துளித் தீ நீயாவாய் 21(6)

அடுத்து மூன்று நிமிடம் போல் கடந்திருக்கும், இப்போது இவளிருந்த குளியலறைக் கதவை தட்டிய இவளது அம்மா “ஏ இவளே, எனக்கு சினிமா சான்ஸ் வந்திருக்கு, நான் திரும்பி வர மாசக் கணக்காகும் போல, கால்ஷீட் அப்படி கொடுத்துருக்கேன், நீதான் பள்ளி கூடத்துலயே கிடப்பேன்றியே, சமாளிச்சுக்கோ, முடிஞ்ச வரைக்கும் சீக்கிரமா திரும்பி வரப் பார்க்கிறேன், அங்க போய்ட்டு கால்பண்றேன்” என்றுவிட்டுப் போனாள்.

மதுவுக்கு இதெல்லாம் நம்புவது போலா இருக்கிறது?

மூனு நிமிஷத்தில சினிமா சான்ஸாம்,  மாசக் கணக்கா கால்ஷீட்டாம். இப்போது இவளை வெளியே வர வைக்க இப்படி ஒரு பொய் புழுகு போல.

ஆக இவள் பதில் சொல்லாமல் நிற்க, வீட்டிற்கு வெளியே கிளம்பிச் செல்லும் சில காலடி சத்தங்களும் கூடவே கார் புறப்படும் ஒலியும் துல்லியமாக வந்து விழுகிறது இவள் செவியில்.

மதுவுக்கு வெகுவாகக் குழப்பமாக இருக்கிறது. உண்மையிலேயே வந்தவன் இதுக்குள்ள கிளம்பிட்டானா? ஒருவேளை இவளோட அண்ணாவோட கார் வந்த சத்தம்தான் இப்படி கேட்குதா?

வீட்டுக்குள் எந்த காலடி ஓசையும் இல்லை. திகிலாக இருந்தாலும் மெதுவாய் சத்தமின்றி குளியலறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து அறை ஜன்னல் வழியாய் தெருவை எட்டிப் பார்த்தாள்.

என்ன யோசிப்பதென சுத்தமாகப் புரியவில்லை இவளுக்கு. ஏனெனில் உண்மையாகவே ஒரு அசத்தலான காரின் பின் கதவை திறந்து இவளது அம்மா ஏறிக் கொண்டிருந்தாள். கார் கிளம்பிக் கொண்டிருக்கிறது.

ஷூட்டிங்கா? இவளோட அம்மாவா? ஆனா சினிமாவில் நடிக்க கிளம்புற அம்மா கையில் ஒரு பேக்கும் இல்லாமல் கட்டிய புடவையில் ஏத்திப் போட்டிருந்த கொண்டையோடு இப்படியேதான் கிளம்புவாளாமா?

சில நொடி ஒன்றும் ஓடவில்லையென்றாலும், கார் கிளம்பி நகர ஆரம்பித்த நொடி சட்டென உணர்ந்தவளாக கையில் இருந்த மொபைலில் காரின் பின் பக்கத்தை புகைப்படமாக பதிந்தாள். எந்த வண்டிக்குமே நம்பர் நோட் பண்ணிக்கிறது புத்திசாலித்தனம்னு ஸ்கூல்ல எப்பயோ பேசி இருக்காங்க!

கார் ஏற்கனவே நகர்ந்து கொண்டு இருந்ததால் காரின் பின் பகுதியும் காரைத் தொடர்ந்த ஒரு புல்லட்காரனின் பாதி உருவமும் இவளது கேமிராவில் சிக்கியது.

அடுத்த இரண்டாம் நிமிடமெல்லாம் அங்கு வந்து சேர்ந்த பால்கனி இந்தப் படத்தைப் பார்த்து அதிர்ந்து போய் நின்றிருந்தான். ஹெல்மெட்டால் முழு முகத்தையும் மறைத்திருந்தாலும், அது வயலுக்கு வந்த அதே புல்லட்காரன் என அவனது உடை அமைப்பு உறுதி செய்கிறதே!

மது அம்மாவ இந்த புல்லட்காரன் கூட்டிட்டுப் போறானா? ஏன்??!! அல்லது இது கடத்தலா? அப்படின்னா சாருமதி ஏன் சினிமா சான்ஸுன்னு எல்லாம் ரீல் விடணும்?? கூடவே போகணும்??

உடனடியாக இவன் மதுவை அவளது அம்மாவுக்கு அழைக்கச் சொல்ல, அந்த மொபைல் இங்கு மதுவின் வீட்டிலிருந்தே சத்தமிட்டது. அதாவது தனது மொபைலை வீட்டில் விட்டுப் போயிருக்கிறாள் சாருமதி. இதற்கு என்னதான் அர்த்தம்?

ஆனால் இந்த புல்லட்காரன் பற்றி மதுவிடம் சொல்லவில்லை அவன். எப்படியும் ப்ரவிக்கு இந்தப் புகைப்படம் போய் சேரும்தான். அப்போது அவரே முடிவு செய்துகொள்ளட்டும் என்று இருந்துவிட்டான்.

அவன் நினைத்தது போலவே வேணியிடம் மது நடந்ததை மொபைலில் அழைத்துச் சொல்லவும், ப்ரவியிடம் இதைச் சொல்வதுதான் சரி என்ற வேணி மது சொன்னதை அப்படியே ப்ரவியிடம் தெரிவித்தாள்.

உடனடியாக தன் அலுவலகத்துக்கு மதுவை வரவழைத்துப் பேசிய ப்ரவி, மது காட்டிய புகைப்படத்தையும் ஒரு படிவம் எடுத்துக் கொண்டவன் “உன் அம்மா பத்ரமா திரும்பி வர்றது என் பொறுப்பு” என அவளுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் கொடுத்தான். ஆனால் புல்லட்காரனைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. சொல்லமாட்டான் தானே!

அதோடு “அது வரைக்கும் நீ தனியா இருக்க முடியாதே, என்னதான் ஸ்கூல்லயே இருந்துப்பன்னாலும் ஒரு கார்டியனாவது வேணுமே, ரிலடிவ்ஸ் யாரும் இருக்காங்களா? அவங்கட்ட கூப்ட்டு நானே பேசுறேன்” எனவும் ப்ரவி கேட்க,

“கார்டியனாகுற அளவுக்கு ரிலடிவ்ஸுன்னுல்லாம் யாரையும் எனக்குத் தெரியாது, பால்கனி அண்ணாவ கார்டியனாக்க முடியும்னா செய்ங்க, அவங்க, வேணி, பவி மேம் இவங்க மூனு பேரும்தான் எனக்கு பிரச்சனைனா வருவாங்க” என்றது மது.

இதில் சின்னதாய் புன்னகை பூசிக் கொண்ட ப்ரவி “அப்ப பவி மேம கார்டியனாக்கிடுவோமா?” என வழி சொல்ல,

“ஐயோ இல்ல சார் வேண்டாம், மேம்க்கு ஏற்கனவே நிறைய வேலை, அதோட வேணியும் உங்க வீட்ல இருக்காங்க, இதுல எனக்கும் கார்டியன்னா கொஞ்சம் கூட சரியா இல்ல, உங்களுக்கு ஓகேன்னு பட்டுதுன்னா வேணிய வேணா என் கூட ஸ்கூல்ல தங்க பெர்மிஷன் கொடுத்தீங்கன்னா படிக்கிறதுக்கு வசதியா இருக்கும், சட்டர்டே சன்டே கூட ஸ்கூல்ல தங்க வழி இருக்கே, அங்கயே இருந்துப்போம், பால்கனி அண்ணா எனக்கு கார்டியனா இருக்கட்டும், எதாவது இஷ்யூனா மட்டும் அவங்க வந்து ஹெல்ப் பண்ணுவாங்க” என தனக்குத் தேவை என்றதை இவள் தெரியப்படுத்த,

வேணிக்கும் சார் வீட்ல இருக்க தர்ம சங்கடமா இருக்குன்னு சொன்னாளே, ஆக இப்படி கேட்டு வைக்க,

“வேணியப் பத்தி அப்றமா பார்க்கலாம், ஆனா இப்ப உன் பால்கனி அண்ணா சரின்னு சொன்னா  உங்க வீடு பக்கம் இருக்க ஸ்டேஷன்ல  உனக்கு லோக்கல் கார்டியனா பொறுப்பெடுத்துருக்கேன்னு எழுதி கொடுத்துட்டுப் போகச் சொல்லு, நீ ஸ்கூல்ல தங்கிக்க” என அனுமதி கொடுத்தான்.

அடுத்த பக்கம்