துளித் தீ நீயாவாய் 21(5)

அதோடு  குளியலறைக் கதவை திறக்கச் சொல்லி கத்தினாள். “வெளிய வந்துதான ஆகணும் கால உடச்சி கட்டில்ல போடுறேன்” என அவள் கதவை அடி வெளுக்க,

இதற்குள் முழு கோபத்திற்கும் ஆதங்கத்திற்கும் போயிருந்த மது “அம்மான்னு பார்க்க மாட்டேன், போலீஸ்ட்ட போய்டுவேன்” என கத்த,

“போடி போ, என்னமோ போலீஸ்காரங்கல்லாம் ரொம்ப உத்தமங்க பாரு, நீ உதவின்னு கேட்டதும் ஓடி வந்து ஹெல்ப் பண்ணிட்டுதான் அடுத்த வேலை பார்ப்பாங்க, கிடச்ச வரைக்கும் லாபம்னு அவனே உன்ன எங்கயாவது வித்துடுவான்” என அதற்கு சாருமதியோ இப்படி கொதித்தாள்.

அதற்குள்  இப்படி என்றுமே முகம் உடைக்க தைரியமாய் பேசியிராத மகள் இப்படி எதிர்த்து நிற்பதுக்குக் காரணம் அவளை யாரும் தூண்டி விடுகிறார்களோ என யூகித்தவளாக, சட்டென தேன் ஒழுகும் பேச்சுக்கும், தொனிக்கும் மாறினாள் சாருமதி.

மானே தேனே போட்ட அந்த பேச்சின் சாரம்சமோ இதுதான். ‘எங்கயாவது கொண்டு போய் உன்ன வித்துடுவாங்க பாரு, அதுக்குன்னு ஒரு நெட்வொர்க்கே இருக்காம்’

அதோடு “அப்படி பட்டவங்கட்ட நீ மாட்டிக்காம இருக்கவாவது இந்த ராஜாமணி கூட இன்னைக்கு நீ ஊட்டி கிளம்புற, அவன் வர்ற வரைக்கும் நான் இந்த ரூம் கதவையே திறக்கிறதா இல்ல” என முடித்தாள்.

“நீ என்னத்தையும் சொல்லு, ஆனா நீயா என்ன இப்ப ஸ்கூலுக்கு விடலன்னா, இங்க எவனாவது வந்து நிப்பான்ல, அவன்ட்ட எங்க அம்மா பேர் மட்டுமல்ல உன் பேரையும் சேர்த்து போலீஸ்ல எழுதிக் கொடுத்துடுவேன்னு சொல்லி துரத்திதான் விடுவேன், போலீஸ் ஹெல்ப் செய்யுதோ இல்லையோ, இந்த மிரட்டல் உதவி செய்யும்” என இதற்கு மதுவும் முழு தீர்க்கமாய் அறிவிக்க,

இதில் முழு மொத்தமாய் மிரண்டுதான் போனாள் சாருமதி. ராஜாமணி போன்று பயந்து மறைந்து வரும் ஆட்கள் மது இப்படிப் பேசினால் அடுத்து என்றைக்குமே இந்தப் பக்கம் வரமாட்டார்கள் எனத் தெரியும். இது முதலுக்கே மோசம் என உணர்ந்த சாருமதி, இப்போதைக்கு இவளை விட்டுப் பிடிக்கலாம் என்ற ஒரு நினைவுடன்,

“அவ்வளவு தூரம் ஆகிப் போச்சா, அப்பன்னா உன் கேடுகெட்ட ஸ்கூல்க்கே போய் ஒழி. யாரோ உனக்கு வால முறுக்கி விடுறாங்கள்ல அந்த கூட்டம் உன்ன சந்தைல நிறுத்துறப்ப இந்த அம்மாவோட அருமை புரியும்” என்றுவிட்டு அறையைவிட்டு போய்விட்டாள். மதுவை தூண்டிவிடுவது யார் என முதலில் கண்டுபிடித்துவிட்டு அடுத்து கவனித்துக் கொள்ளலாம் என்பது அவள் எண்ணம்.

இப்படி அறைக்கு உள்ளும் வெளியுமாக இவர்கள் நின்று பேசிக் கொண்டிருக்கும் போது பால்கனி அழைப்பில்தானே இருக்கிறான். அவனுக்கும் எல்லாம் காதில் விழுமே! பொறுக்க முடியாதவனாய்

“மதுமா ஒரு பத்து பதினஞ்சு நிமிஷம் சமாளிடா, அதுக்குள்ள நான் அங்க வந்துடுறேன்” என இவன் பரிதவிக்க,

“ப்ச் இல்லணா நீங்க இங்கல்லாம் வந்துடாதீங்க, எங்கம்மாவுக்கு உங்களெல்லாம் தெரியவே வேண்டாம், அப்றம் அம்மா உங்க மேல எந்த பழியையும் போடும், நானே ஸ்கூலுக்கு வந்துடுறேன்” என ஒருவாறு இறுகிப் போய் சொன்னவள்,

“ஆனா இன்னைக்கே என்னை வேற ஊர் ஸ்கூலுக்கு  கொண்டு போய் விட்டுடுங்களேண்ணா” எனும் போது அழுது கொண்டிருந்தாள். “இல்லனா நான் செத்துடுவேன், எல்லா வீட்லயும் அம்மா எப்படி இருக்காங்க, எனக்கு மட்டும் ஏன்ண்ணா இப்படி?”

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் பால்கனி என்ன செய்வானாம்? “வாய்லயே போடப் போறேன் இதுமாதிரி பேசினா, மதுமா ப்ளீஸ் அழாத நீ, அதெல்லாம் உனக்கு என்ன வேணுமோ எல்லாத்தையும் செய்து தர நான் இருக்கேன், தைரியமா இருக்கணும், இப்ப நீ உன் வீட்டவிட்டு கொஞ்ச தூரம் வரவும் அங்க ஒரு ஆட்டோ வர்ற போல அரேஞ்ச் செய்றேன், சாதாரணமா ஆட்டோ பிடிச்சு வர்றாப்ல அதுல ஏறி வந்துடு, உங்கம்மா உன் பின்னால வந்தா கூட சந்தேகம் வராது” என ஆறுதலும் அடுத்த திட்டமுமாக அவளை அப்போதைக்கு சமாதானப் படுத்திய பால்கனி,

அடுத்து ஆட்டோ ஏற்பாட்டுக்குத் தேவையானதை செய்யவென இணைப்பைத் துண்டித்தான்.

மதுவுக்கு உள்ளுக்குள் படபடவென பாய்ந்து கொண்டு வருகிறதுதான், ஆனால் எதையும் வெளிக் காட்டிக் கொள்ளால் வழக்கம் போல பள்ளிக்கு எப்படி கிளம்புவாளோ அப்படியே கிளம்பினாள். கூடுதலாக தனக்கு தேவைப்படும் சர்டிஃபிகேட்களை மட்டும் எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டாள். அதோடு அம்மாவின் புடவை ஒன்றையும் எடுத்து புத்தக பைக்குள் திணித்துக் கொண்டாள்.

இப்போதுமே அம்மாவை விட்டுப் போவதென நினைக்கும் போது அறுத்துக் கொண்டது போல் அழ அழ வலிக்கிறது. இந்த அம்மா நல்லவங்களா இருந்திருக்கலாமே! அடுத்து சாப்பாட்டுக்கென இவள் சமையலறைக்கு வரும் போது,

“ஆன் இதுக்கு மட்டும் நான் வேணும் என்ன?” என இவளது அம்மா இப்போதும் எகிற,

இவள் பதில் என எதையும் சொல்லும் முன் வெளியே கார் வந்து நிற்கும் சத்தம். அவ்வளவுதான் இப்போது அரள்வது மதுவின் முறை. அம்மா சாதாரணமாய் இருப்பது போல் இருந்து கொண்டு பலத்த பின்புலம் உள்ள எவனையும் வீட்டுக்கு வரச் சொல்லிவிட்டாளோ?

ஓடிப் போய் தன் குளியலறைக்குள் நுழைந்து கதவை உள்ளுக்குள் பூட்டிக் கொண்டாள்.

அவசர அவசரமாய் பால்கனிக்கு திரும்பவும் அழைத்தாள். “ஐயோ அண்ணா, இங்க வீட்டுக்கு எவனோ கார்ல வந்துருக்கான், பயமா இருக்கு” இவள் பதற,

“ப்ச் இதுக்குத்தான் சொன்னேன் நான் வரேன்னு, எனிவே பயந்துக்காத, நான் ரெண்டு தெரு தள்ளிதான் நின்னுட்டு இருக்கேன், இப்ப வந்துடுவேன் உங்க வீட்டுக்கு” அவனும் படபடக்க,

அடுத்த பக்கம்