துளித் தீ நீயாவாய் 21

அடுத்து வந்த நாட்கள் வேணி, மது, பவித்ரா என மூவருக்கும் ஒவ்வொருவருக்குமே வெகு சுவாரஸ்யத்தையும் எதிர்காலம் குறித்த ஒரு இதமான நம்பிக்கையையும் உண்டு செய்து கொண்டு கழிந்தன. பால்கனிக்கோ இது  இரண்டு வகைக் காலம்.

வேணி மதுவிடம் பேசி இருந்தாளே அதில் மதுவுக்குள் அத்தனை மனமாற்றம். திரும்ப வாழ்க்கையை முதலில் இருந்து வாழ வாய்ப்பு கிடைத்தது போல் ஒரு உணர்வு, எல்லா எல்லாவற்றையும் சாதாரண பேச்சு, சின்ன சின்ன செயல் என்பவற்றைக் கூட உண்மையும், நியாயமும் நேர்த்தியுமாய் அவள் கவனமெடுத்து செயல்பட, ஒருவகையில் உற்சாக ஊற்றாக மாறிக்கொண்டிருந்தாள் அவள்.

கடைக்காரர் நமக்குத் தர வேண்டிய மீதித் தொகையில் கவனமின்றி சற்று அதிகமாக திருப்பித் தந்துவிட்ட போது, நாம் அதைக் கண்டு, அந்தத் தொகையை திருப்பிக் கொடுக்கிறோம் என்றால், அது வெகு சிறு செயல்தான் என்றாலும் ஒரு உற்சாகம் வருமே, அது போலவே உணர்வு வகைதான் இது. ஆனால் ஒவ்வொரு காரியத்திலும் அவள் இதை கடைபிடித்ததால் அது இடைவிடாமல் ஊறிப் பெருகியது.

தன் மீது தனக்கேயான நல்லுணர்வு என்பது எப்படி இருக்கும் என்பதை முதன் முதலாக அவள் சுகிப்பது இப்போதுதானே, உள்ளத்தில் வெள்ளை வெயில் அடிப்பது போல் ஒரு உணர்வு. தானே வெளிச்சமாகிப் போனது போல் ஒரு பரவசம்.

நேர்மையாய் காரியங்கள் செய்து அதனால் அவஸ்தைப்படும் போது கூட இப்படித்தான் கஷ்டப்படுவோம்னு தெரிஞ்சும் ஒழுங்கா நடந்துட்டோமே! என தன் மன உறுதி மேலான நம்பிக்கையும், தன் மீதேயான மரியாதையும் அவளுக்குள் வளர்ந்துகொண்டு வந்தது. இந்த தன்னம்பிக்கையும் மரியாதையும் எதிர்காலத்தை என்னால் எதிர்கொண்டுவிட முடியும்தான், சூழ்நிலை எப்படி இருந்தாலும் இப்ப போல நான் சந்தோஷமா இருந்துப்பேன்தான் போல என ஒரு கீற்றை அவளுக்குள் உண்டு செய்யத் துவங்கி இருந்தது.

இந்த அவளது அட்வென்சரை எல்லாம் பகிர்ந்து கொள்ள அவளுக்கு வேறு யாரிருக்கிறாராம்? ஆக பால்கனி, வேணி இரண்டு பேரிடமும் கொட்டித் தீர்த்துவிடுவதுதான்.

வேணிக்கு இதையெல்லாம் பவியிடம் போய் மதுவோட இன்றைய அட்வென்சர்னு லிஸ்ட் போட்டு கடை பரப்புவதில் அலாதி ஆனந்தம்.

வேணியைப் பொறுத்தவரை மது மீது ஆரம்பத்தில் இருந்தது இரக்கம், இப்போதோ ஒரு சின்னப் பெண் மீதான பாசமாக மாறி இருந்தது. அதிலும் மதுவுக்கு நல்லது செய்வான்னு கடவுள் இவள நம்பப் போய்தான மது வாழ்க்கையில் இவள கொண்டு வந்து  சேர்த்திருக்கார்? என இப்படி யோசிக்கும் போது மது இவளுக்கு இன்னுமே விஷேஷித்த செல்லக்குட்டிதான்.

ஆக அவ்வளவும் இரவு ப்ரவி வீடு திரும்பும் முன் பவியிடம் போய் ஒப்பிக்கப்படும். ஆம் முன்பு பவியிடம் மதுபற்றி பேச வேணிக்கு தயக்கம் இருந்தது. மதுவை எப்படித் தெரியும் என்ற கேள்வியை எதிர்கொள்ள தவித்துப் போய் மது பற்றி சொல்லி இருக்கவில்லைதானே!

இப்போதோ மனம் விட்டு மதுவிடம் பேசினாளே, அடுத்த காரியமாய் பவியிடம் போனவள் மதுவை எப்படித் தெரியும் என்பதைத் தவிர்த்து அன்றைய பேச்சு வரை எல்லாவற்றையும் சொல்லித் தீர்த்திருந்தாள். ஏனோ அன்றைய உணர்வு நிலைக்கு அது தேவைப்பட்டது.

அன்று மட்டுமல்ல அடுத்தும் அக்கறையாய் இவளுக்கு ஈடு கொடுத்து கேட்டுக் கொள்ளும் பவிதான் நியாயமாவும் இருக்கணும் அதே நேரம் bluntஆவும் இருந்திடக் கூடாது என எந்த சூழலில் எப்படி பேச வேண்டும், நடக்க வேண்டும் என ஒவ்வொன்றையும் முறைப்படுத்திச் சொல்லிவிடுவாள்.

மது விஷயம் இப்படி தொடர்ந்து கொண்டிருக்க, பால்கனிக்கோ இதமும் அதற்கு எதிருமாய் உணர்வுகளைக் கிளறிவிட்டுக் கொண்டிருந்தது நடப்பவை யாவுமே!

இத விஷயம் என்றால் இதுதான். மதுவிடம் வேணி பேசிக் கொண்டிருந்த போதே அங்கிருந்த பால்கனியை கவனித்துவிட்டாள் மது. அப்போதே வேணியிடம் பேசிக் கொண்டிருப்பது போல் இருந்து கொண்டே, தன் மொபைலில்

“அண்ணா நீங்க இதைக் கேட்டீங்கன்னு வேணிக்கு தெரிஞ்சா வாழ்நாளைக்கும் அவங்களுக்கு வலிக்கும், அவங்க கண்ல படாம கிளம்புங்க” என செய்தி அனுப்பி இவனை அங்கிருந்து அகற்றியவள்,

அடுத்து சில நாட்கள் கழித்து இவனை தனிமையில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த போது வந்து பிடி பிடியென பிடித்துவிட்டாள்.

“இதெல்லாம் தெரிஞ்சுதான் லவ் பண்றீங்களாண்ணா?”

“அந்த ரோஹன் மாதிரி ஏமாத்திற மாட்டீங்களே! கல்யாணம் பண்றதப் பத்தி சொல்லல, இன்னைக்கு இருக்க ஒரு இரக்க மூடுக்கு ஏதோ தியாகம் செய்றதா கல்யாணம் கூட செய்துடுவீங்க, அடுத்து வேணிட்ட பழகுறப்ப அருவருப்பா தோணிச்சுன்னா என்ன செய்வீங்க? அது அந்த ரோஹன் பண்ணத விட பெரிய துரோகமா இருக்குமே!

குத்தி காட்டினீங்கன்னோ சொல்லிக் காமிச்சிங்கன்னோ ஒரு டைம் இருந்தா கூட வேணிக்கு எப்படி இருக்கும்? ஏன் உங்க லைஃபும்தான் என்னாகும்? நிம்மதியாவா இருப்பீங்க?

இதெல்லாம் யோசிச்சுட்டீங்களா? எல்லாம் யோசிச்சு, உங்களால இந்த மேரேஜ்ல நீங்களும் சந்தோஷமா இருந்துகிட்டு வேணியையும் சந்தோஷமா வச்சுக்க முடியும்னு 100% உறுதியா தோணினா மட்டும் இந்த எண்ணத்த வளரவிடுங்க, இல்லனா இப்பவே வேற பொண்ணா பார்த்து கல்யாணம் செய்துட்டு சந்தோஷமா செட்டிலாகிடுங்க”

அழுகை வலி ஆதங்கம் என என்னெல்லாமோ சேர அவள் பேச, இவனது 15 வயது மதுவுக்கு இவனறிந்த வரை ஒரு விஷயத்தின் அடுத்த கோணத்தைப் பார்க்கத் தெரியாதே! ஆக வேணி மனம் திறந்து பேசியதற்கு பின் வந்த நாட்களில், வேணியிடம் பால்கனியை மணந்து கொண்டால் என்ன என மதுவே கேட்டிருக்கிறாள், அதற்கு வேணியின் விளக்கம் இந்த ரீதியில் இருந்திருக்கும், அதில் இவள் தன் பங்குக்கும் யோசித்து இவனிடம் பாய்கிறாள் என்பதுவரை இவனுக்குப் புரிய,

பதிலென எதுவும் சொல்லாமல் இவன் ஒரு பார்வை பார்த்தான் மதுவை. என்னைப் பார்க்க உனக்கு அப்படியாத் தோணுது? என்ற வகைப் பார்வை. அதிலோ அதற்குள்ளோ இவன் நிலை புரிந்தவளாய் உருகிப் போனாள் மது.

அடுத்த பக்கம்