துளித் தீ நீயாவாய் 21(3)

“நிஜமா சொல்றேன்ணா, இந்தக் கல்யாணம் நடக்கும், நடந்தேதான் ஆகும். எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்குன்னு சொல்லவே தெரியல, வேணிட்ட நான் பேசுறேண்ணா, சொல்ல வேண்டிய நேரத்துல சொல்ல வேண்டிய விதமா சொன்னா புரிஞ்சுப்பாங்க” எனத் துள்ளியவள்,

“ஆனா இதெல்லாம் எடுத்தேன் கவுத்தேன்னு செய்யக் கூடாது. இந்த வயசுல செய்ற கல்யாண வேலையெல்லாம், 10 வயசுல வண்டி ஓட்டுறது போலன்னு நீங்கதான சொன்னீங்க, அப்ப வேணி இப்போதைக்கு இதெல்லாம் யோசிக்காம இருக்கதுதான சரின்னு வரும்?” என சற்று நிதானப்பட்டு,

“எனக்கு என்ன படுதுன்னா, இந்த கல்யாண பேச்ச ரொம்பவே பொறுமையாவே ஆரம்பிப்போம்ன்ணா, மூனு நாலு வருஷமே போகட்டும், அதுக்கப்புறமும் உங்களுக்கு இந்த கல்யாணம் பிடிச்சிருந்துதுன்னா நம்ம SP சாரை கூட்டிட்டுப் போய் வேணி அம்மாப்பாட்ட பொண்ணு கேளுங்க, எல்லாமே நல்லா நடந்துடும்.

இத ஏன் சொல்றேன்னா, நீங்களும் இது இன்னைக்குள்ள மூடுக்கு எடுத்த முடிவுன்னு இருக்காது, வேணிக்கும் உங்க வகையில் இது எதோ உணர்ச்சி வேகத்துல எடுத்த முடிவு கிடையாதுன்னு புரியும், அதுக்குள்ள அவங்க காயம் ஆறவும் டைம் கிடச்சிருக்கும், இப்ப அவங்க சூடு பட்ட பூனை, அதில் கல்யாணம் காதல்னு எப்படி போய் நின்னீங்கன்னாலும் போன தடவ ஏமாந்த போல ஏமாந்துடக் கூடாதுன்ற கவனம், அதுவும் வெறித்தனமான கவனம்தான் இருக்குமே தவிர, உங்கட்ட இருந்து அவங்கள காப்பாத்திக்கணும்னுதான் யோசிப்பாங்களே தவிர கண்டிப்பா உங்க அன்பெல்லாம் புரிஞ்சுக்க முடியாது.

வேணிக்கு பவியக்கா SPசார் மேல அப்படி ஒரு மரியாதை இருக்கு, அவங்களே உங்களுக்கு வேணிய பொண்ணு கேட்கிறப்ப, உங்க பக்கத்த அப்பதான் வேணியால நல்லவிதமா பார்க்கவே முடியும்,

தன் பேரெண்ட்ஸை நிமிந்து பார்க்கிறதுக்குக் கூட தனக்கு தகுதியில்லன்ற போல வேணிக்குள்ள ஒரு மறுகல் இருக்கு, தான் செய்து வச்ச வேலைக்கு தான் வாழ்க்கைக்கும் அனாதையா நிக்றதுதான் நியாயம்னு கூட நினைக்காங்க.

இதுல SPசார் கூட உங்க பேக்ரவ்ண்டுக்கு நீங்க போய் பொண்ணு கேட்கப்ப, வேணி அம்மாப்பா கண்டிப்பா கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிடுவாங்க, அவங்களே சரின்னு சொல்றப்ப வேணிக்கு அதுவும் ஒரு காரணமா இருக்கும் உங்க கல்யாணம்ன்றது சரியான விஷயம்னு தோண,

வேணி அம்மாப்பா சரின்னு சொல்லாட்டி என்ன செய்யன்னுல்லாம் பயந்துடாதீங்க, வேணி சொல்ற சில விஷயத்தல்லாம் கேட்கிறப்ப அவங்க அம்மாப்பாக்கு பொதுவா பையன்தான் மேல, பொண்ணுனா எப்படியும் கொஞ்சம் கீழதான்னு எண்ணம் இருக்கும் போல, அது கூட வேணி வெளிய யாரோ அவங்கட்ட நீதான் முக்கியம்னு சொல்றப்ப அதை அன்புன்னு நினச்சிருக்க காரணமா இருந்திருக்கலாம்னு எனக்குத் தோணுது,

உலகத்துலயே அதிகமா பாவம் செஞ்ச நபர் நான்தான்னு இன்னைக்கு இருக்கிற வேணி மனநிலைக்கு இதெல்லாம் அவங்களுக்கு விஷயமா தெரியல, எது எப்படியோ இன்னைக்கு வேணி இப்படி வீட்ட விட்டு வந்துட்ட நிலைமையில் இந்த போல பேரென்ட்ஸ், ஒரு பெரிய இடத்து சம்பந்தம் வருதுன்னா  கல்யாணம் செய்து கொடுத்து அவங்க கௌரவத்த நிலை நிறுத்தணும்னுதான் யோசிப்பாங்க, மறுப்பெல்லாம் எதுவும் சொல்லிக்க மாட்டாங்க, அதனால நீங்க கான்ஃபிடென்டா இந்த ப்ளான எக்சிக்யூட் செய்யலாம்

அதே நேரம் நாம வேணிய அவங்க வீட்ல உள்ளவங்க மதிக்கிற மாதிரி சும்மா நச்சுன்னு செய்யணும்ணா இந்த கல்யாணத்த, நம்ம பொண்ணுக்காக இப்படி தேடி வந்து இவ்வளவு செய்றாங்கன்னு அவங்க வீட்ல உள்ளவங்க அசந்து போறது போல செய்யணும்,

கல்யாணம்னு மட்டுமில்ல அடுத்தும் எப்பவும் அவங்க கண் முன்னால நீங்க அப்படித்தான் வேணிய நடத்தணும், இல்லன்னா சும்மாவே பொண்ணவிட பையந்தான் மேலன்னு நினைக்கிறவங்க, வாழ்க்கைக்கும் வேணிய குத்தி காமிச்சுகிட்டேதான் இருப்பாங்க, இப்பன்னா நீங்க எப்படி நடத்துறீங்களோ அப்படித்தான் அவங்களும் வேணியப் பார்ப்பாங்க” என தன் பதினைந்து வயது மனதுக்கும் அவள் வயதுக்கு மீறி வாழ்க்கை திணித்துக் கொண்டிருக்கும் அறிவுக்குமாக தனக்குப் பட்டதையெல்லாம் கொட்டித் தீர்த்தாள் மது.

இதன் அத்தனை அடிநாதமும் வேணி மீதும் இவன் மீதும் மதுவுக்கு உள்ள அன்பல்லவா? வேணி நினைவாக அதுவரைக்கும் வருந்திப் போய் கிடந்த இவன் மனதுக்கு இது ஒரு வகையில் மயில் பீலி வருடல், மல்லிக் காட்டில் விழுந்த பனி மூடல்.

அதோடு வேணியும் மதுவும் எந்த அளவுக்குப் பேசிக் கொள்கிறார்கள், அவர்களுக்குள்ளான நட்பும், பரஸ்பர நம்பிக்கையும், அன்யோன்யமும் இவனுக்குப் புரிகிறது. பிடிக்கிறது. மேலும் இப்படியேதான் இவன் திட்டமும் என்றெல்லாம் இல்லையெனினும், மதுவுக்கும் இவனுக்கும் சில விஷயங்கள் ஒன்று போலவே தோன்றி இருக்கிறதுதானே! க்ராண்டா கல்யாணம் வச்சு வேணி அப்பா வாயடைக்கணும்ன்ற பாய்ண்டெல்லாம் பிள்ள என்னமா அனலைஸ் செய்துருக்கு!

“எங்க குட்டிதக்காளியே சொன்ன பிறகு அதுக்கு மேல அப்பீல்லாம் உண்டாங்களா? நீங்க சொன்னத அப்படியே செஞ்சுடுவோம் பெரியமனுஷி” என அவளை சீண்டியவாறு அவளுக்கு ஒத்து ஊதினான்.

“அதுக்காக இன்னும் மூனு வருஷம் வெயிட் பண்றதெல்லாம் என்னால நினச்சு கூட பார்க்க முடியாது, என் ஆசைய விடு, அதுவரைக்கும் வேணி இப்படி ஒரு வீட்ல வேலையாளா நிக்றது உனக்கு சரின்னா படுது? அதுவும் பவி அண்ணியும் அண்ணாவும் புதுசா கல்யாணம் ஆனவங்க வேற, அவங்களுக்கும் இது கஷ்டம்தானே!” என இவன் யதார்தத்தையும் பேச,

அதில் “ஆரம்பத்துல இத நான் யோசிக்கல, அன்னைக்கு நிலைல அடுத்து எங்க போகன்னு கூட தெரியலன்றப்ப, எனக்கு என்ன யோசிக்கணும் எதை யோசிக்கக் கூடாதுன்னே தெரியலைபோல. பவிக்கா வேற ரொம்ப சப்போர்டிவா நடந்துகிட்டாங்க, அதோட கூட இருந்துக்கிறியா வேலை தரேன்னதும் சரின்னு தலையாட்டி வச்சிருக்கேன்.

அடுத்த பக்கம்