துளித் தீ நீயாவாய் 21 (2)

“என்னையவே தங்கச்சின்னு சொல்லி ஒரு சின்ன பார்வை பேதம் கூட இல்லாம அப்படியே தங்கச்சியாவேதான் நடத்துறீங்கன்றதால உங்களால வேணிய உண்மையாவே மனைவியா நேசிக்க முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்குண்ணா, ஆனாலும் இது உங்களுக்கும் சரி வேணிக்கும் சரி வாழ்க்கைக்குமான முடிவு, ஒரு பெர்சன்ட் கூட ரிஸ்க் எடுக்க முடியாது. அதுவும் வேணிலாம் இன்னொரு அடிய தாங்கிக்கவே மாட்டாங்க!” என கெஞ்சலும் தவிப்புமாய் இறங்கியவள்,

“நீ ஒரு வகையில் விக்டிம்தான் மது, பிள்ளைங்க அம்மாவ நம்புறதும் கீழ்படியுறதும் எத்தனை இயற்கையான விஷயம், அவங்க கட்டாயப்படுத்துறப்ப மீறி முடிவெடுக்குற வயசும் கூட உனக்கு கிடையாது, ஆனா நான் பண்ணது பாவம், அதுவும் என் அம்மாப்பாட்டல்லாம் எத்தன எத்தனை பொய் சொல்லி ஏமாத்தி என்னையும் என் வீட்டையும் எவ்வளவு நாசம்பண்ணிருக்கேன்றாங்க,

அந்த அளவுக்கு என்னைவிட கூட அவங்கதான் மோசம்ன்ற உணர்வு இருக்கு அவங்களுக்கு, அந்த அளவு உடஞ்சு போய் இருக்கவங்க லைஃப்ல நீங்க கை வைக்கிறீங்கன்னா எவ்வளவு கவனமா இருக்கணும்னு புரியுதா?” என இவனுக்கு நிலையை விளக்க முற்பட்டாள்.

கேட்டிருந்த இவனுக்கோ ஆயாசமாக வந்தது. இவனிடம் எப்போதும் ஒரு நிமிர்வோடே இருக்கும் வேணிக்குள், ஒவ்வொன்றிலும் இவனது நோக்கம் உள்நோக்கம் என அணுவையும் கணுவையுமாய் பிரித்து மேய்ந்துவிடும் அவளுக்குள் இப்படி ஒரு துவள்தல் இருக்குமென இவன் யோசித்திருக்கவில்லை.

வலி, ஏமாற்றம், அனாதையுணர்வு எல்லாம் அவளுக்கிருக்கும் என இவன் யோசிப்பதுண்டுதான். அதிலெல்லாம் இவனால் போதுமானவனாக இருக்க முடியும் என இவனுக்கு அலாதி நம்பிக்கையும்தான். ஆனால் இதற்கு என்ன செய்ய முடியும் இவனால்? அம்மா தங்கை என எந்த பெண்ணோடும் வாழ்ந்தவன் இல்லை இவன், ஏன் குடும்பம் என்பது கூட இவனுக்கு அனுபவமில்லாத ஒன்று. இதில் ஒரு பெண்மனம் என்பது எப்படி இருக்கும்? அதுவும் வேணியின் நிலையில் அவள் உணர்வுகள் எப்படி இருக்கும் என இவனுக்கு என்ன புரியும்?

நடக்கக் கூடாத ஒன்று நடந்துவிட்டது, அடுத்து என்ன செய்ய? என முடிந்த விஷயத்தை தூக்கிப் போட்டுவிட்டு போக ஏன் இவளுக்குத் தெரியவில்லை என்றிருக்கிறது இவனுக்கு. ஏனெனில் இவன் வேணியின் கடந்த காலத்தைப் பார்க்கும் கோணம் அப்படி மட்டும்தான்.

“என்ன இவ? அப்றம் எதோ கடவுள் மன்னிச்சுட்டார், அதான் நிலா தர்றார், சூரியன் தர்றார்னுல்லாம் பேசினா, அவரே மன்னிச்சிட்ட ஒன்ன இவ மன்னிக்க மாட்டாளாமா? முதல்ல தன்னைத்தானே மன்னிக்கச் சொல்லு அவள” என இப்போது இவன் ஆதங்கப்பட,

உருகிப் போய் பேசிக் கொண்டிருந்த மது முகத்தில் சின்னதாய் புன்னகை. “ஆனாலும் அப்பப்ப நீங்களும் வேணியும் ஒரே போல யோசிக்கிறவங்கன்னு எனக்கு தோண வச்சுடுறீங்க” என வருகிறது அவளது கமென்ட்.

சில்லென ஒரு திரவச் சிதறல் இவனுக்குள் ஏற்பட்டாலும், “அடப்பாவமே எனக்கே தெரியாம எப்படா இது?” எனதான் சொல்லியது இவன் வாய். இவனை கிழித்து தொங்க விடுறதுதானே வேணியோட வேலை, எங்க இருக்காம் அந்த ஒத்த சிந்தனை?

“ஐய ஆனாலும் இந்த ட்ராமால்லாம் என்ட்ட வேண்டாம், எனக்கு ஹெல்ப் செய்யணும்ன்றதுல ஆரம்பிச்சு இன்னைக்கு என் மேல உண்மையாவே இவ்வளவு பாசம் வச்சுருக்கதுல இருந்து, உங்க பெர்சனல் இஷ்யூஷ் வரைக்கு என்ன முழுசா நம்பி பேசுறது வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் ஒரு போலவேதான யோசிக்கீங்க?” என இவன் சிந்தித்திராத ஒன்றை சுட்டிக் காட்டி இவனுக்குள் தேனூரச் செய்த மது,

“வேணியும் இதையே சொன்னாங்க, கடவுளே மன்னிச்சுட்ட ஒன்ன மன்னிக்காம இருக்க நான் யார், அதனால என்னை நான் மன்னிச்சுட்டேன்னு” அதான் ஒன்னு போல யோசிக்கிறீங்கன்னு சொன்னேன்” என விளக்க,

“ஆனா மன்னிப்புன்ற விஷயமே எங்க வருது? தப்பு செய்துட்டோம்னு உணர்றப்பதான? சரியா இருக்கவங்களுக்கு எதுக்கு மன்னிப்பு? இன்னைக்கு மன்னிப்புல இருக்கோம்ன்ற ஒன்னில் அவங்க நிம்மதியா இருக்காங்கன்னே வைங்க, நீங்க போய் அந்த தப்பு செய்துட்டோம்ன்ற அந்த உணர்வ திரும்ப குத்திவிட்டீங்கன்னா என்ன ஆகும்? அதைச் சொன்னேன் நான்” என்க,

“இந்த ஸ்டூடண்ட் ப்ரோக்ராம்ல கலந்துக்கிற டீச்சர்ஸ் எல்லாத்துக்கும் அப்பப்ப மீட்டிங் நடக்கும், அதில் பவியண்ணி ஒருதடவை பேசிய விஷயம் இது, ஒரு பத்து வயசு குழந்தை, ஒரு ஆர்வத்துல வீட்டுக்குத் தெரியாம டூவீலரை எடுத்துட்டுப் போய், என்னதான் வண்டி ஓட்ட முடிஞ்சாலும், அந்த வயசுக்கு எங்க, எப்படி, எதையெல்லாம் கவனிச்சு வண்டி ஓட்டணும்ன்ற ட்ராஃபிக் சென்ஸ் இருக்காதுல்ல, அதனால ஆக்சிடெண்ட் செய்து விழுந்து கிடக்கு,

அப்போ நீ பண்ணது தப்புதான? அம்மாப்பாவ ஏமாத்தினல்ல, சட்டத்த ஏமாத்தினல்ல, நாசமா போன்னு நாம விட்டுடணுமா? அல்லது அந்த குழந்தைய ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போய் ட்ரீட்மென்ட் செய்துட்டு, இது மட்டுமில்ல வீட்டுக்குத் தெரியாம செய்ற எந்த காரியமும் இப்படித்தான் கஷ்டத்துல வந்துவிடும்னு புரியுறாப்ல சொல்லித்தரணுமா? அதே போலதான் டீனேஜ்ல பிள்ளைங்க செய்ற பல அத்துமீறல்களும். அதை இதே வ்யூல பார்த்தோம்னா நம்மளால அவங்கள பெட்டரா புரிஞ்சுக்கவும் முடியும், அவங்களுக்கு மீனிங்ஃபுல்லா ஹெல்ப் பண்ணவும் முடியும்னாங்க.

எனக்கு வேணியோட அந்த சோகால்ட் லவ் இப்படி ஆர்வ மிகுதில வயசுக்கு முன்னமே டூ வீலர எடுத்துட்டு போய் ஆக்சிடெண்ட் செய்த விஷயமா, அதிலும் அந்த ஆக்சிடென்ட்ல கை கால்ன்னு எல்லாம் போய் நஞ்சு போய் கிடக்கிற நிலமையா மட்டும்தான் தெரியுது. அதனால அவளுக்கே அப்படி அந்த விஷயத்தை பார்க்க முடியலைனா கூட, நான் அவள அப்படி பார்க்க வைப்பேன்” என மூச்சோடு உயிரும் கலந்து வந்து விழுகிறது இவனது வார்த்தைகள்.

அழுத்தம், அத்தனை ஆதங்கம் முழுத் தீவிரம் அதில். இதெல்லாம் இவன்தான் யோசித்து பேசுகிறானா என இவனுக்கே தோன்றும்படி அப்படி ஒரு வேகம்.

ஒரு முழு நொடி மது எதுவும் சொல்லத் தெரியாமல் பேச்சற்று நின்று போய்விட்டாள். அவன் பேசிய விதத்தில்தான். அடுத்த நொடி பாய்ந்து வந்து அவனது இரு தோள்களையும் பற்றிக் கொண்டு குதித்துக் கொண்டிருந்தாள்.

அடுத்த பக்கம்