”

“அவரே சொன்னாரா? அவர் சொல்லச் சொன்னார்னு யாரும் சொன்னாங்களா?”

“சரியாதான் கவனிச்சியா? அவர் இதத்தான் சொன்னாரா?” என அத்தனைக் கேள்விகளிலும் இருந்ததென்ன?

ஆயிரம் வோல்ட்ஸில் அக்மார்க் நிம்மதியும் அவனை அடித்து சிதறச் செய்யும் அளவிட முடியா குதுகலமும்.

இது புரிவிக்காதாமா இவளுக்கு அவனது துக்கத்தின் காரணமும் இப்போதைய சந்தோஷத்தின் அடிப்படையும் இவள் மீதான பாசம்தான் என. வெகு வெகுவாக நெகிழ்ந்து போயிருந்தது இவள் மனம். அதில்

“சார்க்கு கண்டிப்பா உங்க மேல நல்ல ஒபினியன் இருக்குதுணா, நான் சொன்னனே டைம் வர்றப்ப வேணிய கேளுங்க சாரே முன்ன நின்னு செய்து வைப்பார் உங்க மேரேஜ, நம்ம ரெண்டு பேருக்கும் இடையில இருக்க உறவையே புரிஞ்சிக்கிறவர், நீங்க வேணி விஷயத்தில் சின்சியரா இருந்தா கண்டிப்பா புரிஞ்சுப்பார்ணா” என இவள் அவனுக்கு இன்னுமாய் பாந்தம் செய்ய,

“சரிங்க பெரிய மனுஷி, நீங்க சொல்றத மட்டும்தான் இனி கேட்கிறதா இருக்கேன்” எனும் போதெல்லாம் அவன் உச்ச மகிழ்ச்சியில் வெடித்துக் கொண்டிருப்பது இவளுக்கு இங்கே வரை தெரிந்தது.

“சாரிடாமா, அம்மா பத்தி என்ன சொன்னாங்க? அதைவிட்டுட்டு இதையெல்லாம் பேசி உன்ன நோகடிக்கேன்” என அடுத்துதான் இவள் புறத்தை யோசித்தான் போலும், அதிலிருந்து இப்படியாய் சுத்திக் கொண்டிருக்கிறான்.

அடுத்த பக்கம்